அடியார் நிந்தை அரன் நிந்தையே!
Insult to the devotees is an insult to the God
தொகுப்பு
குருவடி பணிந்து
மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD
கனடா சைவசித்தாந்த பீடம்
www.knowingourroots.com
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
-சுந்தரர் தேவாரம்
சிவனடியாரை நிந்தை செய்து பேசியவர்களின் நாவை அறுத்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய சத்தி நாயனாரின் சிவப்பணி மேற்கூறிய ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் திருமொழிகளால் ஆழமாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
“பிறரைக் குறை கூறுவதையும் குறைவாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். இது கொடிய பாவம். இது கடவுளைத் தூஷிப்பதாகும். எவராவது பிறரை தூஷணை செய்தால் அவரை அடித்துத் திருத்தினால்கூட தவறில்லை. ஏனெனில் அந்த குணத்தையே ஒழிக்க வேண்டும்”
– சாயிபாபாவின் பஞ்ச இரத்தினச் சொற்பொழிவு; 23 November 1987
“எவரையும் தூஷிக்கலாகாது. எவரையும் தாக்கிப் பேசக்கூடாது. பிரேமையை உள்ளத்தில் நிரப்புதல் வேண்டும். இதுவே சரியான சாதனை.” – சாயிபாபாவின் பஞ்ச இரத்தினச் சொற்பொழிவு; 21 November 1987
“பிறரைப்பற்றித் தூஷித்தோ, கண்டனம் செய்தோ பேசுவது கொடிய பாவச் செயலாகும். இது ஒரு பெரிய நோய் போன்றது. இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. மிகவும் கொடிய புற்று நோயெனவே இதைக் கருத வேண்டும். பிறரைத் தூஷிப்பதனால் நம் அறிவு கெட்டு விடுகிறது. இதனால் நாம் அனேக பிரச்சினைகளையும் பாதிப்புகளையும் அனுபவிக்கவேண்டி வரும். பர தூஷணையைத் தவித்து பலாத்காரத்தில் ஈடுபடும் எண்ணத்தையும் விட்டு மனதில் தெய்வ சிந்தனையையும் தூய்மையான அன்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட உண்மையான அன்புடன் பிறரை நேசித்தால் தெய்வானுக்கிரகம் உங்களுக்குத் தானாகவே கிட்டிவிடும். பரஹிம்சை, பரதூஷணை இரண்டையும் கட்டாயமாகத் தவிர்க்கவேண்டும். பிறரை தூஷிக்கும்போது நீங்கள் தெய்வத்தையே தூஷிப்பதாகும். ஏனெனில் அனைவரும் பரமாத்மாவின் ஸ்வரூபங்களே. இதுவே சத்தியமான வாக்கு. ஆகவே பிறரை வெறுப்பதையோ, கண்டனம் செய்வதையோ அடியோடு நிறுத்திவிட வேண்டும். உங்கள் அகங்காரத்தையும் ஆடம்பரத்தையும் பெரிதாகக் கருதியே பிறரை வேறுபாட்டுணர்வுடன் நோக்குகின்றீர்கள். இது மாபெரும் தவறு.” –சாயிபாபாவின் பஞ்ச இரத்தினச் சொற்பொழிவு; 21 November 1987.
குருவையுஞ், சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?
“மனிதர் எனக் கருதாது சிவபெருமான் எனக்கருதி மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிஷ்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்கும் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவரும் தப்பாது நரகத்தில் வீழ்வர்.”
– ஆறுமுகநாவலரின் இரண்டாம் சைவ வினாவிடை 336.
சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபடலாகாதா? “ஒருவன் ஒரு பெண்ணிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக்கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றித் தெளியப்படும். அதுபோல ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவருடைய அடியாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றித் தெளியப்படும். ஆதலினாலே சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானம் செய்துவிட்டுச் சிவபெருமானிடத்தே அன்புடையவர்போல் ஒழுகுதல் வயிறு வளர்ப்பின் பொருட்டும், இடம்பத்தின் பொருட்டும் நடித்துக்காட்டும் நாடகமாத்திரையே அன்றி வேறில்லை.“
– ஆறுமுகநாவலரின் இரண்டாம் சைவ வினாவிடை 338
குருவுக்கும் சிவனடியாருக்கும் செய்யத்தகாத குற்றங்கள் யாவை? “கண்டவுடன் இருக்கை விட்டெழாமை; அவர் எழும்பொழுது உடன் எழாமை; அவர் திருமுன்னே உயர்ந்த ஆசனத்தில் இருத்தல்; காலை நீட்டிக்கொண்டருத்தல்; சயனித்துக்கொள்ளுதல்; வெற்றிலை பாக்குப் புசித்தல்; போர்த்துக்கொள்ளுதல்; பாதுகையோடு செல்லல்; சிரித்தல்; வாகனமேறிச்செல்லல்; அவராலே தரப்படுவதை ஒரு கையால் வாங்குதல்; அவருக்குக்கொடுக்கப்படுவதை ஒரு கையாற் கொடுத்தல்; அவருக்குப் புறங்காட்டல்; அவர் பேசும்பொழுது பாராமுகம் செய்தல்; அவர் கோபிக்கும்பொழுது தாமும் கோபித்தல்; அவருடைய ஆசனம், சயனம், வஸ்திரம், குடை, பாதுகை முதலியவைகளைத் தாம் உபயோகித்தல்; அவைகளைத் தமது காலினாலே தீண்டல்; அவரது திருநாமத்தை மகிமைப் பொருள்படும் அடைமொழியின்றி வாளா சொல்லல்; அவரை யாராயினும் நிந்திக்கும்பொழுது காதுகளைப்பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்று நீங்கிவிடாது கேட்டுக்கொண்டிருத்தல் முதலியவைகளாம்.”
– ஆறுமுகநாவலரின் இரண்டாம் சைவ வினாவிடை 349
தான் வழிபட்டுவந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும்?
“தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியாலே பழுதுபடின் அதனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள்வதுபோலத் தான் வழிபட்டுவந்த ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவிய அபகாரம் முதலிய பெரும்பாவங்கள் செய்து கெடுவானாயின் அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும்.”
– ஆறுமுகநாவலரின் இரண்டாம் சைவ வினாவிடை 354
ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே
– திருமந்திரம் 537
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே
-திருமந்திரம் 532