வாக்கு
குருவடி பணிந்து
இ. லம்போதரன் MD
www.knowingourroots.com
எழுத்துக்கள் பிறக்கும் வகையைச் சொல்லும். தொல்காப்பியம், எழுத்துகளை வெறும் வரி வடிவமாகப் பார்க்காமல், நாத அல்லது ஒலி வடிவமாகவே பார்த்து, சத்தம் பிறக்கும் வகைகளையும், இடங்களையும் வைத்து விளக்குவது மொழியியல் இன்று வரை கண்டிராத புதுமை. இதன்படி பிறக்கும் நாத வடிவான எழுத்துகள் தமிழுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியவை. எழுத்துக்களின் வரி வடிவங்கள் அப்படியன்று.
இதனால்தான் வள்ளுவரின் குறள்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்று தொடங்குகின்றது. இங்கு அகரம் தமிழின் வரிவடிவான அகரம் அன்று. உலக மொழிகளுக்கெல்லாம் பொதுவான, மொழிக்கும் அதீதமான அப்பாற்பட்ட வாக்குக்கும், ஒலிக்கும் பொதுவான, என்றும் மாற்றமடையாத, நாத வடிவான அகரமே ஆகும்.
உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யான
–தொல்காப்பியம் 83ம் சூத்திரம்–
இது எழுத்துக்கள் பிறக்கும் இடங்களாக உடலின் எட்டு அங்கங்களைக் கூறுகின்றது. இது நாம் பேசும் பேச்சின் பிறப்பையும், இயலையும் பற்றிய இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் படியான உண்மையுமாகும். இதன்படி எழுத்தின் பிறப்பியலைப் பின்வருமாறு விளக்கலாம்.
- உற்பத்தி (Originator):- இது தலையில் உள்ள மூளையில் நடைபெறுகின்றது. மூளையிலே பக்கவாதம் (Stroke) வந்தால் பேச்சு பாதிக்கப்படுகின்றது. மூளையிலே ஒரு பகுதி பாதிப்பட்டால் மற்றவர்கள் பேசுவது புரியும் ஆனால் தனக்கு வார்த்தைகள் வராது. இதை மருத்துவத்தில் பேச்சாடல் முடக்கம் (Expressive Dysphasia) என்பார்கள். இன்னொரு பகுதி பாதிக்கப்பட்டால் வார்த்தைகள் வரும் ஆனால் மற்றவர்களின் வார்த்தையாடல் புரியாது. இதை பேச்சுவாங்கல் முடக்கம் (Receptive Dysphasia) என்று கூறுவர். இதைவிட தெற்று வாய் (Stammering), எழுத்துப் பிறழ்வு (Dyslexia)போன்ற நூற்றுக்கணக்கான நுண்ணிய குறைபாடுகளும் பாதிப்புகளும் உள்ளன.
- உருவாக்கம் (Generator):- மூளையில் உருவான பேச்சை நாதவடிவில் உந்தி என்னும் வயிற்றுத்தசைகள் முதல் நெஞ்சில் உள்ள பழுவிடைத்தசைகள் ஈறாக உள்ள சுவாசத்தசைகளே உருவாக்குகின்றன. தசைச்சோர்வு (Myasthenia Gravis) போன்ற நோய்களினால் சுவாசத்தசைகள் பாதிக்கப்பட்டால் பேச்சும் பாதிக்கப்படுகின்றது. இப்போதுள்ள உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங்ஸ் Motor Neuron Disease என்னும் இவ்விதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரே. உடல் முழுவதும் முடங்கி சக்கர நாற்காலியில் நடமாடும் அவருக்கு வார்த்தையாடல் முடியாது. கணணி வடிவமைக்கப்பட்ட கருவியினால் எழுதுகிறார்; கருத்துகளை பரிமாறுகிறார்; விஞ்ஞான வகுப்புகளும், கருத்தரங்குகளும்கூட நடத்துகிறார்.
- அதிர்வாக்கம் (Vibratos) :- இது மிடற்றில் உள்ள குரல் வளைப்பெட்டியில் நடைபெறுகின்றது. குரல்வளைப்பெட்டியில் புற்றுநோய்க்கட்டிகள் அல்லது வேறு பாதிப்புகள் வந்தால் குரல் பாதிக்கப்படுகின்றது. இவ்வளவு ஏன்; சாதாரணமாக தடிமன் காய்ச்சலுடன் வருகின்ற குரல்வளை அழற்சிக்கே (Laryngitis) எமது குரல் போய்விடுகிறதே.
- இசைவாக்கம் (Modulator):- குரலின் ஏற்ற, இறக்கங்களை உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கேற்ப ஆக்கித்தரும் இச்செயற்பாடு குரல் நாண்களினாலும் அவைகளை இழுத்து அசைக்கும் தசைகளினாலும் நடைபெறுகின்றது. குரல் நாண்களின் செயலிழப்பு (Vocal Cord Paralysis) பேச்சைப்பாதிக்கின்றது. இது சிலருக்கு கழுத்தின் கணையச்சுரப்பி அறுவைச்சிகிச்சையின்போது நரம்பொன்று அறுபடுவதாலும் (Vagus nerve damage) உண்டாகலாம்.
- பரிவாக்கம் (Resonator) :- இவ்வாறு இசைவாக்கப்படும் எழுத்தின் பரிவை செய்வது எமது மூக்குடன் தொடர்புள்ள காற்றறைகளாகும் (Four pairs of Para nasal sinuses – Frontal, Maxillary, Sphenoid and Ethmoidal). மூக்கடைப்பு, பீனிசம் போன்ற சாதாரண வருத்தங்களும் எமது பேச்சைப்பாதிக்கின்றன. மூக்கு அல்லது அதனுடன் தொடர்பான காற்றறைகளில் ஏற்படும் கட்டிகள் புற்று நோய்கள் போன்றவையும் இவ்வாறே எமது பேச்சைப் பாதிக்கின்றன.
- வெளியாக்கம் (Articulator):- இவ்வாறு மூளையில் உற்பத்தியாகி, உந்தியிலும், நெஞ்சிலும் உருவாகி, மிடற்றில் அதிரவாக்கமடைந்து, குரல்நாண்களினால் இசைவாக்கப்பட்டு, மூக்கினுடைய என்புக்காற்றறைகளில் பரிவாக்கமடைந்து, ஈற்றில் வெளியாக்கப்படுவது பல், உதடு, நா, அண்ணம் ஆகியவற்றின் உதவியினாலாகும். அண்ணப்பிளவு அல்லது உதட்டுப்பிளவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் பேச்சு பாதிக்கப்படுகின்றது. “பல்லுப்போனால் சொல்லுப் போச்சு” என்ற பழமொழியையும் இங்கு நோக்கலாம்.
இவற்றில் ஏதாவது ஒரு அங்கம் பாதிக்கப்பட்டாலும் அது எமது பேச்சைப் பாதிக்கின்றது என்பது மருத்துவ உண்மை. எவ்வளவு அற்புதமான ஒருங்கிணைந்த விஞ்ஞான, மருத்துவ, மொழியியல், பேச்சியல் உண்மைகளை ஒரு சில வரிகளில் இவ்வாறு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கின்றார்கள்.
இவ்வாறான உந்தி முதலாக உதடு ஈறாக எட்டு அங்கங்களினூடாக வருகின்ற எமது பேச்சின் பிறப்பையே எழுத்தின் பிறப்பியல் என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து எழுத்து என்பது ஒலி அல்லது நாத வடிவான பேச்சையே குறிக்கின்றது என்பது தெளிவாகின்றது. எழுத்து வரி வடிவங்கள் மொழிக்கு மொழி மாறுபடுகின்றது. ஏன் ஒரே மொழியிலேயே காலத்துக்குக் காலம் ஒலியின் வரி வடிவம் மாற்றமடைந்து வருவது பழைய கல்வெட்டு எழுத்துக்களையும், ஏட்டு எழுத்துக்களையும் பார்த்தால் புரிகின்றது. ஆனால் எழுத்தின் ஒலி அல்லது நாத வடிவம் என்றுமே மாறாதது; அழிவில்லாதது. பேச்சுக்கு மூலமான நாத வடிவங்களில் முதலானது ‘அ’ என்னும் அகர நாத வடிவம். இதை ‘அகரத்திற்குத் தலைமை விகாரத்தானன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும்‘ என்று பரிமேலழகர் தனது உரையிலே கூறுகின்றார்.
excellent