சைவம் கூறும் அறுவகைச்சமயங்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்
பிணக்குறும் சமயங்களும்;இணக்கமுறும் சைவ நீதியும்.
“புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும் புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவை அடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்
திறத்தடைவர் இதில்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர். “
-சிவஞானசித்தியார் 263ம் பாடல்-
இங்கு புறச்சமயங்கள் என்றது கடவுள் இல்லை என்று கூறும் உலகாயதம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களாம். இன்றும் சைவ சமயத்தில் இருந்தாலும் கடவுள் என்று ஒருவர் இல்லை; இந்த வாழ்க்கை குறுகியது; இதற்குள் இளமை போவதற்குள் அனுபவிப்தை எல்லாம் அனுபவித்து விடவேண்டும் என்று துடிப்புடன் ஓடியோடி அனுபவிக்கத் துடிப்பவர்கள் எல்லாம் உலகாயதர்களே.
கடவுள் என்று ஒன்று இல்லை; நாம் நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும்; தீயதைச் செய்தால் தீமையே விளையும் என்று கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் கர்மாவை ஏற்றுக்கொண்டுள்ள பலர் எம்மிடையே உள்ளார்கள். இவ்வாறு முடிந்தவரை மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இயலுமாயின் நன்மை செய்து வாழ முயலும் சைவர்கள் எல்லாம் பெயரளவிலே சைவர்களாக உள்ள சமணர்களும் பௌத்தர்களுமே.
தமது சுய முயற்சியால் அல்லது எத்தனிப்பால் தமது உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஆணவத்தை அடக்கி ஆன்ம விடுதலை பெற முடியும் என்று கூறுகின்ற சைவர்களும் உண்மையில் பௌத்தர்களே.
சகல மதங்களையும் உள்வாங்கி ஏற்றுக்கொண்டு தனது அங்கங்களாகக் கொண்டுள்ள சைவம் கடவுளை ஏற்றுக்கொள்ளாத இவர்களை எல்லாம் தனது வெளி வட்டத்தில் உள்ள புறப்புறச் சமயங்கள் என்று இனங் காணுகின்றது.
கடவுள் என்று ஒருவர் உள்ளார் என்று ஏற்றுக்கொண்டுள்ள மதங்கள் எல்லாம் இதற்கு உள்ளாக உள்ள வட்டத்தில் வருகின்றன. இவ்வாறு கடவுள் உள்ளதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளுதல் பல பிறவிகளுக்கூடாகவும் வரலாம்; ஒரே பிறவியிலேயே இப்படிமுறைகளினூடாக வரலாம்.
“….தெய்வம் எனபதோர் சித்தம் உண்டாகி….” என்று மாணிக்க வாசகர் இதைக் கூறுகின்றார். இங்கு கடவுளை ஏற்றுக்கொண்ட வேதங்களைக் கொண்ட சுமார்த்தம், வைணவம் முதலான இந்து மதப்பிரிவுகள் அடங்குகின்றன.
வேதங்களையோ அல்லது அவை கூறும் கர்மா மற்றும் மறு பிறப்புகொள்கைகளையோ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தெய்வம் உள்ளது என்று ஏற்றுக்கொண்டு தத்தமக்கு என்று புறம்பான நூல்களைக்கொண்டுள்ள கிறித்தவம், இஸ்லாம், யூத மதம் போன்ற மதங்கள்கூட இப்பிரிவில்தான் அடங்குகின்றன.
கடவுள் என்று ஒருவர் இருக்கின்றார்; ஏற்றுக்கொளகின்றேன். ஆயினும் நான் செய்யும் நல்லதும் கெட்டதும்தான் எனது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. இதிலே கடவுள் தலையிட்டுச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அல்லது அவரால் அவ்வாறு தலையிட்டு என்னை மீட்கவோ அல்லது தண்டிக்கவோ முடியாது என்று கடவுளைவிட நாம் செய்யும் நல்வினை, தீவினை ஆகிய கர்மாக்கள் பலமானவை என்று கூறும் சைவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சைவர் என்ற பெயரில் உள்ள மீமாம்சகர்கள். மீமாம்சகர்கள் நாம் செய்யும் கர்மாக்களினால் கடவுளையே எமது கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று நம்புபவர்கள்.
இதேபோல தமது சுய முயற்சியினால் உள்ளத்தை தூய்மைப்படுத்தி, ஆணவத்தை அடக்கி ஆன்ம விடுதலை அடையலாம் என்று தமது சுய முயற்சியிலேயே தங்கி இருப்பவர்களும் மீமாம்சகர்களே. பௌத்தர்களும் இவ்வாறு தமது சுய முயற்சியினால் பஞ்சசீலங்களை மேற்கொண்டு அட்டாங்க யோகம் வழி ஒழுகி வர ஆன்ம விடுதலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனாலும் அவர்கள் கடவுள் என்று ஒன்று உள்ளதாக ஏற்றுக்கொள்வதில்லை.
இவ்வாறு பல கலைகளையும், புராணங்களையும், வேதங்களையும் அறிந்து தவ நெறிகளை மேற்கொண்டு ஒழுகி இவற்றின் உச்சமாக உள்ள உபநிடதங்களின் வேதாந்த கருத்துகளை உணர்ந்து தெளிந்து அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் ஆகியவற்றுள் ஒன்றை தமது வேதாந்தமாக உணர்ந்து ஒழுகும் சைவர்கள் உண்மையில் சுமார்த்தர்களே.
மெய்யியலின் நுணுக்கமான பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மைகளைக் கூறும் ஆகமங்களை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் சகல மதங்களையும் உள்வாங்கி உலகளாவியுள்ள சைவத்தின் உள்ளக வட்டத்தில் வருகின்ற அகச் சமயிகளாம்.
பாடாணவாத சைவம், பேதவாதசைவம், சிவசமவாதசைவம், சிவசங்கிராந்தவாதசைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்கின்ற ஆறு சமயங்களும் வேதங்களைப் பொது நூலாகவும், ஆகமங்களை சிறப்பு நூல்களாகவும் ஏற்றுக்கொண்டு, அவை கூறும் பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை என்கின்ற ஆறு இருப்புக்களையும் ஏற்றுக்கொள்வதால் சைவத்துக்கு மிக அணித்தாக மையநோக்க வட்டத்திலே மையத்துக்கு அணுக்கமாக உள்ள அகச்சமயங்கள் ஆறாகக் கொள்ளப்படுகின்றன. இவை முத்திநிலையை பற்றிய கருத்திலே தமக்குள்ளும், சைவத்திலிருந்தும் வேறுபடுகின்றன.
“அறுவகைச் சமயத்தோர்க்கு அவ்வவர் பொருளாய்” என்று சிவஞான சித்தியார் இவ்வாறு ஆறு ஆறாக நாம் காணுகின்ற இச்சமயங்களுக்கு அவ்வவற்றின் பொருளாயும் முடிபாயும் இருப்பது சிவனே என்று கூறுகின்றது.
ஆறு ஆறாக வகுக்கப்பட்டுள்ள இந்த சமய வட்டத்தில் மையமாக சைவம் காட்டப்பட்டுள்ளது. அந்தந்த மதங்களில் உள்ளவர்கள், அந்தந்த ஆசாரங்களைக் கடைப்பிடித்து ஒழுகி, அந்தந்த மதங்கள் கூறும் சுவர்க்கம் போன்ற போகங்களையும், பத முத்தி நிலைகளையும் அனுபவித்து, அவற்றின் நற்பயனால் இறுதியில் சைவ நெறியின் படி ஒழுகி, பர முத்தி நிலையாகிய மீளாத இறையின்பம் பெற்றுய்வர் எனச் சைவ நூல்கள் கூறும்.
“அறுசமயத்திற் கடந்த சைவத்தின் அன்றி வீடிலதெனத் தெளிந்து”
-கந்தபுராணம் பாடல் 83-
உலகின் கடந்த கால, நிகழ் கால, எதிர் காலத்துச் சமயங்கள் எல்லாம் இவ்வாறு இறைவனை அடைய உதவும் படிமுறைகளே; இப்படி இறைவனை அடைய உதவும் சைவத்தின் ஏணிப்படிகளே என சைவம் கூறுகின்றது. இந்த படிமுறை நெறியை சோபான மார்க்கம் எனக்கூறுவர்.
“…முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்….”
“பேணித் தொழுமவர் பொன்னுலகு ஆளப் பிறங்கருளால் ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்து…”
– திருநாவுக்கரசர் தேவாரம், திருவையாற்றுப்பதிகம்.
இவ்வாறு நாத்திக வாதம் உட்பட உலகின் எல்லா மதங்களையும் உள்வாங்க சைவத்தின் மெய்யியல் இடம் தருகின்றது. ஆனால் ஏனைய மதங்களில் ஒன்றுகூட இவ்வாறு பிற மதங்களில் ஒன்றையோ, தமது உட்பிரிவு மதங்களைக்கூட ஏற்று உள்வாங்க அவற்றின் மெய்யியல் கொள்கைகள் இடம் கொடுப்பதில்லை.
சைவம் எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்வதுபோல அவற்றால் ஒரு புற மதத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏன் தமது மதத்தின் ஒரு உட்பிரிவைக் கூட ஏற்றுக்கொள்வதில்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்ளும்போது ஒன்றில் அவர்களின் சமய மெய்யியலில் இருந்து வழுவுகின்றார்கள்; அல்லது சைவம் கூறும் ஏணிப்படி வழியில் மேலேறி சைவத்தின் உள் வட்டத்துக்குள் வருகின்றார்கள்.
இவ்வாறு உலக மதங்களுக்கு எல்லாம் புறம்பாக இல்லாமல் மையமாக இருப்தால்தான்
‘”மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்”‘ என்று கந்த புராணமும்
“‘ராசாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம்”‘ என்று தாயுமானார் பாடலும் கூறுகின்றன.
இவை ஒன்றும் வெற்றுத் தம்பட்டம் அல்ல. சைவம் விளங்கினால் உலகின் எல்லா மதங்களும் விளங்கும். அவ்வச் சமயத்தவர்கள் அவ்வச்சமய வழிப்படி ஒழுகி வாழ வழிகாட்டும் உலக சமயமே சைவம். எந்தச்சமயத்தில் இருந்தாலும் இந்தச்சைவத்தை பெயர் உணர்ந்தோ, உணராமலோ ஏற்றுக்கொண்டால் ஒழிய மதங்களினால் உலக சமாதானமும், மனித குல ஐக்கியமும் சாத்தியமில்லை.
இவ்வாறு உலகின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சமயக்கொள்கைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு அவற்றுள் ஒன்றையுங்கூடப் புறந்தள்ளாது உள்வாங்கி தனது அங்கங்களாக்கியும் எல்லா மதங்களும் ஒன்றுதான்; ஒரே இலக்கையே அடைய உதவுகின்றன என்ற மேலோட்டமான ஆன்மீக வாதங்களால் தனது தனித்துவத்தை இழக்காமலும் உள்ளது சைவம்.
சைவம் மற்ற மதங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதே வேளை அவற்றுக்கும் சைவத்துக்கும் உள்ள வேறுபாடுகளையும் எடுத்துரைக்கின்றது. பிற மதக் கருத்துக்களை அவ்வாறே தமது நூல்களில் எடுத்துச் சொல்லி அவற்றுக்கும் சைவத்துக்கும் இடையே உள்ள பேதங்களை விளக்கும் வழமை உலக சமயங்களிலேயே சைவத்துக்குத்தான் உள்ளது. வேறு எந்த சமயமும் இன்னொரு சமயத்தைப் பற்றி தமது தத்துவ நூல்களிலே விளக்குவதில்லை. இந்த ஆரோக்கியமான அணுகுமுறை சைவத்தின் தனித்துவம்.
எதிர்ச்சமயங்களை மட்டுமல்ல அவர்களது கலாச்சாரத்தையும், மக்களையுமே சுவடுகள் இன்றிப் புத்தியாலும், கத்தியாலும் வேரறுத்து உலக சமாதனமும் ஐக்கியமும் காண முயலும் இன்றைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
யாதுசமயம்? பொருள்நூல் யாதிங் கென்னில்?இதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்கதின்றி நீதியினால் இவையெல்லாம் ஒரிடத்தே காண நின்றதியாதொரு சமயம் அதுசமயம் பொருள்நூல்! ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே அடங்கியிடும் அவையிரண்டும்
அரனடிக்கீழ் அடங்கும்.
-சிவஞான சித்தியார்- சுபக்கம்- பாடல் 265-
-நன்றி Dr. இ. லம்போதரன் (MD).
See Translation
All reactions:

29