பஞ்சாக்ஷர ஜெபத்திற்குரிய விஷேச காலங்களும் இயம நியமங்களும். மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 10

பஞ்சாக்ஷர ஜெபத்திற்குரிய விஷேச காலங்களும் இயம நியமங்களும்.
மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 10

193. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

விளக்கக் குறிப்பு: 1.
வெறுந் தரையில் அமர்ந்தது கொண்டு செபம், பூசை, தியானம், நூல்களின் படிப்பு, பாராயணம் என்பன செய்தலோ செய்வித்தலோ ஆகாது. ஆலயங்களில் மட்டும் இதற்கு விதி விலக்கு உண்டு.

விளக்கக் குறிப்பு: 2.
“சுழுனையிற் சொல்லாம் இரண்டும், சுத்ததனு வாமத்து,
அழிவில்லா முத்தி வலத் தாம்”
சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, பொது அதிகாரம், குறள் -158

194. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?
சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபம் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.
(கௌபீனம் – கோவணம் அல்லது உள்ளாடை; வாதம் – அசைதல்)

விளக்கக் குறிப்பு: 1.
இங்கு புலையர் என்றது சற்றெனும் கூச்சம் இன்றி இழிவான கொடிய செயல்களைச் செய்யும் தீயவர்களைக் குறிக்கின்றது.
“ஆதியின் மேல் உற்ற திருநீறும், சிவாலயமும் உள்ளத்துச்செற்ற புலையர் பால் செல்லாதே”
சிவபெருமான் திருமேனியிலே தரிக்கப்படும் திருநீற்றையும் சிவன் வீற்றிருக்கும் ஆலயங்களையும் மனதால் வெறுக்கும் இழிசனர் பக்கம் செல்லாதே.
– பண்டார சாத்திரம், சிந்தாந்தப்பஃறொடை 160

விளக்கக் குறிப்பு: 2.
“சாதியுற்றார்க்கில்லைத் தகுஞ்சமயம் சங்கமமாம்
நீதியுற்றார்க்கில்லை நிகழ்சாதி- பேதமற்ற
அங்கத்தார் தங்களுக்கங் காவியில்லை ஆவியுறும்
சங்கத்தார்க் கில்லைஉடல் தான்”
சாதிக்கே முதன்மை கொடுப்பவருக்கு சமய நெறி இல்லை.அடியார்களை சிவமாகவே பேணிஒழுகும் சமய நீதி உற்றவருக்குச் சாதிப்பற்று இல்லை.
– பண்டார சாத்திரம், சித்தாந்த சிகாமணி 81.

விளக்கக் குறிப்பு: 3.
சைவத்தின் சாதி நெறி – ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் link…
https://m.facebook.com/story.php?story_fbid=161697820306467&id=100093987489378&mibextid=Nif5oz

விளக்கக் குறிப்பு: 4
பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீட்சை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்கும் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவரும் தப்பாது நரகத்தில் வீழ்வர்.
சொற்பொருள்: பூர்வ = முந்தைய
– சைவவினாவிடை 336, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

விளக்கக் குறிப்பு: 5.
சைவத்தின் சாதி நெறி – link…
https://m.facebook.com/story.php?story_fbid=155367697606146&id=100093987489378&mibextid=Nif5oz

195. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?
பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கில் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கில் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படில் பாவம் உண்டாம்.

சொற்பொருள்:
பரிவட்டம் – துணியினாலான மறைப்பு,
ஆழி விரல் – மோதிர விரல்

விளக்கக் குறிப்பு – 1
“பரர்பார்வைப் பட்டால் பலியா செபங்கள்
பரர்பாரா வண்ணம் பரி”
மற்றவர் பார்ப்பதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யும் செபம் பலன் தராது.
– காழி மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய
சைவசமய நெறி, பொது அதிகாரம், குறள் 149
“ஓசையுறில் பாவ முறும்அதனால் மாலைதனில்
ஓசைஉறா மல்செபிக்க ஒர்ந்து”
– காழி மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய
சைவசமய நெறி, பொது அதிகாரம், குறள் 150
“வெறுத்தான் உடன்மாலை மேற்புரிக; போகம்
பொறுத்தான்கீழ் நோக்கிப் புரி”
உலக வாழ்வை வெறுத்தவர் முத்தி வேண்டி மேல் நோக்கி செபமாலையை உருட்டி செபிக்கவும். மற்றவர்கள் போகத்தின் பொருட்டு செபமாலையைக் கீழ் நோக்கி உருட்டி செபிக்கவும்.
– காழி மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய
சைவசமய நெறி, பொது அதிகாரம், குறள் 157

196. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?
ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோட்சத்தையும், நடுநிற்கு நாடியாகிய சுழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோட்சம் என்னும் இரண்டையும் பெறுவர்.

விளக்கக் குறிப்பு:
“சுழுனையிற் சொல்லாம் இரண்டும், சுத்தனு வாமத்து,
அழிவில்ல முத்தி வலத்தாம்”
சுழுனை என்னும் நடு நாடியிலே பிராணன் நடக்கும்போது செபித்தவர் போகம், மோட்சம் இரண்டும் பெறுவர். வாமம் என்னும் இட கலையிலே பிராணன் நடக்கும்போது செபித்தவர் சுத்த மாயா உலக போகங்களைப் பெறுவர். பிங்கலை என்னும் வலப்பக்கத்து நாடியிலே பிராணன் நடக்கும்போது செபித்தவர் முடிவில்லா மோட்சத்தைப் பெறுவர்.
– காழி மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய
சைவசமய நெறி, பொது அதிகாரம், குறள் 158

197. ஸ்ரீ பஞ்சாட்சர செபம் எவ்வெக் காலங்களிலே விசேஷமாகச் செய்யத் தக்கது?
அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், பன்னிரண்டு மாதப்பிறப்பு, #கிரகணம், சிவராத்திரி, அர்த்தோதயம், மகோதயம் முதலாகிய #புண்ணிய_காலங்களிலே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து, தியானம் செபம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும். சித்திரை, ஐப்பசி என்னும் இவ்விரண்டு மாதப் பிறப்பும் விஷு எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறத்தற்கு முன்னெட்டு நாழிகையும் பின்னெட்டு நாழிகையும் புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு, தட்சணாயனம் எனப்படும். இதிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு உத்தராயணம் எனப்படும்; இதிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாதப் பிறப்பும் விட்டுணுபதி எனப்படும்; இவைகளிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி என்னும் இந்நான்கு மாதப்பிறப்பும் சடசீதிமுகம் எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். #சூரிய_கிரகணத்திலே_பரிசகாலம்_புண்ணியகாலம்; #சந்திர_கிரகணத்திலே_விமோசன_காலம்_புண்ணியகாலம். அர்த்தோதயமாவது தை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையும் திருவோண நட்சத்திரமும் விதிபாத யோகமும் கூடிய காலம். மகோதயமாவது தை மாதத்திலே திங்கட்கிழமையும் அமாவாசையும் திருவோண நக்ஷத்திரமும், விதிபாத யோகமும் கூடிய காலம்.

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).