நந்தி

நந்தி

 

போக நந்தி:

கோயிலுக்கு வெளியே கோயிலைநோக்கி அமர்ந்திருப்பவர் இந்திர நந்தி. ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் இந்த அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

அதிகார நந்தி:

கோபுர வாசலின் முன் பக்கப்புறத்தில் நின்றகோலத்தில் காட்சிதருபவர் அதிகாரநந்தி. சில இடங்களில் மகாமண்டபத்தின் முன்பக்கப்புறத்திலும், சில இடங்களில் கருவறையின் முன்பக்கப் புறத்திலும் கூட அதிகார நந்தி அமைந்திருப்பார்.  இவர் சிவனின் சாருபத்தில் இரு கரங்கள் கூப்பிய வடிவில் உள்ளவர்.

முகம் சில இடங்களில் காளை முகமாகவும், சில இடங்களில் குரங்கு முகமாகவும் இருக்கும். சில இடங்களில் அதிகார நந்தி குதிரை முகமாகவும், அமர்ந்த வடிவிலும் கூட உள்ளது.

கைலாய மலையைப் பெயர்க்கச் சென்ற இராவணனை இவர் தடுத்தபோது அவன் இவரது குரங்கு முகத்தை இகழ்ந்து பேசினான். அப்போது நந்திதேவர் உனது குலம் குரங்கினால் நாசமடையக் கடவது என்று சபித்தார்.

பிரம்மசூத்திரத்துக்கு உரை எழுதிய வியாசர் காசியில் அதை விளக்கும்பொழுது உண்மைக்குப் புறம்பாக விஷ்ணுவே பரம்பொருள் என்று கையை உயர்த்தியபோது அவரது உயர்த்திய கையைத் அப்படியே தம்பிக்கவைத்துத் தண்டித்தவர் இந்த அதிகார நந்தி. ஆதலால் தான் காசியின் எல்லைக்குள் எங்கும் வியாசருக்கு கோயிலோ, வழிபாடோ இல்லை. சைவ மரபிலும் வியாசருக்கு குருபூசை இல்லை.

பிரம்ம நந்தி:

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். நெடிய உபதேசமானதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது திருக்கோயில் இராஜகோபுரத்துள் நுழைந்தவுடன் சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.

வேத நந்தி:

பிரம்மதேவர்,படைப்புத் தொழிலைத் தொடங்கும் முன் சிவப்பரம்பொருளிடம் நந்தியாக இருந்து வேதங்களை உபதேசமாகப் பெற்றுக் கொண்டார். அதனால் அவ்விடை பிரம்மநந்தியானது.வேதங்களும் நந்திகளாயின.அவையே,திருமழப்பாடித் தலத்தில் நால்வேத நந்திகளாகக் பிரம்மாவிற்கு முன் காட்சியளிக்கின்றன.

ஆன்ம நந்தி:

பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். உலக நாட்டத்தைப் புறந்தள்ளி இறையையே நோக்கிய படி உள்ள முத்தான்மாவின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.

மால்விடை:

மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது இரண்டாம் ஆவரணமாகிய சக்திஆவரணத்தில் கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

”தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ”

  • திருவாசகம்

தரும நந்தி:

இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக்கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.

சோம நந்தி:

அம்பாளின்  கருவறையின் முன் காட்சிதருபவர் சோமநந்தி.