மந்திரங்களும் திருமுறைகளும்
-தில்லை கார்த்திகேய சிவம்.
சித்தாந்த சைவத்தின் ஆதாரமாக, அடிப்படையாக விளங்குவது சிவாகமங்களே.
சிவம், ஆகமம், சைவம் இவையெல்லாம் ஒருபொருட் சொற்கள். எனவேதான் சிவஞான சித்தியார், “வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள் “என்று கூறுகின்றது. இங்கு ஆகம நூல் என்பதை சைவநூல் என்று குறிப்பிடுவதை காண்க.
அதேபோல் “சிவாகமங்கள் சித்தாந்தமாகும் “அதாவது ஆகமங்களே சைவசித்தாந்தமாகும் என்று சித்தாந்த நூல் உரைக்கின்றது.
சுருக்கமாக கூறினால் ஆகமத்தை பிரமாணமாக கொண்டு சமய மரபுகளை கடைப்பிடிப்பவர் ”சைவர்”என்று அழைக்கப்படுவார்கள்.
எனவேதான், நமது சைவத்திருமுறைகள் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகமங்களில்,
ஈசானாய ,
தத்புருஷாய ,
அகோராய ,
வாமதேவாய ,
ஸத்யோஜாதாய ,
என்ற ஐந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் என்றும்,
ஹ்ருதயாய ,
சிரசே ,
சிகாயை ,
கவசாய ,
நேத்ராய ,
அஸ்த்ராய ,
என்ற ஆறும் ஷடாங்க மந்திரங்கள் என்றும் அழைக்கப்படும்.
மேலும், ஸப்த கோடி மஹா மந்திரங்கள் என்பவை, நமஹ, ஸ்வாஹா, ஸ்வதா, வௌஷட், வஷட், பட், ஹும் என்னும் ஏழு மந்திரங்கள் ஆகும்.
இவற்றில்,
1) நமஹ– தெய்வங்களை அழைத்து வணக்கம் தெரிவிப்பது.
2)ஸ்வாஹா– தெய்வங்களைத் திருப்தி செய்யும் ஆற்றலுடையது.
3)ஸ்வதா– தைர்யம், வசீகரம் தருவது
4)வௌஷட் – தெய்வங்களை ஈர்க்கும் ஆற்றலுடையது.
5)வஷட்– வதம் செய்தற்குரியது.
6)பட்– தடைகளை போக்கக்கூடியது.
7)ஹும்– ஆன்மாக்களை ஒடுக்குதற்குரியது.
இங்கு “கோடி ” என்பது இறுதியை குறிக்கும்.ஒருவர் வீட்டு விலாசத்தை கேட்கும் பொழுது, இந்த தெருவில் கடைக்கோடி வீடு என்று சொல்வோம் அல்லவா, அதுபோல்.
இந்த ஸப்த கோடி மந்திரங்கள் மேற்கண்ட, பஞ்சப்ரம்ம, ஷடங்க மந்திரங்களோடு இறுதியில் சேர்ந்து உச்சாடனம் செய்யும் பொழுது அதியற்புத பலன்களையும், மந்திர ஆற்றலையும் வழங்கக்கூடியது.
இந்த ஸப்த கோடி, பஞ்சப்ரம்ம, ஷடங்க மந்திரங்களைக் கொண்டே நமது திருமுறைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்று உமாபதி சிவம் அருளிய திருமுறை கண்ட புராணம் உரைக்கின்றது.
அப்பாடல்,
“மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுரு மந்திரங்கள் பதினென்றும் ஆதலினால்,
அந்தமுறை நான்கினோடு முறை பதினொன்றாக்கினார் “
அதாவது, சப்தகோடி மந்திரங்கள் ஏழு என்பதால், முதலில் மூவர்தேவாரங்களை ஏழு திருமுறைகளாகவும், பின்பு பஞ்சப்ரம்ம மற்றும் ஷடாங்க மந்திரங்கள் இரண்டும் சேர்ந்து பதினொன்று என்பதால், திருவாசகம், திருவிசைப்பா, திருமந்திரம் பதிகங்களை, சேர்த்து பதினொரு திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பிகள் வகுத்ததாக திருமுறை கண்ட புராணம் உரைக்கின்றது.
நம்பிகள் காலத்திற்கு பின் சேக்கிழார் பாடிய பெரியபுராணம் 12ம் திருமுறையாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
சிவார்ப்பணம்