அஞ்செழுத்தின் சூட்சுமம் -மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 07

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 07
#அஞ்செழுத்தின்_சூட்சுமம்
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்ற நாதன் அம்பலத்தில் ஆடுமே.
– சித்தர் சிவவாக்கியர் பாடல்
சுவர்க்கத்தில் இன்பம் அனுபவித்த உயிர்கள் தமது அனுபவ காலம் முடிந்ததும் மனிதப் பிறப்பு எடுப்பதற்காக,
1. வானில் உள்ள சுவர்க்கத்தில் இருந்து,
2. மேக மண்டலத்தினை அடைந்து மழை நீரினூடாக பூமியை அடைகின்றது.
3. மண்ணில் தாவரங்களில் தங்கி,
4.உணவாக ஆணின் உடலை அடைந்து அங்கு சுக்கிலத்தை அடைகின்றது. ஆணில் இரண்டு மாதம் தங்கிய பின்னர் (ஆணில் ஒரு விந்துக் கலம் உருவாவதற்குரிய காலம் – spermatogenesis – இரண்டு மாதங்கள்),
5.கர்ப்பாதானம் என்னும் ஆண் பெண் சேர்க்கையினூடாகப் பெண்ணின் கருப்பையை அடைகின்றது.
இவ்வாறு வான், மழை நீர், உணவு, ஆணின் சுக்கிலம், பெண்ணின் கருப்பை என்னும் ஐந்து இடங்களிலே ஆகுதி செய்யப்பட்டு வந்து ஆன்மா மனிதப்பிறவி எடுப்பதை #பஞ்சாக்கினி_வித்தை என்று வேதம் கூறுகின்றது. இந்த ஐந்து இடங்களையும் குறிப்பது அஞ்செழுத்து. இதையே இங்கு ”அஞ்செழுத்திலே பிறந்து” என்று கூறினார்.
– பிரம்ம சூத்திரம் 3:1:1
– சாம வேதம் – சாந்தோக்கிய உபநிடதம் 5:3: 03-05
– சாம வேதம் – சாந்தோக்கிய உபநிடதம் 5:10:01-08
– சுக்ல யசுர் வேதம் – பிருஹதாரண்ய உபநிடதம் 6
– சிவஞான மாபாடியம் -2ம் சூத்திரம் – 3ம் அதிகரணம்.
பழந்தமிழர் அறிந்திருந்த #பஞ்சாக்கினி_வித்தை
அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர்
அறிவின் முதிஞரே ஆவர் – அறிகரியோ
தான் கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள்
தான் கொண்ட சூலறியார் தான்.
தனது குழந்தைகளை மனைவியானவள் பத்து மாதம் சுமப்பதற்கு முன்னர் தான் இரண்டு மாதங்களாச் சுமப்பதை அறிந்திராத ஆண்கள் பெண்களைவிட அறிவில் குறைந்தவர்களே.
– இடைச்சி பூங்கோதையின் தனிப்பாடல்
குறுமுனி நேர் தமிழ் ஆழியுண் வாணர் குழாம் வியப்ப
அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்று அறுதியிட்டுச்
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே.
அகத்தியர் கடலைத் தமது உள்ளங்கையால் பருகியது போலத் தமிழைப் பருகிய அறிஞர் கூட்டம் வியக்கும்படி ஆண்கள் அறிவில் குறைந்தவர்களே என்று அறுதியிட்டு ஆதாரத்துடன் நிரூபித்த இடைச்சி, எம்பெருமான் என்பவரின் மனைவி பூங்கோதை வாழ்ந்த சங்ககிரி உள்ளது இந்த சிறப்பான கொங்கு மண்டலம்.
– கொங்கு மண்டல சதகம் – 65ம் பாடல்
• சூக்கும உடலுடன் கருப்பையை அடைந்த ஆன்மா வளரும் #ஐந்து_உடல்களாவன:
1. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து தூல #பஞ்ச_பூதங்கள்,
கை, கால், நா, சனன அங்கம், கழிவங்கம் என்னும் செயற்கருவிகளான #ஐந்து_கர்மேந்திரியங்கள்,
கண், காது, நாசி, நா, தோல் என்னும் அறிகருவிகளான #ஐந்து_ஞானேந்திரியங்கள்
ஆகிய பதினைந்தையும் கொண்ட #அன்னமய_கோசம் என்னும் எமது #தூல_உடல்
2. சப்தம் என்னும் கேட்கும் ஆற்றல்,
ரூபம் என்னும் பார்க்கும் ஆற்றல்,
ரஸம் என்னும் சுவைக்கும் ஆற்றல்,
ஸ்பரிசம் என்னும் தொட்டுணரும் ஆற்றல்,
கந்தம் என்னும் மணநுகர்ச்சி ஆற்றல் என்னும் #சூக்கும_பூதங்களாகிய #ஐந்து_தன்மாத்திரைகளும்
மனம், புத்தி, அகங்காரம் ஆகிய #அந்தக்_கரணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டு தத்துவங்களினாலான #பிராணமய_கோசம்
3. சித்தம் என்னும் ஆழ் மனமாகிய அந்தக்கரணமான #மனோமய_கோசம்
4.காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து வித்தியா தத்துவங்களினாலான #விஜ்ஞானமய_கோசம்
5. எமக்கென்று ஒதுக்கப்பட்ட மாயை என்னும் #ஆனந்தமய_கோசம் என்பனவாம்.
இந்த ஐந்து கோசங்களாலான உடலில் வளர்கின்றது.
அஞ்செழுத்தும் இந்த ஐந்து கோசங்களையும் குறிப்பதாகும். இதனால் “அஞ்செழுத்திலே வளர்ந்து” என்று கூறினார்.
• நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பஞ்ச பூதங்களாலானது இந்த தூல உடலும், உலகமும், உலகிலுள்ள அனுபவப் பொருட்களும். அஞ்செழுத்து இந்த ஐம்பூதங்களையும் குறிக்கின்றது. பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும், உலகத்தையுமே உண்மை என்று நம்பி அதையே கதி என்று உழலுவதால் ”பஞ்சபூத பாவிகாள்” என்றார்.
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).