நாம் தமிழர்
குருவடி பணிந்து
இ.லம்போதரன் MD
www.knowingourroots.com
வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே
- பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம்-
தமிழில் இன்று எமக்குக்கிடைக்கும் நூலாவணங்களில் உள்ள எமது மிகப்பழைய அரங்கேற்றம் பற்றிய விவரணம் இது. இது தொலகாப்பியத்தில் அதன் சிறப்புப்பாயிரமாக உள்ளது. இது இன்றைய அணிந்துரை போல.
தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் முன்னிலையில் அறங்களும், வேதங்களும் கற்று முதிர்ந்த அதங்கோட்டாசான் என்னும் அந்தணர் தலைமையில் கூடிய அவையிலே இந்திரனால் செய்யப்பெற்றதாகக் கூறப்படும் ஐந்திரம் என்னும் வட நூல் இலக்கணநூலில் வல்லவரான தொல்காப்பியனால் அரங்கேற்றப்பெற்றது என்று இந்த சிறப்புப்பாயிரம் கூறுகின்றது. இந்தச் சிறப்புபாயிரம் தொல்காப்பியரின் சமகாலத்தில் வாழ்ந்த அவரின் சகமாணாக்கரான பனம்பாரனாரால் அவரது அரங்கேற்றம் கண்டபோது பாடி அளிக்கப்பட்ட சிறப்புப்பாயிரமாகும்.
ஒரு சிறப்புப்பாயிரம் எப்படி இருக்க வேண்டுமென்று வரையறை உள்ளது. இது பின்வரும் எட்டு விடயங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
1. ஆக்கியோனது பெயர்
2. ஆக்கியோனது அறிவு அல்லது குரு வழிப் பாரம்பரியம்
3. நூல் விளங்கும் நாடு
4. நூலின் பெயர்
5. நூலின் அமைப்பு அல்லது யாப்பு
6. நூலில் சொல்லப்படும் விடயம்
7. நூலைக். கேட்போர்
8. நூலின் பயன்பாடு
“ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே”
-நன்னூல் சூத்திரம் 47-
யார் யார் இவ்வாறு சிறப்புப் பாயிரங்களை அளிக்கலாம் என்பதற்குக்கூட வரையறைகள் உள்ளன. பின் வருவோர் இவ்வாறு பாயிரம் வழங்கலாமெனக் கூறப்படுகின்றது.
1. ஆக்கியோனது ஆசிரியன்.
2. ஆக்கியோனுடன் படித்தவன்.
3. ஆக்கியோனது மாணாக்கன்.
4. ஆக்கிய நூலுக்கு உரை எழுதும் உரைகாரன்.
இவற்றுள் முதல் மூவரும் ஆசிரியரின் சமகாலத்தவராக இருப்பர். உரைகாரன் ஆக்கியோனது சம காலத்தவனாகவோ அல்லது பிற்காலத்தவனாகவோ இருக்கலாம்.
“தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன்
தன மாணாக்கன் தகும் உரைகாரன் என்று
இன்னோர் பாயிரம் இயம்புதல் இயல்பே”
-நன்னூல் சூத்திரம் 51-
நூலாசிரியரே சிறப்புப்பாயிரம் செய்தல் தன்னைப்புகழ்தல் என்ற குற்றம் உடையதால் செயற்பாலதன்று. ஆனால் அவர் பொதுப்பாயிரம் அளிக்கலாம்.
“தோன்றா தோற்றித் துறை பல முடிப்பினும்
தான் தற்புகழ்தல் தகுதி அன்றே”
- நன்னூல் சூத்திரம் 52-
ஆனாலும் எவ்வெச் சந்தர்ப்பங்களில் ஒருவர் தன்னைப் புகழ்ந்துகொள்ளலாம் என்பதற்குக்கூட வரையறைகள் உள்ளன.
1. அரசியல் விடயங்களிலும்;- எமது இன்றைய தேர்தல் பிர்ச்சாரங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
2. தன்னுடைய ஆற்றல்களை அறியாதவர்களிடத்து தன்னை அறிமுகப்படுத்தலுக்கும்;- எமது இன்றைய சுய விபரக்கோவைக்கும் தொழில் சம்பந்தமான நேர்காணல்களுக்கும் ஒப்பானது.
3. ஒரு போட்டியில் அல்லது சபையில் வெற்றிவாகை சூடும்போதும்;-
4. தன்னை இன்னொருவர் பழித்துக்கூறிய காலையும்;-
ஒருவர் தன்னைப்புகழ்ந்து கூறுவது பொருந்தும்.
“மன்னனுடைய மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே”
-நன்னூல் சூத்திரம் 53-
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் இன்றும் போற்றத்தக்கனவாகவும், பிரயோகிக்கத்தக்கனவாகவும் விளங்கும் இந்த வழிமுறைகளையும், வரைமுறைகளையும் வகுப்பதற்கு இதற்கு முன்னான பல்லாயிரம் வருடங்களுக்கூடான மொழி, சமூக, பண்பாட்டு பின்னணியும் வளர்ச்சியும் எமது தமிழர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது நாமும் தமிழர் என்று உணர்ந்து பெருமைப்படுவதில் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது புரிகின்றது.
|