பஞ்சப் பிரளயங்கள் Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
Print

பஞ்சப் பிரளயங்கள்

-சங்க இலக்கியத்தில் இருந்து பாரதி பாடல் வரை-

குருவடி பணிந்து

இ. லம்போதரன் MD

www.knowingourroots.com

ஐந்து வகையான உலக அழிவுகளைப் பற்றி இந்து மதம் கூறுகின்றது. இந்த அழிவுகள் எமது பூமிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான அண்டத்தொகுதிகளுக்கும் பல்வேறுபட்ட காலங்களில் நடைபெறும் என்று இந்த நூல்கள் கூறுகின்றன.

1. நித்திய பிரளயம்; இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நடைபெறுவது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது. சதுர் என்றால் நான்கு. சத்தியயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று அடுத்தடுத்து வரும் நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். இவ்வாறான ஒரு சதுர்யுகத்தில் 43 இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் உள்ளன. ஆகவே 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒரு மன்வந்தரம் முப்பது கோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் ஆகும்.

              இப்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதிலே உள்ள எழுபத்தொரு சதுர்யுகங்களில் இருபத்தேழு சதுர்யுகங்கள் ஏற்கெனவே கழிந்துபோயின். தற்போது நடப்பது இருபத்தெட்டாவது சதுர் யுகமாகும். இந்த இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் முதல் மூன்று யுகங்களான சத்திய யுகம் 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களும், திரேதா யுகம் 12 இலட்சத்து தொண்ணூற்றாறாயிரம் வருடங்களும், துவாபர யுகம் 8 இலட்சத்து அறுபத்துநாலாயிரம் வருடங்களும் கழிந்து தற்போது நடக்கும் கலியுகம் பெப்ரவரி மாதம் 17ம் திகதி கிமு 3101 ம் வருடம் தொடங்கியது.

இந்த கலியுகம் மொத்தம் 4 இலட்சத்து முப்பதிரண்டாயிரம் வருடங்கள் கொண்டது. இதிலே வெறும் 5111 வருடங்களே இதுவரை கழிந்திருக்கின்றன. இந்த கலியுகம் முடிய இன்னமும் 4 இலட்சத்து இருபத்து ஆறாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பது வருடங்கள் உள்ளன. அப்போதும் உலக அழிவு நடைபெறாது. தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கி இருக்கும் அக்கலியுக முடிவில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும் என எமது இந்து சமயப் புராண நூல்கள் பகர்கின்றன. கல்கி மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். அத்துடன் கலியுகம் முடிந்து இருபத்து ஒன்பதாவது சதுர்யுகத்தின் முதற்பகுதியான சத்திய யுகம் என்ப்படும் கிருத யுகம் பிறக்கும். இதையே ரஷ்சிய புரட்சி பற்றிப் பாடிய பாரதியும் "கிருத யுகம் எழுக மாதோ" என்று பாடினான். இவ்வாறாக இன்னும் 43 சதுர்யுகங்கள் கழிந்த பின்னர்தான் பூலோகம் எனப்படும் எமது பால்வீதி அண்டத்தொகுதி முழுவதும் நீரில் அமிழும். இதுவே நித்திய பிரளயம் ஆகும். இப் பிரளய காலம் ஒரு கிருதயுக காலத்துக்கு அதாவது 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களுக்கு நிலைத்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் அடுத்த மன்வந்தரம் தொடங்க பூலோகம் இருப்புக்கு வரும்.   குறிப்பு;

சதுர்யுகம்

1. கிருதயுகம் என்னும் சத்திய யுகம் - 17, 28, 000 வருடங்கள்

2. திரேதாயுகம் - 12, 96, 000 வருடங்கள்

3. துவாபரயுகம் - 8, 64, 000 வருடங்கள்

4. கலியுகம் - 4, 32, 000 வருடங்கள்

மொத்தமாக ஒரு சதுர் யுகம் 43, 20, 000 ( நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்) வருடங்கள் கொண்டது.

மன்வந்தரம்

71 சதுர் யுகம் - ஒரு மன்வந்தரம் - 306, 720, 000 (முப்பதுகோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள்)கல்பம்

ஆயிரம் சதுர் யுகங்கள் - ஒரு கல்பம் - 4, 320, 000, 000 (நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடங்கள்)

2. நைமித்திக பிரளயம்; இது ஒவ்வொரு கல்ப கால முடிவிலும் நடைபெறும் அண்ட அழிவாகும். ஒரு கற்ப காலம் எனப்படுவது ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது. இது 432 கோடி வருடங்கள் கொண்டது. இதன்போது எமது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியுடன் அதற்கும் அப்பாலுள்ள புவர்லோகம் என்னும் அன்ட்றோ மீடா அண்டத்தொகுதியும் அதற்கும் அப்பால் இன்னமும் அண்டவியல் விஞ்ஞானத்தின் பார்வைக்கும் கணிப்புக்கும் உள்ளாகாமல் விளங்கும் சுவர்லோக அண்டத் தொகுதியுமாக மூன்று அண்டத்தொகுதிகளும் மொத்தமாக நீரில் அமிழும். இதையே பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் "பசும்பொன் உலகமும் மண்ணும் விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல" என்று குறிப்பிடுகின்றது. இப்பிரளய காலம் ஒரு கல்ப காலத்துக்கு நீடித்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் இவ்வுலகங்கள் இருப்புக்கு வரும்.

3. அவாந்தர பிரளயம்; மேற்குறிப்பிட்ட மூன்று அண்டத்தொகுதிகள் உள்ளிட்ட பிரகிருதி மாயா புவனங்கள் 164உம் ஓடுங்கும் காலம் அவாந்தர பிரளய காலமாகும். இது பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது. இவ்வாறே இது பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு நிலைத்திருப்பது. 

4. மத்திம பிரளயம்; முன் அவாந்தரப் பிரளயத்தில் ஒடுங்கிய புவனங்களோடு அவற்றின் பௌதிக விஞ்ஞான விதிகளுக்கும், காட்சிகளுக்கும், கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட அடுத்துள்ள இருபத்தேழு புவனங்களின் ஒடுக்கம் அவாந்தரப் பிரளயம் ஆகும்.  இது பல கோடானுகோடி வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வது. இவ்வாறே பல கோடானுகோடி வருடங்களுக்கு நிலைத்திருப்பது.

 5. மகா பிரளயம்; முன் ஒடுங்கிய புவனங்களோடு அதற்கும் அப்பாலாயுள்ள முப்பத்தொரு புவனங்களும் ஒடுங்குகின்ற, எமது வார்த்தைகளுக்கும் கருத்துக்கும் கணிப்புக்கும் எட்டாத பிரளயம் ஆகும். இந்த மகாபிரளயத்தை நடாத்துபவரே மகாசங்கார மூர்த்தியாகிய பரசிவன். உலகங்கள் யாவும் அவற்றின் மூலமாகிய மாயையிலே ஒடுங்க, மாயை சத்தியிலே ஒடுங்க, சத்தியும் சிவத்தில் ஒடுங்கும் காலம் இந்த மகாசங்காரகாலமாகும். 

 இந்த ஐந்து விதமான அண்டப்பேரழிவுகளை பஞ்சப் பிரளயம் என்று கூறுவர். இந்த ஐந்து வகை பிரளயங்களிலும் அழிவில்லாமல் நிலைத்திருப்பவன் நஞ்சைக் கண்டத்திலே கொண்ட நெற்றிக்கண்கடவுள் என்று இப்பாடல் கூறுகின்றது.

பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி

நஞ்சு பொதிமிடற்றான் நயனத் தழல்விழியான்

                                                         - பட்டினத்தார் பாடல்-

 

Last Updated on Wednesday, 20 June 2012 14:34