சிவலிங்கம் என்பது ஆண்குறி அல்ல

சிவலிங்கம் என்பது ஆண்குறியா?

சந்த்ரு ராஜமூர்த்தி

 

பொது யுகத்துக்கு முன்னர் 3300 தொடக்கம் 1300 வரை நிலவிய சிந்துவெளி நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகளில்  சனன அங்கத்தை ஒத்த இலிங்க வடிவங்கள் பல வழிபாட்டுச் சின்னங்களாக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாலியலையும் அதனுடன் தொடர்பான சனன உறுப்புகளான இலிங்கம் யோனி ஆகியவற்றையும் இழிவாகக் கருதும் கூறும் வழமை தோன்றியது மிகவும் பிற்காலத்திலேயே. இது முகலாய ஆங்கில விக்டோரிய கலாச்சாரங்களின் தாக்கம். இதனால் சிவலிங்கம் என்பது ஆண்குறி வடிவமாகும் எனும் இழிவு படுத்தும் வாதமும் அவ்வாறு அல்ல என்னும் எதிர்வாதமும் எழுந்தன. இவ்வாறான வாதப் பிரதிவாதங்களில் ஒன்றை நாம் அன்பர் சந்த்ரு ராஜமூர்த்தி அவர்கள் இக் கட்டுரையில் அழகாகத் தந்துள்ளார், அதை இப்போது பார்ப்போம்.

– இ. லம்போதரன், கனடா சைவ சித்தாந்த பீடம்.

 

சிவலிங்கம் என்பது ஆண்குறியை பிரதிபலிக்கும் ஒரு சின்னம் என்ற கருத்து பலகாலமாக பரவலாக உள்ளத.பல வரலாற்று ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஏன் சில ஆன்மிகவாதிகள் கூட இந்த கருத்தை ஆமோதித்துள்ளனர். இதில் இம்மியளவாவது உண்மை உள்ளதா என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

முதலில்,”லிங்கம்” என்ற சொல்லின் பொருளை ஆராய்வோம்.”லிங்கம்” என்னும் சொல்லிற்கு சின்னம், அடையாளம் மற்றும் காட்டி என்று பல பொருள்கள் உண்டு.

“லிங்யதே ஞாயதே அனேன”

குறிப்பாக, இலக்கண கர்த்தாக்களும் மீமாம்சகர்களும் “லிங்க” என்ற சொல்லை “சின்னம்” என்ற அர்த்தத்தில்தான் வெகுவாகப் பிரயோகித்துள்ளனர். பெரும்பான்மையான வடமொழி அகராதி ஆசிரியர்கள் ஆண்குறியைக் குறிப்பதற்கு வேறுபல சொற்களையே கையாண்டுள்ளனர். அமரசிம்ஹன் இயற்றிய அமரகோசம் (நாமலிங்கானுசாசனம்)என்னும் புகழ்மிக்க, மிகப் பழமைவாய்ந்த வடமொழி நிகண்டில், நாணார்த்த வர்க்கம் உரைக்கும் பகுதியில், மனிதனின் எந்த ஒரு உடல் உறுப்பையும் குறிப்பதற்கு லிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், இது வெறும் ஆண்குறியை மட்டும் குறிக்கும் சொல் அல்ல.

இனி லிங்கம் என்றல் என்ன என்பதற்கு வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் மற்றும் இதர சாஸ்திரங்கள் கூறும் விளக்கங்களைப் பார்க்க வேண்டும்.

வேதங்கள் லிங்க வழிபாட்டை ஆண்குறி வழிபாடு என்று இழித்துக்கூறி கடுமையாக கண்டிக்கிறது என்ற ஒரு கருத்து பரவலாக இருந்து வருகிறது. இருக்கு வேதத்தில் “சிச்சினதேவ” என்ற ஒரு கூட்டத்தை பற்றி குறிப்பு வருகிறது. இந்த “சிச்சினதேவ” என்பவர்கள் வேதநெறிக்கு புறம்பானவர்கள் ஆதலால் வைதீக சடங்குகளிலிருந்து அவர்கள் ஒதுக்கப்படவேண்டும் என்றும் அவர்களை இந்திரன் அழித்துவிடவேண்டும் என்றும் இருக்கு வேதத்தில் வாக்கியங்கள் உள்ளன.

 …சசர்தாத் ஆர்யோ விஷ்ணோநஸ்ய ஜந்தொர் ம சிச்ன தேவ அபி குர்ரிதம் ந-

– ரிக் வேதம் – 7.21.3.5

இந்த “சிச்ன தேவ” என்னும் சொல்லை சில ஆராய்ச்சியாளர்கள் “ஆண்குறியை தேவனாக/தெய்வமாக வழிபடும் கூட்டம்“ என்று அர்த்தம் செய்து கொண்டு, இந்தச் சொல் இலிங்கத்தை வழிபடுபவர்களைக் குறிக்கிறது என்று வாதிடுகிறார்கள்.

யாஸ்கர் “சிச்னதேவ” என்ற பதத்திற்கு கற்புநெறி இல்லாதவர்கள் என்றே அர்த்தத்தைத் தருகிறார்.

சிச்ன தேவ- அப்ரஹ்மசர்ய: இதி அர்த்த:

சாயனர் சிச்ன தேவ என்பது ஆண்குறியை கொண்டு காம விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களைக் குறிக்கும் என்று தமது பாஷ்யத்தில் (உரையில்) விளக்கியுள்ளார்.

-சிஸ்நேந தீவ்யந்தி க்ரீடந்தி இதி சிச்ன தேவா:

நிருக்தத்திற்கு உரை செய்த துர்காச்சாரியார், சிச்ன தேவ என்பது வேத அனுட்டானங்களை கைவிட்டு, சதா விலைமாதர்களோடு காமக்கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் குறிக்கும் என்கிறார்.

சிஸ்நேந நித்யம் ஏவ ப்ரகீர்ணபி:ஸ்த்ரீபி சாகம் க்ரீடந்த:

ஆஸதே சிரௌதானி கர்மானி உத்ஸ்ருஜ்ய.

ஆதலால், சிச்சின தேவ என்ற சொல் இலிங்க வழிபாடு செய்ப்பவர்களை குறிக்கும் சொல் அல்ல.

மாறாக வேதத்தில் இலிங்கம் அனைத்திற்கும் ஆதாரமான பரம்பொருளாக போற்றப்படுகிறது. யஜுர் வேதத்தின் தைத்திரீய ஆரண்யகத்தில்:

பவாய நம:// பவலிங்காய நம://
– உலக உற்பத்திக்கு காரணமான லிங்கத்திற்கு நமஸ்காரம்.

சர்வாய நம:// சர்வலிங்காய நம://
– ப்ரளயகாலத்தில் பிரபஞ்சம் ஒடுங்கும் சம்ஹாரத்திற்கு காரணமான லிங்கத்திற்கு நமஸ்காரம்.

என்ற வாக்கியங்கள் லிங்கத்தில் அணைத்து சிருஷ்டியும் தோன்றி இறுதியில் ஒடுங்குகிறது என்கிறது.மேலும், சிவலிங்கம் என்பது அனற்பிழம்பாக ஈசன் தோன்றிய வடிவத்தையே குறிக்கிறது ,ஆண்குறியை அல்ல என்று வேதம் தெளிவு படுத்துகின்றது:

ஜ்வலாய நம://ஜ்வலிங்காய நம://
அக்கினிச் சுவாலையின் வடிவாக விளங்கும் இலிங்கத்திற்கு நமஸ்காரம்

எல்லா உயிர்களின் இதயத்தில் உயிரின் உயிராக ஆத்மாவினுள் லிங்கமாக ஈசன் உறைகிறான் என்றும் வேதம் உரைக்கிறது-
ஆத்மாய நம: / ஆத்மலிங்காய நம: /

அதர்வண வேதம் சிவலிங்கத்தை அனைத்து புவனங்களையும், படைப்புகளையும், உயிரினங்களையும் தாங்கி நிற்கும் தம்பமாக (தூணாக) போற்றுகிறது. எல்லா தேவர்களும் நான்கு வேதங்களும் தம்பமாகிய இந்த லிங்கத்தில் அடக்கம். அமரத்தன்மையும், மரணமும், காலமும் தம்பத்துள் அடக்கம். பிரம்மன் முதலிய தேவர்களைப் படைத்து அவர்களுக்கு உரிய கடமைகளை நிர்ணயித்தது அந்த ஸ்தம்பவடிவில் நிற்கும் பரமபுருடனே. சூரிய சந்திரர்களே அதன் கண்கள்.

யஸ்மின் பூமிர் அந்தரிக்ஷம் தியூர் யஸ்மின் அதி ஆஹிதா
யத்ராக்னிஸ் சந்த்ரமா ஸூர்யோ வாடஸ் திஷ்டந்தி ஆர்பிதா:

ஸ்கம்பம் தம் ப்ரூஹி கடம: ஸ்விட் ஏவ ச://

அதர்வண வேதம் – X:7:12

யஸ்ய த்ரயஸ்த்ரிம்சத் தேவா அங்கே சர்வே ஸமாஹிதா:/
ஸ்கம்பம் தம் ப்ரூஹி கடம: ஸ்விட் ஏவ ச://

அதர்வண வேதம் – X:7:13

 

இனி, ஆகமங்கள் லிங்கத்தின் தாத்பர்யத்தை பற்றி என்ன கூறுகிறது ஏன்று பார்ப்போம்.

“லிங்கம்” என்ற சொல்லின் பொருளை அஜிதாகமம் விளக்குகிறது:

லயம் கச்சந்தி பூதாநி ஸம்ஹாரே நிகிலானி ச/
நிர்கச்சந்தி யதஸ்சாபி லிங்கோக்திஸ் தென ஹேதுனா//

பிரளய காலத்தில் அணைத்து உயிர்களும் அதனிடம் லயம் அடைந்து (ஒடுங்கி), சிருஷ்டியின் தொடக்கத்தில் அதனின்று தோன்றுவதால் அது “லிங்கம்” .

ஏகமாய், எல்லாவற்றிற்கும் மேலானதாய், குணங்களும் அடையாளங்களும் உருவமும் அற்றனவாய் விளங்கும் நிஷ்களமான பரசிவத்திலிருந்து ஆயிரத்தில் ஒரு கூறாய் பராசக்தி தோன்றியது. பராசக்தியிலிருந்து ஆதி சக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தியும், இச்சாசக்தியிலிருந்து ஞானசக்தியும், ஞானசக்தியிலிருந்து கிரியாசக்தியும் தோன்றின. இச்சக்திகளிலிருந்து, யோகிகள்,  ஞானிகள் மற்றும் கிரியாவாதிகள் தன்னை தியானித்தும் பூசித்தும் உய்யும் பொருட்டு பரசிவம் தனது அம்சங்களான சிவ சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்துரு சாதாக்கியம் மற்றும் கர்ம சாதாக்கியம் என்னும் பஞ்சசாதாக்கியங்களை வெளிப்படுத்துகிறது.

யோகிநாம் யதினாம் ஞானிநாம் மந்த்ரினாம் த்யானபூஜா நிமித்தாய நிஷ்களம் சகளம் பவேத் 

– வாதுளாகமம் – தத்வபேத படலம்,

இவற்றில் ஐந்தாவது சாதாக்கியமான கர்ம சாதாக்யமே லிங்க வடிவம்.

லிங்கப்பீடப்ரகாரென கர்மசாதாக்யலக்ஷணம் /
நாதம் லிங்கமிதி ஞேயம் பிந்துபீடமுதாஹ்ருதம்//
நாதபிந்துயுதம் ரூபம் லிங்காகாரமிதி ஸ்ம்ருதம்/
சத்வாரி கர்த்ருரூபாணி கேவலம் நாதமீரிதம் //
லிங்கம் சிவமிதி ஞேயம் பீடம் சக்திருடஹ்ருத/
லிங்கே து ஜாயதே சர்வம் ஜகத்ஸ்தாவர ஜங்கமம்/

கர்மோதயே ச ஸ்ருஷ்டிஸ்யாத் கர்மாந்தே ஸம்ஹ்ருதிர்பவேத்/
ஏதத் கர்மஸ்வரூபம் து ஸ்ருஷ்டிஸ்திதி லயாவஹம்/

பீடத்துடன்(ஆவுடையார்) சேர்ந்த இலிங்க வடிவமே கர்ம சாதாக்கியமாகும். இலிங்கம் நாதத்தையும் (துடிப்பான நிலையில் உள்ள ஓசையை) பீடமாகிய ஆவுடையார் பிந்துவையும்  (ஓசையை இயங்க செய்யும் ஆற்றலை)குறிக்கிறது. நாதமும் பிந்துவும் சேர்ந்த வடிவே இலிங்கமெனப்படும். இலிங்கம் சிவத்தின் சொரூபம்; ஆவுடையார் சக்தியின் சொரூபம். இலிங்கத்திலிருந்தே அணைத்து தாவர சங்கம சிருஷ்டிகளும் தோன்றின. இந்த இலிங்க வடிவத்தில் இருந்து கொண்டுதான் பரமேஸ்வரன் சிருட்டி, திதி மற்றும் சம்காரம் செய்கிறார்.

– வாதுளாகமம் -தத்வ பேத படலம்

பரசிவன் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல் மற்றும்
அருளல் என்னும் பஞ்ச கிருத்தியங்களைப் புரிவதற்கே இலிங்க வடிவத்தை எடுத்துள்ளான்.

ஏவம் லிங்கம் து கர்மேசம் த்யாயேத் சகளநிஷ்களம்/

– வாதுளாகமம் – தத்வ பேத படலம்

இலிங்கம் ஈசனின் அருவுருவ ( சகள-நிஷ்கள) நிலையை உணர்த்தும் .அது எப்படி ஒரே சமயத்தில் அருவம் மற்றும் உருவநிலையை ஒரே வடிவம் உணர்த்தும் என்ற கேள்வி எழும். இலிங்கத்திற்கு மற்ற தெய்வவடிவங்களைப் போல் முகம், கைகால்கள் போன்ற உடலுறுப்புகள் கிடையாது, அதாவது குறிப்பிட்ட ஓர் உருவம் கிடையாது. ஆதாலால், அது அருவம் எனப்படும்.
அதே சமயத்தில்,உடலோ உறுப்புகளோ இல்லாமலிருந்தாலும்கூட இலிங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் உண்டு. அந்த வடிவம் (வட்டமான, நீண்ட வடிவம்) நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. ஆதலால், இலிங்கத்திற்கு உருவமும் உண்டு. இக்காரணத்தால் தான் இலிங்கம் அருவம்+உருவம் = அருவுருவ ( சகளநிஷ்கள) நிலையை குறிக்கும் என்று ஆகமங்கள் உரைக்கின்றன.

இலிங்க பீடமான ஆவுடையாரை பெண்ணுறுப்பு என்ற தவறான ஒரு கருத்தும் நிலவிவருகிறது.
பரமாகாசம் எனப்படும் பரவெளியின் சின்னமாக இலிங்கம் விளங்குகிறது. அதில் என்றும் உள்ள ஓர் அசைவு சக்தியை குறிக்கும். அந்த அசைவு இலிங்கத்தில் என்றும் உள்ளது என்பதை சித்தரிக்கவே சக்தியின் சொரூபமான ஆவுடையார் இலிங்கத்தைச் சுற்றி கீழடங்கின நிலையில் அமைந்துள்ளது. மேலும்,உயிர்களின் மலத்தை நீக்கும் பொருட்டு அசைவை குறிக்கும் சக்தியாகிய திருவருள் சிவமாகிய இலிங்கத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஆவுடையாரின் நீண்டிருக்கும் பகுதியான கோமுகி உயிர்களை நோக்கி இருக்கும் திருவருளை குறிக்கும்.

அந்தர்யாகம் எனப்படும் அகப்பூசையில் நாத(ஒலி) வடிவான இலிங்கத்தை ஓளி வடிவான சோதி சொரூபமாக தமது இதயத்தின் நடுவே ஓர் எட்டிதழ் தாமரையின் மேல் வீற்றிருப்பதாக பாவித்துப் பூசிக்கவேண்டும் என்று ஆகமங்கள் விதிக்கின்றன. ஆக, ஆகமங்களும் இலிங்கம் இறைவனின் சோதி சொரூபமேயன்றி ஆண்குறி அல்ல என்பதை அறுதியிட்டுக் கூறுகின்றன.

மேலும், ஆகமங்களும் சில்ப சாஸ்திரங்களும் இலிங்கத்திற்கு மூன்று பாகங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன. இலிங்கத்தின் அடிப் பகுதியாகிய பிரம்மபாகம் நபும்சக(அலி) லிங்கமாகவும், நடுப்பகுதியான விஷ்ணுபாகம் ஸ்த்ரீலிங்கமாகவும், மேல்பகுதியான உருத்ரபாகம் பும் (ஆண்) லிங்கமாகவும் விளங்குகிறது. அவன், அவள், அது என்று பிரபஞ்சத்தில் தோன்றும் உயிருள்ள  உயர்திணை ஆண் பெண்களும் அஃறிணைப் பொருள்களும்  யாவும் தன்னிடத்தே தோன்றி ஒடுங்குகின்றன என்பதை இது உணர்த்துகிறது. இப்படி அணைத்து பாலினத்தையும் தனது பாகங்களாக கொண்டு பாலினம் கடந்து நிற்கும் இலிங்கம் எவ்வாறு ஆண்குறியாகும்?

காபாரதம் அணைத்து சிருட்டிக்கும் ஆதாரமாக விளங்குவது ஈசனின் இலிங்க வடிவமே என்கிறது. துரோண பர்வத்தில், வியாசர் அசுவத்தாமனுக்கு பரமேசுவரனின் மஹிமைகளை உரைக்கும் பொது கேசவனாகிய மஹாவிஷ்ணு இலிங்கத்தை அனைத்துப் படைப்புக்கும் மூலமாகக் கருதி வழிபடுகிறார் என்கிறார்:

ச எஷ ருத்ர பக்தஸ் ச கேசவோ ருத்ர சம்பவ:/
ஸர்வபூதபவம் ஞாத்வா லிங்கே ‘ர்ச்சயதி ய ப்ரபும்/

  • மஹாபாரதம் – 7:172:89-90

ஸ்ரீ கிருஷ்ணர் அனுசாசன பர்வத்தில், பரமசிவனின் பிரபாவத்தை தர்மபுத்திரனுக்கு உபதேசிக்கும்போது இவ்வாறு உரைக்கிறார்:

வதந்த்யாக்னி மஹாதேவம் ததா ஸ்தாணு மஹேஸ்வரம்/

முனிவர்கள் மகாதேவனை அக்னி, ஸ்தாணு மற்றும் மகேஸ்வரன் என்று வர்ணிக்கிறார்கள்.

 

  • மஹாபாரதம் – 13:161:2
  •  

கூர்ந்து கவனித்தால்,இந்த வாக்கியத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஈசனின் இலிங்க
வடிவத்தை பற்றி விளக்கியுள்ளார். ”ஸ்தாணு” என்ற சொல் தூண், தம்பம், அசைவற்ற நிலை என்னும் அர்த்தங்களை உடையது. ”ஸ்தாணு” என்ற சொல்லும் “ஸ்தூனம்” அதாவது தூண் என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொற்கள். அனைத்தையும் முழுமையாக வியாபித்து நின்றபடியாலும், மேற்கொண்டு வியாபிக்க ஏதும் இல்லாததாலும், ஈசன் அசைவற்ற தூண்- “ஸ்தாணு”  என்றழைக்கப்படுகிறார்.

மஹாபாரதம் ஏன் ஈசன் ஸ்தாணு என்ற திருநாமம் கொண்டுள்ளான் என்பதை விளக்குகிறது.

மஹத் பூர்வே ஸ்திதோ யச்ச ப்ராநோத்பத்தி ஸ்திதஸ் ச யத்/
ஸ்திதலிங்கஸ்ச யந்நித்யம் தஸ்மாத் ஸ்தாணுரிதி ஸ்ம்ருத//

அவன் சிறந்தவனாக விளங்குவதாலும்,அவனே பழம்பொருளாதலாலும் , அவனே உயிருக்கு ஆதாரமாக விளங்குவதாலும், அவனின் லிங்கம்-சின்னம் என்றுமே அழிவற்று நிலைநிறுத்தப்பெற்றதாலும் அவனை ஸ்தாணு என்று அழைக்கிறார்கள்.

  • மஹாபாரதம் – 07:202:133

 

அக்னித்தம்பமான இலிங்க வடிவில் பரமேஸ்வரன் தோன்றியதால் அவனை “அக்னி” என்றும் “ ஸ்தாணு” என்றும், அனைத்து சிருட்டிக்கும் அந்த
இலிங்கமே மூலமானதால் அவன் “மஹேஸ்வரன்” என்றும் போற்றப்படுகிறான்.

அடுத்து புராணங்கள் இலிங்க தத்வத்தை பற்றி கூறும் விளக்கத்தையும் எவ்வாறு இலிங்கம் நாமிருக்கும் பிரகிருதி மாயையில் தோன்றியது என்பதனையும் பார்ப்போம்.

ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு முனிவரை பார்த்து, ”லிங்கம் என்றல் என்ன?”என்று வினவினார். அதற்கு உபமன்யு மஹரிஷி பதிலளிக்கிறார்:

எவமேவ விவாதோபூத்ப்ரஹ்மவிஷ்ணோ: பரஸ்பரம்/
அபவச்சா மகாயுத்தம் பைரவம் ரோமஹர்ஷணம் 
முஷ்டி பிர் நிக்நடோஸ்தீவ்ரம் ரஜஸா பத்த வைரையோ:
தாயோர்தர்பாபஹாராய ப்ரபோதாய ச தேவயோ: 
மத்யே சமா விர பவல் லிங்கமைஸ்வரமத்புதம் 
ஜ்வாலாமாலா சஹஸ்ராத்யமப்ரமேய மநௌபமம்
க்ஷயவருத்தி விநிர்முக்தம் ஆதிமத்யாந்தவர்ஜிதம்

பிரஹ்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் ( தம் இருவரில் யார் பரம்பொருள் என்பதை பற்றி ) கடுமையான வாக்குவாதம் மூண்டது. பின்னர், அது பயங்கரமான யுத்தமாக மாறியது. ரஜோகுண தாக்கத்தால், இருவரும் ஒருவரையொருவர் முஷ்டிகளால் தாக்கினர். அவர்களின் ஆணவத்தைப் போக்கி, ஞானம் தந்து விழிப்பூட்டுவதற்காக, ஆயிரமாயிரம் சுவாலைகள் கொண்டதும், அளவிடற்கரியதும், ஈடிணையற்றதும், ஆதி நடு அந்தம் இல்லாததுமான ஈஸ்வரனின் அற்புதமான இலிங்கம் அவர்களின் மத்தியில் தோன்றியது.

  • சிவ மஹாபுராணம் (31-34 ,அத்தியாயம் 34 , வாயவிய சம்ஹிதை)

 

பிரம்மனும், விஷ்ணுவும் அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி அந்த இலிங்கத்தின் முடியையும் அடியையும் காண முயற்சி செய்து தோல்வியடைந்தனர். அவர்களின் நிலையை கண்டு மனமிரங்கிய கருணாமூர்த்தியான சிவபிரான், அந்த இலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு அவர்களுக்கு அருள்செய்தார்.

பரமேஸ்வரனே தாம் எதற்காக இலிங்க வடிவத்தை எடுத்தார் என்பதனை பிரம்ம மற்றும் விஷ்ணுவிடம் விளக்குகிறார்:

ஈசத்வாதேவ மே நித்யம் ந மதண்யஸ்ய கஸ்யசித் /
ப்ரஹ்மதத்வபுத்யர்தம் நிஷ்களம் லிங்கமுத்திடம்//
தஸ்மாதஞ்ஞாதமீசத்வம் வ்யக்தம் த்யோதயிதும் ஹி வாம்/
சகளோஹமதோ ஜாத: ஸாக்ஷத் ஈசஸ்து தத்க்ஷநாத்//
சகலத்வமதோ ஞேயம் ஈசத்வம் மயி ஸத்வரம்/
யதிதம் நிஷ்களம் ஸ்தம்பம் மம ப்ரஹ்மத்வபோதகம்//
லிங்கலக்ஷண யுக்தத்வான் மம லிங்கம் பவேதிதம்/
ததிதம் நித்யமப்யர்ச்யம் யுவாப்யாமத்ர புத்ரகௌ//

நானே அனைத்திற்கும் ஈசனாக விளங்குகிறேன்; இந்த ஈசத்துவம் என்னுடையது, என்னை அன்றி வேறு எவருக்கும் இது கிடையாது. முதற்கண், மனதிற்கு எட்டாத எம்முடைய நிஷ்கள (உருவம்,குணம்,அடையாளம் அற்ற நிலை) தன்மையை உங்களுக்கு உணர்த்துவதற்காக நான் அக்கினித் தம்பமான இலிங்க வடிவில் உங்கள் முன்பு தோன்றினேன். பின், நீங்கள் என்னை அறிந்துகொள்வதற்காக சகல ( உருவம், குறி, பண்புகள் கொண்ட நிலை) நிலையை குறிக்கும் இந்த உருவத்தோடு காட்சி அளித்தேன். எனது இந்த ஈஸ்வர வடிவம் எனது சகள நிலையை உணர்த்தும். இந்த அக்கினித்தூண் நிஷ்கள நிலையைக் குறிக்கும் எனது இலிங்கமாகும்(சின்னம்). என் சின்னமான இலிங்கத்திற்கும் எனக்கும் துளியளவு கூட பேதம் இல்லையாகையால், இந்த இலிங்கம் எப்பொழுதும் வழிபடத்தக்கது, புத்திரர்களே!

  • சிவமஹா புராணம் –1:9:39-42

 

தத: ப்ரபிருதி சக்ராத்யா: சர்வ ஏவ ஸுராஸுர:
ரிஷயஸ் ச நரா நாக நார்யஸ்சாபி விதானத:
லிங்கப்ரதிஷ்டா குர்வந்தி லிங்கே தம் புஜயாமிதி ச

அந்த நாள் முதற்கொண்டு ,இந்திரன் முதலிய தேவர்கள், அரக்கர்கள்,ரிஷிகள்,நாகங்கள் மற்றும் பெண்கள் விதிப்படி லிங்கங்களை ஸ்தாபித்து ஈசனை லிங்க வடிவில் வணங்குகிறார்கள்.

  • சிவ மஹாபுராணம்

(ஸ்லோகம் ஸ்லோகம் 85 ,அத்தியாயம் 35 , வாயவிய சம்ஹிதை)

 

அப்ரஹ்மத்வாத் தாதான்யேஷாம் நிஷ்காலத்வம் ந ஹி க்வசித் 
தஸ்மாத்த்தே நிஷ்காலே லிங்கே நாராத்யாம்தே சுரேஸ்வர:

சிவன் பரம்பொருளை இருக்கும் காரணத்தால் அவருக்கு நிஷ்களம் மற்றும் சகளம் என்ற இருதன்மையும் உண்டு.ஆதலால், சிவனுக்கு மட்டும் தான் இலிங்கம் மற்றும் உருவ வழிபாடு என்ற இரண்டும் உண்டு. இதர தெய்வங்கள் பரப்பிரம்மமாக இல்லாத காரணத்தால், உருவ வழிபாடு மட்டுமே உண்டு.

  • சிவ மஹாபுராணம் 5.13

 

சிவபெருமான் பிரம்ம விஷ்ணுக்களுக்கு ஆதி அந்தம் இல்லாத அனல் தூணாக காட்சி தந்தான். அந்த அனல் தூண்தான் லிங்கம் என்று சிவ மஹாபுராணம் தெளிவுபடுத்திகிறது.

பிரணவத்தின் தூல வடிவமே இலிங்கம் என்று சிவ மஹாபுராணம் கூறுகிறது. பிரணவ சொரூபமே இலிங்கம். அக்கினி இலிங்கமாக ஈசன் அயன், மாலுக்கு காட்சி நல்கியபோது:

தத்ராகார: ஸ்ரீதோ பாகே ஜ்வலலிங்கஸ்ய தக்ஷிணே
உகாரஸ்சொத்தரே தத்வன் மகாரஸ்தஸ்ய மத்யத:
அர்த்தமாத்ராத்மகோ நாத: ஸ்ரூயதே லிங்கமூர்த்தனி

உயர்ந்து சுடர்விடும் அந்த ஜ்வாலலிங்கத்தின் வலப்புறத்தே அகாரமும்,இடப்புறத்தே உகாரமும்,நடுவில் மகாரமும்,அதன் சிரத்தின் மேலே அர்த்த மாத்திரையான நாதமும் பொருந்திக்கொண்டன.

லிங்க புராணத்தில், முனிவர்கள் பிரம்மதேவரை பணிந்து, ”இலிங்கம் என்றல் என்ன? இலிங்க வடிவம் எவ்வாறு தோன்றியது?” என்று வினவினர்.

அதற்கு பிரம்மன் கூறினார்:

ப்ரலயார்ணவமத்யே து ரஜஸா பத்தவைரயோ://
எதஸ்மிந்னந்தரே லிங்கம் அபவச்சாவயோ: புரா:/
விவாதசமனார்தம் ஹி ப்ரபோதார்த்தம் ச பாஸ்வரம்//

பிரளய சமுத்திரத்தின் நடுவே, நானும் விஷ்ணுவும் ரஜோ குணத்தால் உந்தப்பட்டுக் கடும் போரில் ஈடுபட்டிருந்தோம். அந்தச் சமயத்தில், எங்கள் விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், எங்களுக்கு விழிப்பூட்டுவதற்கும், ஒரு தேஜோமயமான இலிங்கம் எங்கள் முன் தோன்றியது.

  • லிங்க புராணம் (17.32-33)

 

அவ்யக்தம் லிங்கமாக்யாதம் த்ரிகுணப் ப்ரபவாப்யயம்/
அணாத்யானந்தம் விஸ்வஸ்ய யதுபாதானகாரணம்//
ததேவ மூலப்ரக்ருதிர்மாயா ச ககனாத்மிகா 
தத ஏவ ஸமுத்பன்னம் ஜகதேதச்சராசரம்/

அவ்வியக்தமே (தோன்றி வெளிப்படாத நிலை) இலிங்கம் என்று அழைக்கப்படும். அதுவே முக்குணங்களுக்கும் மூலம். அதிலிருந்தே இந்தப் பிரபஞ்சம் தோன்றி பின் அதிலேயே ஒடுங்குகிறது. அதற்கு முதலும் முடிவும் கிடையாது. அதுவே இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாகும்.அதுவே ஆகாயத்திற்கொப்பான விரிவுடைய மாயையாகிய மூலபிரகிருதி. பிரபஞ்சத்தின் அணைத்து தாவர சங்கம உயிரினங்களும் அதனிடமிருந்தே தோன்றுகின்றன.

 

தத: சிவோ மஹேசஸ் ச ருத்ரோ விஷ்ணு பிதாமஹ: //
பூதாநி சேந்த்ரியைர்ஜாதா லீயந்தே’த்ர சிவாக்ஞயா/
அத ஏவ சிவோ லிங்கோ லிங்காக்ஞபயேத்யத//

சதாசிவன், மஹேஸ்வரன், உருத்ரன், விஷ்ணு, பிரம்மன், பூதங்கள் மற்றும் இந்திரியங்கள் முதலிய அனைத்தும் இலிங்கத்தினின்றே சிவாக்ஞையால் தோன்றி இலிங்கத்திலேயே ஒடுங்குகின்றன.

சிவமஹா புராணம் இலிங்கம் என்பது சிவனின் திருமேனி என்று தெள்ளத் தெளிவாக உரைக்கிறது:

லிங்கம் ச சிவயோரதேஹ ஹஸ்தாப்யாம் யஸ்மாத்ததிஷ்டிதம்//

இலிங்கம் சிவ சக்திகளால் அதிட்டிக்கபட்டிருப்பதால் அது அவர்களின் திருமேனியாகும்.

  • சிவமஹா புராணம் – 7.2,34.

ஸ்காந்த புராணமும் சிவனின் அனல் தூண் வடிவம்தான் இலிங்கம் என்கிறது:

லோகோபத்ரவமாகர்ந்நய ஜோதிர்லிங்கதயா சிவ:/
மாகாக்ருஷ்ண சதுர்தஸ்யாம் மத்யேராத்ரமதுல்யபா://

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த யுத்தத்தினால் உலகத்திற்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீக்குவதற்கு சிவபிரான் ஜோதிர்லிங்க வடிவத்தில் மாசி மாத சதுர்த்தசி திதியில் தோன்றினார்.

மேலும்,கூர்ம புராணம், தேவி பாகவதம், பவிஷ்ய புராணம், புராணங்களில் மிக்க பழமையானதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் வாயு புராணம், இவை அனைத்தும் சிவ லிங்கம் என்பது பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி தந்த அக்னித்தம்பத்தின் சொரூபமே அன்றி ஆண்குறி அல்ல என்று அறுதியிடுகின்றன. ஆதலால், மேற்கண்டபடி, வேதங்கள், ஆகமங்கள், சி ல்பசாஸ்திரங்கள் மற்றும் புராணங்களைக் கூர்ந்து ஆராய்ந்தால் சிவலிங்கமானது ஆண்குறியின் சின்னம் அல்ல என்பது தெளிவாக புலப்படும்.