தமிழ்ப் புத்தாண்டு
குருவடி பணிந்து இ. லம்போதரன் MD
www.knowingourroots.com
சூரியன் பன்னிரு இராசிகளில் முதலாவதான மேட இராசியில் பிரவேசிக்கும் காலம் தற்போது ள்ள தமிழ் வருடப்பிறப்பு ஆகும். இது சித்திரை மாதத்தில் நடக்கும். இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசிக்கும் பிரவேசிக்கும் காலத்தை சங்கிராந்தி என்று கூறுவர். சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் சித்திரை மாதப்பிறப்பாகிய மேட சங்கிராந்தியே எமது தமிழ் புது வருடப்பிறப்பு ஆகும். இதையே இலங்கையில் உள்ள பௌத்தர்களும் பின்பற்றுகின்றார்கள். ஒவ்வொரு புது வருடமும் அதற்கு முந்தைய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கு அடுத்த நாளிலும், எந்த திதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது திதியிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும் எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 15 நாழிகை 31 விநாடிகள் கழித்தும் பிறக்கும்.
வட இந்தியாவிலும் தெலுங்கு மற்றும் கன்னட சம்பிரதாயத்திலும் அவர்கள் சந்திரனது சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்ட சாந்திரமான மாசங்களையே பிரமாணமாகக் கொள்வர். அவர்களுக்கு மாதம் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாதத்தினது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்தாகும். இதிலிருந்து அடுத்த மாதத்தின் வளர்பிறைப் பிரதமை வரை ஒரு மாத காலம் ஆகும். இதுவேதான் சில வேளைகளில் மகா சிவராத்திரி நாளை நிர்ணயிப்பது பற்றிய விவாதங்களுக்குக் காரணமாகின்றது. சாந்திரமானப்படி இவர்களுக்கு பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை அன்றே சித்திரை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது. அதையே யுகாதி என்று தெலுங்கு மற்றும் கன்னட புதுவருடமாக தெலுங்கர்களும், கன்னடர்களும் கொண்டாடுகிறார்கள்.
மலையாளத்தில் நம்மைப்போல சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளாகிய மேட சங்கிராந்தியையே சித்திரை மாதப்பிறப்பாக வைத்திருக்கின்றார்கள். ஆயினும் இவர்கள் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிங்க ராசியில் பிரவேசிக்கும் ஆவணிமுதல் நாளையே தமது மலையாள வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அம்மாதமே வருடத்தின் முதல் மாதமாகக் கொள்ளும் மரபு தமிழர்களிடையே இருந்தது என்று சில பழந்தமிழ் நூல்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது. இதுவே இப்பொழுதும் மலையாளத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதே போல பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாதமாகக்கொள்ளும் மரபும் வங்காளத்தில் காணப்படுகின்றது. ஹரே கிருஷ்ணா கோவில்களில் இந்த முறையிலான நாட்காட்டிகளே பின்பற்றப்படுகின்றன. எங்களுடைய சாந்திரமான அல்லது சூரியமான முறைப்படி கார்த்திகை மாதம் ஆரம்பமாவதுக்கு முன்னரே அவர்களது கார்த்திகை மாதம் ஆரம்பமாகி விடுகின்றது, இது கிருஷ்ணர் யசோதையின் தாயன்புக்கு அடங்கி உரலில் கட்டுண்ட மாதமாகும். இந்த மாதத்தை அவர்கள் தாமோதர மாதம் என்று கொண்டாடுவார்கள். தாமம் என்றால் கயிறு. தமிழில் தாம்புக் கயிறு என்று சொல்லும் வழமை உண்டல்லவா? உதரம் என்றால் வயிறு. வயிற்றிலே கயிறினால் கட்டுண்டபடியினால் கிருஷ்ணனுக்கு தாமோதரன் என்று பெயர்.
முற்காலத்தில் சூரியன் தனது சொந்த இராசியாகிய சிம்மத்தில் பிரவேசிக்கும் ஆவணி மாதத்தின் முதல் நாளை வருடத்தின் முதல் நாளாகத் தமிழர் கொண்டாடினர் என்ற குறிப்பு சில பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. .
சூரியன் பத்தாவது இராசியாகிய மகரத்தில் பிரவேசிக்கும் காலமாகிய மகர சங்கிராந்தியே தை மாதப்பிறப்பும் அத்துடன் கூடிய தைப்பொங்கலும் ஆகும். இதையே 2009 இல் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் வருடப்பிறப்பாகப் பிரகடனப்படுத்தியது.
வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை இராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுவர். ஆங்கில புதுவருடம் போலவே இதற்கும் எந்தவிதமான வானியல் கணித விஞ்ஞான அடிப்படையோ ஆதாரமோ அல்லது ஆகம நூல்களின் ஆதாரமோ இல்லை என்பது இங்கு நோக்கத்தக்கது. உண்மையில் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி நகருக்குத் திரும்பியது சித்திரை மாதத்து வளர்பிறை சஷ்டி நாள் என்றும் அதற்கு அடுத்த நாளான சப்தமியில் அவர் முடி சூடினார் என்றும் வான்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 127ம் சர்க்கம் கூறுகின்றது. இராமர் மீண்டும் நாடு திரும்பிய நாள்தான் புதுவருடப் பிறப்பு என்றால் இது நாம் புதுவருடம் கொண்டாடுகின்ற சித்திரை மாதத்தில்தான் வர வேண்டும்.
|