தலபுராண வரலாற்று உண்மைகள்
குருவடி பணிந்து தொகுத்தது
மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD
www.knowingourroots.com
இராவணனைக் கொன்றதால் இராமருக்கு மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. முதலாவது பிரம்மஹத்தி. பிரம்மஹத்தி என்றால் பிராமணனைக் கொன்ற பாவம். இராவணன் விச்சிரவசு என்ற பிராமணரின் மைந்தன். புலஸ்திய முனிவரின் பேரன். இராமாயணத்திலேயே இராவணனுக்கு விபீடணன், கும்பகர்ணன் ஆகியோர் அறிவுரை சொல்லும் இடங்களில் அவனை " நீ புலஸ்தியரின் பேரன் ஆதலால் உனக்கு இது தகாது" என்று கூறுவதாகப் பல இடங்களில் வருகின்றது. ஆகவே பிராமணனாகிய இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி இராமனுக்கு வந்தது. இரண்டாவது வீரஹத்தி. மகாவீரனாகிய இராவணனைக் கொன்றதால் வந்த தோஷம் இது. மூன்றாவது சாயஹத்தி. சாயம் என்றால் காந்தி அல்லது பிரகாசம். இராவணன் சிவபக்தன். அவனுக்கு அந்த காந்தி இருந்தது. அவனைக் கொன்றதால் இராமருக்கு சாயஹத்தி பாவம் வந்தது.
இந்த மூன்று பாவங்களையும் போக்க இராமர் மூன்று சிவலிங்கங்களைத் தாபித்தார். முதலாவது நாம் எல்லோரும் அறிந்த இராமேஸ்வரத்தில் உள்ள இராமலிங்கம். அனுமார் பாணலிங்கம் கொண்டுவரப் பிந்தியதால் முகூர்த்தம் தப்புவதற்குள் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மணலினால் லிங்கம் பிடித்து வழிபட்டார் இராமன். இன்றும் இராமேஸ்வரத்தில் உள்ள மண்ணினாலான இலிங்கத்துக்கு நேரடியாக அபிஷேகம் செய்வது கிடையாது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியாகிய சாரதா தேவி அம்மையார் இராமேஸ்வரம் வந்தபொழுது அவரை கருவறை வரை அழைத்துச் சென்று இலிங்கத்தின் கவசம் அகற்றிய நிலையில் தரிசனம் செய்வித்தார்கள். அப்பொழுது அவர் மெய்மறந்து கூறிய வார்த்தைகள் "அம்மாடி! அன்னிக்குப் பிடுச்சு வச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கே" என்பதாகும்.
இராமர் இரண்டாவது சிவலிங்கஸ்தாபனம் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் செய்தார். இத்தலத்தில் வேதங்கள் இறைவனை உருவெடுத்து வந்து வழிபட்டன. இதன் பின்னர் இக்கோவிலின் நேர் வாசல் திருக்கதவு பூட்டியே கிடந்தது. பக்தர் வேறு வாயில் வழியாகச்சென்றே வழிபட்டு வந்தார்கள். இந்நிலையில்தான் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள் இக்கதவத்தை திறக்கப் பதிகம் பாடி திறப்பிக்க, சம்பந்தர் பதிகம் பாடி கதவை மூட வைத்தார். அன்றிலிருந்து இவ்வாயில் வழியாக மீண்டும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றார்கள்.
இராமர் மூன்றாவதாக சிவலிங்க ஸ்தாபனம் செய்த இடம் பட்டீஸ்வரம். காமதேனுவின் நான்கு மகள்மாரில் ஒன்றாகிய பட்டி வழிபட்ட தலம் இது. வெயிலில் நடந்து வந்து வழிபட்ட திருஞானசம்பந்தருக்கு சிவன் பந்தல் இடுவித்த தலம். நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பார் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார். அவரினதும் அவரது பத்தினியினதும் உருவச்சிலை அம்மன் சன்னிதிக்கு முன்னால் உள்ளது.
இராமருக்கு சிவதீட்சை கொடுத்து சிவலிங்க ஸ்தாபனத்துக்கும் சிவ வழிபாட்டுக்கும் அதிகாரியாக்கியது அகத்திய முனிவர். இதேபோல கிருஷ்ணருக்கு உபமன்னியு முனிவர் சிவதீட்சை கொடுத்த வரலாறு மகாபாரத்தில் உள்ளது. பெரியபுராணமும் இதை "யாதவன், துவரைக்கு இறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவன்" என்று உபமன்னியு முனிவரைக் கூறுகின்றது.
|