எமது புத்தாண்டு Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
Print

எமது புத்தாண்டு எப்போது?

குருவடி பணிந்து

இ. லம்போதரன் MD

www.knowingourroots.com 

                    எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள காலக்கணிப்புகளில் (Calenders) பழைமையானது சப்தரிஷி சகாப்தம் ஆகும். வானநூல் குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது இந்த சகாப்தம் இற்றைக்கு 10,059 வருடங்களுக்கு முன்னர் கி.மு.8516 இல் தொடங்கியதாகத் தெரிகிறது. இந்தக் கணிப்புமுறை நட்சத்திரங்களையும், சூரியனுடைய செல்கதியையும் அடிப்படையாகக் கொண்டது. தற்போது பூமத்திய ரேகைக்கு சூரியன் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி உச்சம் கொடுத்துக் கடக்கிறது என்பது நாம் அறிந்ததே. வானசாத்திர ரீதியில் சூரியன் துலா இராசியில் பிரவேசிக்கிறது. ஆனால் பெப்ரவரி மாதம் 21ம் திகதிதான் சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறது. ஆனால் சப்தரிஷி காலக்கணக்கு தொடங்கியபோது இந்த இரண்டு நிகழ்வுகளும் அதாவது சூரியனது கும்ப ராசிப்பிரவேசம், பூமத்தியரேகைக் கடப்பு ஆகிய இரண்டும் ஒன்றாக நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தன. விளங்குவதற்கு சிரமமாக இருந்தால் வாசித்து விட்டு சற்று ஆறுதலாக இருந்து அசை போட்டுப் பாருங்கள்: விளங்கும். இந்தக்கணிப்பின் படி சப்தரிஷி சகாப்த காலக்கணக்கு கி.மு. 8516 நவம்பர் மாதம் 21 இல் தொடங்கியிருக்கிறது. இதுவே அக்காலத்திய வருடப்பிறப்பாக இருந்தது. இதற்கு முந்தைய காலக்கணிப்புகளைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.

 இதன் பின்னர் இற்றைக்கு அண்ணளவாக ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் விசுவாமித்திரர் அக்காலத்திய வானசாத்திர வல்லுனர்களையும் அறிஞர்களையும் கூட்டி ஆராய்ந்து தை மாதத்தில் வருடப்பிறப்பு தொடங்குவதாகக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டதாக வியாசர் மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

              இதன் பின்னர் கர்க மஹரிஷி என்பவர் வசந்த காலத்தில் சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் காலமாகிய சித்திரை மாதத்தை வருடப்பிறப்பாக ஏற்படுத்தினார். இதையே பின்னால் வந்த ஆரியபட்டர், வராஹமிஹிரர் போன்ற கணித வானியல் சாத்திர வல்லுனர்களும் ஏற்றுப்பின்பற்றி வந்துள்ளார்கள். இதுவே இன்று வரை நடைமுறையில் உள்ளது. அடிப்படைகள் ஒன்றாக இருந்தபோதிலும் காலத்துக்குக் காலம் வானியல் அறிஞர்களான மேதைகள் இதில் சில நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்தினார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.

          தற்போதுள்ள இந்து சமய வருடங்களுக்கு அறுபதாண்டு வட்டம் உள்ளது நாம் அறிந்ததே. இதேபோல சப்தரிஷி சகாப்தத்தில் நூற்றாண்டு வட்டம் வழமையில் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அசுவினி தொடக்கம் ரேவதி வரை இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயராலும் 2700 ஆண்டுகள் கொண்ட இருபத்தேழு நூற்றாண்டு வட்டங்கள் இருக்கின்றன. இதன் பின்னர் அடுத்த இருபத்தேழு நூற்றாண்டுகளின் வட்டம் மீண்டும் அசுவினி நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பமாகும்.

            இப்போது நடப்பது சப்தரிஷி சகாப்தத்தின் படி 10,062ம் ஆண்டு ஆகும். இது நான்காவது வட்டம். இதில் உள்ள புனர்பூச நட்சத்திர நூற்றாண்டின் எண்பத்து ஐந்தாம் ஆண்டுதான் எமது இன்றைய கி.பி. 2012ம் ஆண்டு.     

இந்த ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஐந்தாண்டுகளைக்கொண்ட இருபது சிறு கால வட்டங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு ஐந்தாண்டு சிறு வட்டத்தின் தொடக்க ஆண்டு சம்வத்சரம் என்று தொடங்கும். பின்னாளில் சம்வத்சரம் என்ற பெயரே ஆண்டு என்னும் சொல்லைப் பொதுவாகக் குறிப்பதாக ஆகிவிட்டது. சைவசமயக் கிரியைகளில் சங்கல்பம் செய்யும்போது "நாம சம்வத்சரே" என்று தொடங்குவதைக் கவனியுங்கள்.  (தொடரும்)

உசாத்துணை- www.treasurehouseofagathiyar.net by

Dr.S.Jeyabharathi of Malaysia

 

 

Last Updated on Wednesday, 20 June 2012 14:21