உ
வேதாந்த சித்தாந்த சமரசம்
சித்தாந்தரத்தினம்
கலாநிதி க கணேசலிங்கம்
ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார்; ஆதீனம்
வேதாந்தம் சைவசித்தாந்தம் எனனும் இரு தத்துவங்களும் இந்திய தத்துவத் துறையில் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றுக்கு இடையில் ஒற்றுமையை விட வேற்றுமை அதிகமென்பது பொதுவான கருத்து. ஆயினும் அவற்றுள் ஒற்றுமை கண்டு சமரசம் பேசப்படுவதையும்; காணமுடிகிறது.
இத்தத்துவங்களுக்கு இடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? அவற்றுக்கிடையில் சமரசம் காணமுடியுமா? முடியுமாயின் எந்த அளவிற்குக் காணமுடியும்? இத்தகைய வினாக்களுக்கு விடை காணும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
வேதம் ஆகமம்
வேதாந்தம் சித்தாந்தம் என்று பேசும்பொழுது வேதம் ஆகமம் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகிறது;. வேதம் என்ற சொல் ‘வித்’ என்ற சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிவு என்பது பொருள். எனவே வேதம் என்பதை அறிவு நூல் எனக் கொள்ளலாம். வேத நூல்கள் பலவாகவுள்ளன. இறை, உயிர், உலகு பற்றிய மனித சிந்தனை அரும்பிய பழங்காலத்தில் எழுந்த அறிவு நூல்கள் வேத இலக்கியங்கள்.
மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குக் கேடு விளையாமல் இருப்பதற்காக, அவற்றைத் தெய்வங்களாகக் கொண்டு வணங்குதல், அவற்றுக்கு வேள்வி செய்தல் போன்றவற்றை வேதங்களில் காணலாம். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன. இதனால் அவை நால்வேதம் எனப்படுதலுமுண்டு. ஒவ்வொன்றும் மந்திரம், பிராமணம் என இரு பிரிவுகளாகவுள்ளன. தெய்வங்களைத் தொழுவதற்கு உச்சரிக்கப்படும் சொற்கள் மந்திரங்கள்; அவற்றை உச்சரித்துச் செய்யும் கிரியைகள் பிராமணங்கள; இவற்றின் அடிப்படையில் எழுந்த அறிவுசார் பகுதியாக இருப்பவை உபநிடதங்கள். வேதம் என்னும்பொழுது அது உபநிடதங்களையும் குறிக்கும்.
வேதங்களைப்போல் ஆகமங்களும் பலவாய் உள்ளன. வேத ஆகமங்களின் காலம் குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்தில்லை. ஆகமம் என்பதற்கு ஒன்றிலிருந்து வந்ததென்பது பொருள். இறைவனிலிருந்து அது வந்ததென்பர். சைவம், சமணம், சாக்தம் முதலிய சமயங்களுக்கு அவற்றிற்குரிய ஆகமங்கள் உண்டு. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவை சைவத்தின் மூல ஆகமங்கள். இவற்றைவிட இருநூற்றி ஏழு உப ஆகமங்களும் உள்ளன.
வேதநூற் கருத்துக்கள் பல தெளிவற்றும், தம்முள் முரண்பட்டும்;, சைவத்துக்கு உடன்பாடற்றும் காணப்படுகின்றன. ஆகமத்திலும் இத்தகைய நிலை நிலவுகிறது. ஆயினும் தெளிவின்மையும் முரண்பாடுகளும் அதில் குறைவாகவுள்ளன. கோயில் அமைப்பு, கோயிற் கிரியைகள், இறை வடிவங்கள, வழிபாட்டுமுறைகள் ஆகியவை குறித்த பல செய்திகளை ஆமகங்களிலே காணலாம். இதனால் இந்திய சமயங்கள் பலவற்றுக்கு ஆகமங்கள் உயிர்நாடியாக விளங்குகின்றன. சைவத்தின் தத்துவத்திலும் செயல்முறைகளிலும் வேதத்தை விட ஆகமம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சைவத்துக்கு வேதம் பொது என்றும் ஆகமம் சிறப்பு என்றும் கொள்ளப்படுகிறது.
சித்தாந்த தத்துவம்
சைவசமயத்தைப் பொதுவாக மூன்றாக வகுக்கலாம். வட இந்தியாவிலுள்ள காஷ்மீரசைவம் ஒன்று, நடுவிலுள்ள வீரசைவம் இன்னொன்று. தெற்கிலும் தமிழர்; வாழும் பிற நாடுகளிலும் நிலவும் சைவம். இது சித்தாந்த சைவம் எனப்படும். இதன் தத்துவமே சைவசித்தாந்தம். இக்கட்டுரையில் சைவம் என்றும் சித்தாந்தம் என்றும் கூறப்படுவன முறையே சித்தாந்த சைவத்தையும் அதன் தத்துவத்தையும் குறிக்கம்.
வேதம் ஆகமம் இரண்டும் சைவத்துக்குப் பிரமாணங்கள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால் வேதநூற் கருத்துக்கள் எல்லாம் சைவசித்தாந்தத்துக்கு உடன்பாடானவையல்ல. வேதம் என்று கூறுகையில் அது உபநிடதத்தையும் குறிக்கம். சைவாகமத்தின் ஞானகாண்டப் பகுதி சித்தாந்தத்துக்கு முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளது. இதனால் சைவசித்தாந்தத்தை ஆகமாந்தம் எனக் குறிப்பிடுவதுமுண்டு.
வேதத்தைப்போல் ஆகமத்திலும் முரண்பாடான கருத்துக்களுண்டென முன்னர் குறிப்பிடப்பட்டது. இது குறித்து ஈழத்துச் சித்தாந்த அறிஞர் ஏழாலை பண்டிதர் மு. கந்தையா எழுதவது குறிப்பிடத்தக்கது.
‘மேல் நாம் கண்ட விபரங்களின் பிரகாரம், வேதத்திற் சிவாகமக் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்கள் இருக்கக் காணப்பட்டதேயன்றி, வேதம் ஒட்டு மொத்தமாகச் சைவசித்தாந்தத்தையே பிரதிபலித்ததாக இல்லை. …..
………. சிவாகமங்களுஞ் சைவசித்தாந்தப் பொருளம்சங்களில் ஒருங்கொத்த முடிபைத் தருவனவாய் இருந்திருக்கவில்லை. இரௌரவாகமம் உடன்பொருள் மூன்றென்ன, சுவாயம்புயம் ஏழென்ன, இப்படியே தடுமாறியுள்ளன. ……’ – (பண்டிதர் மு. கந்தையா, ‘சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி’, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, 1998)
சிவாகமங்கள் மட்டுமன்றி, இடைக்காலத்தில் எழுந்த அஷ்டப்பிரகரணம் போன்ற நூல்களும் சித்தாந்தக் கருத்துக்களை முழுவதும் பிரதிபலிக்கவில்லை. ஆனால் அவற்றின காலத்திலோ, அல்லது அதற்;குச் சிறிது முன்னரோ, தோன்றிய தமிழ்த்திருமுறைகள் சித்தாந்த உண்மைகளையே பிரதிபலித்தன. இது குறித்தும் மேற்கண்ட நூலில் பண்டிதர் கந்தையா பின்வருமாறு எழுதுகிறார்.
‘அன்றியும், அஷ்டப்பிரகரண காலத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னதாகவே ஆரம்பித்து, அவற்றின் சமகாலத்தில் நிறைவெய்தியுள்ளன திருமுறைகள். அவை முற்றும் முழுதுமாகச் சைவசித்தாந்தப் பொருளையே பிரதிபலிப்பன. ஆனால் சாஸ்திரக் கிரமமாகவன்று; அனுபவக் கிரமமாக, அவை அவற்றைப் பிரதிபலிப்பனவாம் …….’.
சைவசித்தாந்தக் கருத்துக்களைத் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களிலும் காணலாம். திருக்குறளைப் பொது நூலெனச் சொன்னாலும், அதிலுள்ள கருத்தக்கள் எல்லாம் எல்லாச் சமயங்களுக்கும் உடன்பாடானவை அல்ல. ஆனால் சைவத்துக்கு உடனபாடற்ற கருத்தென்று எதனையும் அதில் காணமுடியாது. பின்வந்த மெய்கண்ட நூல்களும் திருக்குறள். கருத்துக்களைப் பரதிபலிப்பதைக் காணலாம்.
வேதம், சிவாகமம், பழந்தமிழ் நூல்கள், திருமுறைகள் ஆகியவற்றிலுள்ள சித்தாந்தக் கருத்துக்களைத் தொகுத்து ஒழுங்குபடுத்திச் சிறந்த தத்துவமாகத் தருவன பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்கள். இவற்றின் முதன்மை நூலாகத் திகழ்வது மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம். இன்று சைவசித்தாந்தம் எனப்படுவது சிவஞானபோதத்தை மையப்படுத்திய தத்துவக் கொள்கையாகவுள்ளது.
சைவசித்தாந்தம் இறை, உயிர், தளை எனும் முப்பொருள்களும் உண்மையெனக் கொள்கிறது. இவை முறையே, பதி, பசு, பாசம் எனப்படு;ம். ‘பதியினைப் போல் பசு பாசம் அனாதி’ எனும் திருமந்திரத் தொடர் சித்தாந்தம் காட்டும் முப்பொருள் உண்மையைக் கூறுகிறது.
வேதாந்த தத்துவம்
வேதாந்தம் குறித்து எழுதுவதில் ஒரு இடர்ப்பாடு எழுகிறது. வேதாந்தம் என்பது வேதகாலத்தின இறுதியில் (அந்தமாக) வந்த உபநிடதம்; எனப்படுகின்றது. இங்ஙனமன்றி, வேதங்களின் உள்ளுறையாக அல்லது சாரமாக அமைந்த கருத்துக்களின் தொகுதியே வேதாந்தம் என்றும் கருதப்படுகின்றது. இவற்றுக்கு மோலாக, சங்கரர், இராமானுசர், மத்வர் ஆகிய ஞானிகள் தோற்றுவித்த வேதாந்தப் பிரிவுகளும் வேதாந்தம் எனப்படுகின்றன. இவற்றை விளக்கி ஒரு கட்டுரையில் எழுதுவது எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
வேதநூற் கருத்துக்கள் பல தம்முள் வேறுபட்டும் முரண்பட்டும் உள்ளனவென்று முன்னர் கூறப்பட்டது. நீண்டதொரு காலப்பகுதியில் இவை தோன்றியவை என்பதால், இக்குறைகள் இருப்பது இயல்பானதே. இவ் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் நீக்கி, ஒருமித்த சீரான ஒரு கருத்தை உருவாக்கும் நோக்கில் எழதப்பட்டது பிரம்ம சூத்திரம் என்னும் நூல். வேதாந்த சூத்திரம் என்றும் இது கூறப்படுகிறது. இதனை எழுதியவர் பாதராயணர் என்பவர்; வியாசர் என்றும் இவரைக் கூறுவதுண்டு.
பின்னர் வந்த ஞானிகள் பிரமசூத்திரத்தை விளக்கி உரையெழுதினர்.. அவர்களின் உரைகள் தம்முள் வேறுபட்டு வெவ்வேறு தத்துவக் கொள்கைகள் தோன்றக் காரணமாயின. முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமை காணத் தோன்றிய பிரமசூத்திரம் முரண்பட்ட கொள்கைகளுக்கு வழிவகுத்தது. இங்ஙனம் உருவான ஒரு தத்துவம் சங்கரர் (8-ம் நூற்றாண்டு) என்ற ஞானியின் உரையிலிருந்து உருவான வேதாந்தக் கொள்கை. இதனை கேவலாத்வைத வேதாந்தம் (அத்வைத வேதாந்தம்); என்பர். பிரமம் ஒன்றே உள்பொருள்; அதிலிருந்து வந்தது உயிர்; ஒரு உயிரே பலவாகத் தெரிகிறது; பிரமமே உலகாகத் தோற்றமளிக்கிறது, என்பன இந்த வேதாந்தத்தின் கருத்துக்கள்.
உயிர், உலகு குறித்த சங்கரர் கருத்துக்களின் பொருந்தாமையைக கண்ட பின்வந்த இராமானுயர் (11-ம் நூற்றாண்டு) என்ற ஞானி இன்னொரு வேதாந்தக் காள்கையை உருவாக்கினார். இது விசிஷ்டாத்வைத வேதாந்தம் எனப்படும். சங்கரர் கடவுளை முதன்மைப்படுத்தி உயிரையும் உலகையும் இல்பொருள்களாகக் காட்ட, இராமானுயர் கடவுளை முதன்மைப்படுத்தினாலும் உயிரையும் உலகையும் உள்பொருள்களாகக் காட்டி, அவற்றைக் கடவுளுக்கு விசேடணங்களாகக் காட்டுகிறார். இத்தகைய விசிஷ்ட நிலையில் இறையைக் காட்டுவதால் அவரின் தத்துவம் விசிஸ்டாத்வைத வேதாந்தம் எனப்படுகிறது.
சங்கரர், இராமானுயர் ஆகியோரின் வேதாந்தக் கொள்கைகளுக்கு மாறாக இன்னொரு ஞானியான மத்துவர் (12-ம் நூற்றாண்டு) உருவாக்கிய தத்தவக் கொள்கை துவைத வேதாந்தம் எனப்படும். எந்த நிலையிலும் இறைவன் வேறு, ஆன்மா வேறு, என்பது இதன் கொள்கை. இவற்றோடு சடமாக உள்ள பொருட்களும் என்றும் உள்ளவை என்பதும் இதன் கருத்து.
மேற்கண்ட வேதாந்தப் பிரிவுகளை விட நிம்பாக்கரது துவைதாத்துவைதம் போன்ற வேதாந்தக் கொள்கைகளும் உள்ளன. வேறுபட்ட இந்த வேதாந்தக் கொள்கைகளெல்லாம் ஒரேயொரு பிரம்மசூத்திரத்தை அடிப்டையாகக் கொண்டன என்பது சிந்தனைக்குரியது.
வேதாந்தம் என்பது வேதகாலத்தின் இறுதியில் (அந்தமாக) வந்த உபநிடதங்கள் என்பதும் பொதுவான ஒரு கருத்து. இங்ஙனமன்றி, வேதங்களின் உள்ளுறையாக அல்லது சாரமாக அமைந்த கருத்துக்களின் தொகுதியே வேதாந்தம் என்பதும் இன்னொரு கருத்து. இங்ஙனம் வேதாந்தம் என்பது பல பிரிவுகளாகவும் பல விளக்கங்களுடனும்காணப்படுகிறது.
இன்று வேதாந்தம் என்ற சொல்லால் பெரும்பாலும் சங்கரரின் அத்வைத வேதாந்தமே பேசப்படுகிறது. ஆனால் விசிட்டாத்வைத, துவைத வேதாந்தங்களே கடவுள் நம்பிக்கையுடன் கலந்த சமய தத்துவங்களாக விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரரின் அத்வைத வேதாந்தம்
வேதாந்த சித்தாந்த சமரசம் குறித்து ஆராய்வதற்கு சித்தாந்தம் கூறும் முப்பொருள் தொடர்பில் சிந்திப்பது எளிதானது. சங்கரின் வேதாந்தக் கொள்கையின்படி பிரமம் ஒன்றே உண்மைப் பொருள். அதுவே அவித்தையால் கட்டுண்டு ஆன்மாவாக மாறியுள்ளது. அவித்தை என்றால் அஞ்ஞானம் என்பது பொதுவான கருத்தாயினும், அது வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பொருள்களில் வழங்கப்படுகிறது. உலக வாழ்வு முடிந்ததும் ஆன்மா தனது ஆன்மீக சாதனையின் பயனாக பிரமத்தை அடையும்.
பிரமமும் ஆன்மாவும் இரண்டல்ல, பிரமமே ஆன்மா. அவற்றின் உறவு அத்வைத உறவு என்பது சங்கரர் கொண்ட முடிவு. பரமாத்மா, சீவாத்மா என்ற சொல்லாட்சிகளால் இறைவனையும் ஆன்மாவையும் குறிப்பதும் இதன் விளைவால் வந்ததே. இங்ஙனம் குறிப்பிடுவது சைவத்தில் இல்லாததென்பது சிந்தனைக்குரியது.
உயிர் ஒன்றுதான், அது ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. ஒரே காற்று வெவ்வேறு பாத்திரங்களில் வெவ்வேறு வடிவங்களில் தெரிவது போன்றது இது. பாத்திரம் உடைந்தால் உள்ளிருக்கும் காற்று வெளியிருக்கும் காற்றுடன் ஒன்றாவது போல் உயிர் இறைவனுடன் ஒன்றாகிவிடும். உயிர் குறித்த சங்கரரின் இத்தகைய கருத்துகள் பல வினாக்களை எழுப்புகின்றன.
கடவுளிடமிருந்து நாம் வந்தோம், பிரமமே நாம் என்றால், எமக்கும் கடவுளின் குணங்கள் இருக்க வேண்டுமல்லவா? மீண்டும் நாம் பிரம்மம் ஆகிறோமென்றால், திரும்பவும் உயிராக வரமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவதம்? உயிர்களாகிய மனிதரும் பிராணிகளும் பல்வேறு தன்மைகளைக் கொண்டிருக்க, உயிர் ஒன்றுதான், பலவல்ல, என்று கூறுவது அறிவுக்கு ஏற்புடையதாகுமா? பிரமம் அவித்தையால் கட்டுண்டு உயிரானது என்றால், பிரமத்தைவிட அவித்தைக்கு ஆற்றல் அதிகம் என்று ஆகிறதல்லவா? இத்தகைய வினாக்களுக்கு ஏற்ற பதில் இல்லை. இக்கருத்துக்கள் சித்தாந்தத்துக்கு ஏற்புடையனவல்ல.
உலகம் குறித்த வேதாந்தக் கருத்தும் விசித்திரமானது. உலகம் ஒரு பொய்த்தோற்றம். கயிறு மாற்றமடையாமல் பாம்பாகத் தெரிவது போல் பிரமமே மாற்றமடையாமல் உலகாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் மாயையே. (சித்தாந்தம் கூறும் மாயை வேறு). சங்கரரின் இந்த வாதம் விவர்த்த வாதம் எனப்படும். இதிலும் சில கேள்விகள் எழுகின்றன. கயிறு பாம்பாக ஒருவனுக்குத் தெரியுமாயின் அவனுக்கு முன்பே கயிறு பற்றிய ஞானமும் பாம்பு பற்றிய ஞானமும் இருந்திருக்கவேண்டும். அதேபோல் பிரம்மம் உலகாகத் தெரிகிறதெனின் பிரம்மம் பற்றிய ஞானமும் உலகம் குறித்த ஞானமும் முன்னமே இருந்திருக்க வேண்டுமல்லவா? அத்துடன்; பிரம்மம் உலகாகத் தோற்றமளிப்பதற்கு மாயை காரணமெனில், அதற்குப் பிரமத்தைவிட அதிக ஆற்றல் உண்டென்று அல்லவா கருதவேண்டும்? வேதாந்தம் கூறும் அவித்தை, மாயை ஆகியவற்றின் இயல்பு என்ன? இருப்பு என்ன? தோற்றம் என்ன?
இவை போன்ற கேள்விகளுக்கு ஏற்ற விளக்கத்தை அத்வைத வேதாந்தம் தருவதில்லை. இவை எமது சிற்றறிவுக்க எட்டாதவை, வசனங்களால் விளக்க முடியாதவை என்று கூறி, அநிர்வசனீயம் என்கிறது. சித்தாந்தம் கூறும் முக்கிய பொருளான ஆணவத்தின் இருப்பும்; வேதாந்தத்தை உள்ளடக்கிய வேதத்தில் காணமுடியாதது.
சத், அசத் என்ற சொற்கள் இந்திய தத்துவங்களில் இடம்பெறுவன. அவற்றின் பொருள் தத்துவத்துக்குத் தத்துவம் வேறுபடுகின்றது. என்றுமுள்ள நிலையான பொருள் சத், என்றும் இல்லாத பொருள் அசத், என்பது வேதாந்தம தரும் பொருள். இதன்படி பிரமம் ஒன்றே சத் எனலாம். உலகம.; பிரமத்தின் தோற்றம் என்பதால் அது உள்பொருளுமல்ல, முயற்கொம்பு போல் இல்பொருளுமல்ல. இதனால் அது சதசத் விலட்ஷணம் எனப்படுகிறது. சைவசித்தாந்தத்தின்படி, உயிர் சத்தாகிய இறையுடன் சேர்ந்து சத்தாக இருக்கிறது; ஆனால் அது சத்தல்ல. அசத்தாகிய உலகுடன் சேர்ந்து அசத்தாக இருக்கிறது; ஆனால் அது அசத்தல்ல. இங்ஙனம் சத்துமின்ற் அசத்துமின்றி இருக்கும் உயிரை சதசத் என்ற பெயரால் சைவசித்தாந்தம் குறிப்பிடுகிறது.
மேற்காட்டியவை போன்ற பல காரணங்களால் சங்கரரின் அத்வைத வேதாந்தத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் சமரசம் காண முடிவதில்லை.
விசிஷ்டாத்வைதமும் துவைதமும்
சங்கரரின் வேதாந்தம் போலன்றி, இராமனுசரின் விசிஷ்டாத்வைதம் சமரசத்துக்கு ஓரளவு இடமளிக்கிறது. சித்தாந்தம் போல், விசிஷ்டாத்வைதமும் இறை, உயிர், உலகை உண்மையெனக் கொள்கிறது. உயிர்கள் பல, அவற்றை உள்நின்று இயக்குபவன் இறைவன் என்பன போன்ற கருத்துக்களை விசிஷ்டாத்வைதம் கொண்டிருக்கிறது. இத்தகைய கருத்தக்களைச் சித்தாந்தத்திலும் காணலாம். இந்த அளவில் சித்தாந்தத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் சமரசம் எட்டுகிறது.
ஆனால் உயிரும் உலகும் பிரம்மத்திலிருந்து தோன்றியவை, பிரம்மத்துக்கு அவை விசேடணங்கள் என்ற விளக்கங்கள் தந்து, பிரம்மத்தை இராமனுசர் முதன்மைப்படுத்துகிறார். இவற்றுக்கும் இறைவனனுக்கும் உள்ள உறவு சரீரசரீரி சம்பந்தமாகக் காட்டுகிறார். இவை சித்தாந்தத்துக்கு உடன்பாடற்ற கருத்துக்கள்.
இறை, உயிர், உலகு ஆகியவை எந்த நிலையிலும் வேறுவேறானவை என்பது மத்வரின் கருத்து. இது சித்தாந்தத்துக்கும் உடன்பாடான கருத்தே. இராமனுசர் காட்டும் சரீர சரீரி சம்பந்தம் அவருக்கு உடன்பாடற்றது.
சைவ சித்தாந்தம் போல் இராமனுசர் மத்வர் ஆகியோரின தத்துவங்கள் சமயத்துடன் இணைந்தும், ஆகமங்கள் புராணங்ளைத் தழுவியும் செல்கின்றன. இந்தப்போக்கை சங்கரரின் தத்துவத்தில் காணமுடியாது.
சித்தாந்தத்திலும் அத்வைத விசிஷ்டாத்வைத வேதாந்தங்களிலும் காணமுடியாத இரு கருத்துக்கள் மத்வரின் தத்துவத்தில் உண்டு. நரகத்தில் சென்று நிரந்தரமாக உழலும் ஆன்மாக்களும் உண்டு என்பது ஒன்று. உயிர்கள் இறைவனை அவனின் மகன் வாயுவின் மூலமே அடையமுடியும் என்பது இன்னொன்று. சித்தாந்தத்திற்கு உடன்பாடற்றவை இவை. ஆயினும் இராமனுசரின் கருத்துக்களைவிட மத்வரின் துவைத வேதாந்நக் கருத்துக்கள் சித்தாந்தத்துக்கு அண்மையில் இருப்பதை உணரமுடிகிறது.
உபநிடதங்கள்
வேறுபட்ட வேதாந்த தத்துவங்களுக்கு உபநிடதங்களின் தெளிவின்மையே மூலகாரணம். வேவ்வேறு விளக்கங்களுக்கும் இடமளித்த பிரம்மசூத்திரக் கருத்துக்களுக்கும் இதுவே காரணம். இது கறித்துக் காலத்துக்குக் காலம் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உபநிடதங்கள் கூறுவது என்னவென்று அறியமுடியாத நிலை இருப்பதாக இந்திய தத்தவ அறிஞர் பேராசிரியர் எம். கிரியன்னா பின்வருமாறு எழுதுகிறார்:
‘வுhநசந யசந பசநயவஇ யடஅழளவ iளெரசஅழரவெயடிடநஇ னகைகiஉரடவநைள in னநஉனைiபெ றாயவ நஒயஉவடல ளை வாந வநயஉhiபெ ழக வாந ருpயniளாயனள in உநசவயin iஅpழசவயவெ சநளிநஉவள. வுhளை யஉஉழரவௌ கழச வாந நஅநசபநnஉந in டயவநச வiஅநள ழக னiஎநசளந ளஉhழழடள ழக ஏநனயவெயஇ யடட ழக றாiஉh உடயiஅ வழ pசழிழரனெ வாந ருpயniளாயனiஉ வநயஉhiபெ’. – (வுhந நளளநவெயைடள ழக ஐனெயைn Phடைழளழிhலஇ ஆ. ர்சைலையnயெஇ ஆழவடையட டீயயெசளனையளள Pரடிடiளாநசள Pஎவந டுவனஇ னுநடாiஇ 1995)
‘முக்கிய சில துறைகளில் உபநிடதங்கள் தரும் விளக்கங்கள் என்னவென்று தீர்மானிப்பதில் அளவுகடந்த பெரும் இடர்கள் உள்ளன. பிற்காலத்தில் உபநிடதக் கருத்துக்களைத் தருவதாகக் கூறும் வேறுபட்ட வேதாந்தத் துறைகள் உருக்கொள்வதற்கு இதுவே காரணமாக அமைந்தது’.
உபநிடதங்களின் தெளிவற்ற சிந்தனைக்கு பிற்காலத்தில் இடைப்புகுந்த பல புதிய கருத்துக்களும் வழிவகுத்தன. யாழ்ப்பாணத்துக் குப்பிளான் என்ற ஊரில் பிறந்து, காசியில் பத்தாண்டுகள் வேதாகம ஆராய்ச்சி செய்தவர் காசிவாசி செந்திநாதையர் என்ற அறிஞர். தவத்திரு ஆறுமுகநாவலருடன் இணைந்து பணி செய்தவர் இவர். உபநிடதங்களிலுள்ள இடைச்செருகல்களைத் தகுந்த ஆதாரங்களுடன் தனது ‘சைவ வேதாந்தம்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். “சைவ வேதாந்தம் என்பது சிவபெருமானைப் பிரதிபாதிக்கும் வேதாந்தம். சைவசமயிகளுக்குரிய வேதாந்தம் எனவும்படும்” என்ற விளக்கமும் அதில் தரப்பட்டுள்ளது.
உபநிடதங்களிலும் பிரமசூத்திரத்திலும் காணும் சிவபரத்துவத்தையும் சித்தாந்தக் கருத்தக்களையும் மறைத்து வேதாந்திகள் கொடுத்த விளக்கங்களையும் உரைகளையும் வெளிக்காட்டுவதாக நீலகண்ட சிவாச்சாரியாரின் பேருரை வெளிவந்தது. அவற்றில் புகுந்த இடைச் செருகல்களையும் அது வெளிக்கொணர்ந்தது. நீலகண்ட பாஷ்யம் எனும் இந்நூல் சங்கரர் போன்ற வேதாந்திகளின் வாதத்தை முறியடித்து சித்தாந்தத்ததை நிலைநாட்டுவதாக அமைந்தது. (இதிலுள்ள உயிர் உலகு பற்றிய ஒரு கருத்து சித்தாந்தத்திற்கு உடன்பாடற்றதாக இருப்பது குறிப்பிடத்தக்கது). இதனால் இந்நூலைச் செந்திநாதையர் தமிழிலே மொழிபெயர்த்தார்.
வேதாந்தத் தெளிவு
சைவத்தின் வளர்ச்சியில் அருளாளரும் தத்துவ ஞானிகளும் வேதத்துக்கும் ஆகமத்தக்கும் இடையில் ஒரு இணைப்பைக் கொண்டுவர விழைந்தனர் எனலாம். இறை, உயிர், உலகு குறித்து உருவான சிந்தனையை முதலில் வேத இலக்கியங்ளிலே காணமுடிகிறது. சிவாகமங்களிலும் சித்தாந்த சைவத்திலும் முக்கிய இடம் பெறும் திருநீறு போன்ற சிவசின்னங்கள், திருவைந்தெழுத்துப் போன்ற மந்திரங்கள், சித்தாந்தக் கருத்துக்கள் ஆகியவற்றையும் உபநிடதங்களில் காணலாம். இக்கருத்தக்கள் பல தேவாரங்களிலும் உள்ளன. செந்திநாதையரின் ‘தேவாரம் வேதசாரம்’ என்ற நூல் இது குறித்ததாக அமைந்தது.
ஆனால், முன்காட்டியவாறு, வேதநூற் கருத்துக்கள் பல தெளிவின்றியும் முரண்பாடுகளுடனும் இருப்பதால் தவறானதும் வேறுபட்டதுமான விளக்கங்களுக்கு இடமளித்தன. உதாரணமாக “ஏகம் ஏவ அத்விதீயம் பிரமம்” என்பது பிரமம் குறித்த ஒரு இருக்குவேதத்; தொடர். இதன் நேர்பொருள், ‘ஒன்று என்பது ஒன்றே, பிரமம் இரண்டற்றது’ என்பதாகும்.
இதற்கு சங்கரர் போன்ற வேதாந்திகள், ‘பிரமம் ஒன்றுதான் உள்பொருள்; அதற்கு இரண்டாவதாக எதுவும் இல்லை’, என்று பொருள் கண்டனர். இதன் அடிப்படையிலே சங்கரரின் வேதாந்தம் ‘பிரமம் ஒன்றே உண்மைப் பொருள்; உயிரென்று இரண்டாவது பொருள் எதுவும் இல்லை, அதுவும் பிரமம்தான்; உலகு பிரமத்தின் தோற்றம்’ என்று விளக்குகிறது. இதனாலேயே, உயிர் பிரமத்திலிருந்து வந்தது, ஒரு உயிரே பலவாகத் தோன்றுகின்றது, பிரமம் உலகாகத் தோன்றுகின்றது போன்ற விளக்கங்கள் தரப்பட்டன. ‘அகம் பிரமாஸ்மி’ போன்ற வேத மகாவாக்கியங்களும் இவ்வாறே விளக்கப்பட்டன.
வேதாந்திகள் கொண்ட இக்கருத்துகளின் பொருந்தாமையை விளக்கி, அவற்றை மெய்கண்டார் மறுக்கிறார். ‘ஏகம் ஏவ’ என்பதன் பொருள், ‘ஒன்று எனப்படும் பரம்பொருள் (பிரம்மம்) ஒன்றுதான்’. ‘அத்விதீயம் பிரம்மம்’ என்பதன் பொருள், ‘பிரம்மமாக இரண்டாவது பொருள் இல்லை’ என்பதே. இவ்விளக்கத்திலிருந்து பிரமத்துக்கு வேறாக உயிர் உள்ளது என்பதும் பெறப்படுகிறது. சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரத்து உதாரண வெண்பா இக்கருத்தைக் கொண்டுள்ளது,
‘ஒன்றென்பது ஒன்றேகாண், ஒன்றேபதி, பசுவாம்
ஒன்றென்றநீ பாசத்தோடு உழைகாண் …..’
இவ்வெண்பாத் தொடரின் பொருள், ‘ஒன்று என்று சொல்லப்படுவது பரம்பொருளாகிய ஒன்றையே. பதியாகிய பரம்பொருள் ஒன்றே. பசுவும் பதியும்; ஒன்றென்று சொல்லும் பசுவாகிய நீ பாசத்தினால் கட்டுப்பட்டு உழல்கிறாய்’, என்பதாகும்.
மெய்கண்டாரின் இந்த விளக்கம் வேதாந்திகள் காணும் அத்வைத விளக்கத்தின் பொருந்தாமையைப் புலப்படுத்தி, அதனைத் திருத்தித் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. தெளிவற்றிருக்கும் வேத உபநிடதத் தொடர்களைச் சைவ ஞானிகள் தர்க்கமுறையில் விளக்கித் தெளிவுபடுத்தினர். உமாபதிசிவாசாரியார், தனது சிவப்பிரகாசம் நூலில் ‘வேதாந்தத் தெளிவே சைவசித்தாந்தத் திறன்’ என்று கூறியது இதனை உணர்த்துவதாக உள்ளது.
சமரசம் எங்கே?
தேவாரங்களில் உள்ள வேத உபநிடதக் கருத்துக்களைத் கண்டு செந்திநாதையர் ‘தேவாரம் வேதசாரம்’ என்ற நூலைச் செய்தார். பிரமசூத்திரத்தில் காணும் ஆகமக்கருத்தக்களின தொடர்பில் நீலகண்டர் ‘வேதத்துக்கும் சிவாகமத்துக்கும் பேதம் கண்டிலேம்’ என்று கருதினார். ‘வேதாந்தம் என்னும் உச்சியிற் பழுத்த அருங்கனியின் சாரம் கொண்ட தேன் அமுது சித்தாந்தம்’ எனக் குமரகுருபரர் கூறினார். சித்தாந்தப் பின்னணியில் பார்த்து, வேதாந்தத் தெளிவாய் சித்தாந்தம் விளங்குவதாக உமாபதி சிவாசாரியார் இயம்பினார். ஆயினும் இவர்கள் எல்லோரும் ‘வேதாந்த சித்தாந்த சமரசம்’ பேசினரென்று கொள்ளமுடியாது.
வேதாந்தம் என்பது வேதங்களின் சாரம், இறுதியில் வந்த உபநிடதங்கள், சங்கரர் முதலியோரின் தத்துவங்கள் என்று பலவாறு விளக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் எதுவும் சித்தாந்தத்துடன் சமரசம் காணக்கூடிய நிலையில இல்லை. சித்தாந்த வழக்கில் வேதாந்தம் புறச்சமயமாகக் கொள்ளப்படுகிறது. இந்த நிலயில், ‘சமரசம் எங்கே?’ என்ற கேள்வி எழுகிறது. எனினும்; வேதாந்த சித்தாந்த சமரசம் பற்றித் தாயுமானவர் போன்ற சில ஞானிகள்; பேசியுள்ளனர். இதற்கான காரணம் என்ன?
செந்திநாதையரின் ‘சைவவேதாந்தம்’ நூல் பற்றி பண்டிதர் மு. கந்தையா எழுதுகையில், வேதாந்தம் குறித்து ஒரு விளக்கம் தருகிறார். அது வருமாறு:
‘வேதாந்தம் என்னுஞ் சொற்றொடர் வேதங்களின் அந்தங்களாகிய உபநிடதங்களைக் குறிக்க எழுந்ததொன்று. அத்தொடர்பில் அவ்வுபநிடதங்களில் விளக்கப் பெற்றுள்ள ஆத்மானந்ந அனுபவத்துக்கும் அது பெயராயிற்று. உபநிடதங்களைக் குறிக்குமிடத்து அது காரணப் பெயராகவும், ஆத்மானந்ந அனுபவ ஞானத்தைக் குறிக்கும்போது அது காரண இடுகுறிப் பெயராவும் வழங்கியிருப்பதாகவும் தெரிகிறது. உபநிடத வழியான குறித்த அநுபவ ஞானம் எங்கள் சைவ சாத்திரங்களுக்கு விரோதமானதல்ல’. -(“சைவவேதாந்தம் தந்த ஞானபானு” கட்டுரை, ‘காசிவாசி செந்திநாதையர்’ மலர், செந்திநாதையர் ஞாபகார்த்த சபை, குப்பிழான், 1978).
மேற்கூறப்பட்ட ஆத்மானந்த அனுபவ ஞானமான வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் இடையில் சமரசம் புலப்படுகிறது. தாயுமானவரும் இந்த அனுபவ ஞானத்தை சிவானுபூதி என்று கூறி, ‘வேதாந்த சித்தாந்த சமரச சிவானுபூதி’ குருவருளால் தனக்குக் கிட்டியதாக ‘மௌனகுரு வணக்கம்’ என்ற பாடலில் சொல்கிறார்.
‘சித்தர் கணம்’ பற்றிய அவரின் பாடல்கள் முழுவதிலும் வேதாந்த சித்தாந்த சமரசம் பேசப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் பின்வருமாறு முடிகிறது:
‘வேதாந்த சித்தாந்த சமரசநன் நிலைகண்ட
வித்தகச் சித்தர் கணமே’.
மெஞ்ஞானம் கைவரப் பெற்றவர் வித்தகச் சித்தர். இவர்கள் சிவனை உள்ளே கண்டுணர்ந்து சிவநெறியில் நிற்பவர்கள். ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பது இவர்களின் நிலை. வேதாந்த சித்தாந்த ஞானம் தெளிந்து சிவானுபவம் பெற்று சிவசிந்தனையில் நிற்பவர்கள் இவர்கள். சமரசம் கண்டவர் இந்த வித்தகச் சித்தர் என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.
முடிவுரை
வேத உபநிடதக் கருத்துக்கள் தெளிவற்றும் முரண்பாடுகள் மிக்கும் இருப்பதால் தவறான விளக்கங்களுக்கு இடமளித்தன. முரண்பாடுகளைக் களைந்து அவற்றைத் தெளிவுறத் தர விழைந்த பிரம்ம சூத்திரமும் முரண்பாடுகளுடன் காணப்பட்டது. அதனால் அது வெவ்வேறு விளக்கங்களுக்கும் வேதாந்தக் கொள்கைகளுக்கும் இடமளித்தது. இவ்வாறு உருவானவையே அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் போன்ற வேதாந்தப் பிரிவுகள். இவற்றுக்கும் சித்தாந்தத்துக்கும் சமரசம் காண முடிவதில்லை.
உபநிடதங்களிலும் பிரம்ம சூத்திரத்திலும் புகுந்த இடைச் செருகல்களையும் அவை குறித்த தவறான விளக்கங்களையும் தவிர்த்து, தர்க்க முறையில் சைவ ஞானிகள் அவற்றை விளக்கினார்கள். அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் வேதாந்தத் தெளிவாக சித்தாந்தத்தைக் காணமுடிகிறது.
மெய்ஞ்ஞானம் கைகூடிச் சிவானுபவம் பெற்ற ஞானிகளும் சித்தர்களும் சிவனை உள்ளே கண்டுணர்ந்து சிவசிந்தனையில் நின்றனர். இவர்கள் வேதாந்த சித்தாந்த சமரசம் கண்டுள்ளனர்.