ஜபமாலைப் பிரதிட்டை விதி – மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 02

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 02

ஜபமாலைப் பிரதிட்டை விதி –
(வேதங்களை அடிப்படையாகக் கொண்ட #வைதீக_முறையிலான_பிரதிட்டை_முறை )

182. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?
இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தகும். இல்வாழ்வான் நூற்றெட்டுமணி ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.

விளக்கக் குறிப்பு:
“செய்கசெப மாலைநூற் றெட்டினால் பாதியுறச்
செய்யலுமாம் பாதத்துஞ் செய்.”
செபமாலையை நூற்றெட்டு மணிகளினாலும் செய்யலாம்; அதிற் பாதியான 54 மணிகளினாலும் செய்யலாம். நூற்றெட்டின் காற்பங்கான 27 மணிகளினாலும் செய்யலாம். பாதம் – கால், இங்கு காற்பங்கைக் குறிக்கின்றது.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 144

183. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?
இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டுமுக மணியும், பதின்மூன்று முக மணியுஞ் செபமாலைக்கு ஆகாவாம்; அன்றியும், எல்லாமணியும் ஒரே விதமாகிய முகங்களையுடையனவாகவே கொள்ளல் வேண்டும்; பல விதமாகிய முகமணிகளையும் கலந்து கோத்த செபமாலை குற்றமுடைத்து.

விளக்கக் குறிப்பு:
ஒருவிதமே கோவைக் குறுகியஃ தன்றிப்
பலவிதத்தா மாலை பழுது.
எல்லாம் ஒரேவிதமான மணிகளையே ஒரு செபமாலைக்கு கொள்ளுதல் வேண்டும், பலவிதமான மணிகளைக் கொண்டு செய்த மாலை குற்றம் உடையது.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 135.

184. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?
வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழு இழையினால் ஆக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.

185. செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?
முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.

விளக்கக்குறிப்பு: 1.
இடையின் முடிக முகமுகத்தை எய்த
அடிஅடியை ஒன்றச்செய்து ஆய்ந்து.
உருத்திராட்ச மணிகளை ஆராய்ந்து ஒவ்வொன்றையும் முகத்தோடு முகமும், அடியோடி அடியும் பொருந்த வைத்து இடையில் முடிச்சு இட்டு மாலையைச் செய்க.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 145

“ஒன்றியுற நாயகந்தான் உச்சிதனிற் செய்திடுக
என்றும் வரமே யிது.”
செப மாலையின் நுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி அதிலே நாயகம் என்னும் மேரு உருத்திராட்ச மணியைக் கோர்த்து முடிபது எப்போதும் சிறப்பு.
– மறைஞானசம்பந்த தேசிகரின் சைவசமய நெறி, குறள் 146

பாவமும் இல்லை பலனும் அதிகமிலை
கோவையினை மேருவறக் கொள்.
செபமாலையை மேரு மணியில்லாமலும் செய்துகொள்ளலாம். அதனால் பாவம் இல்லை; அதிக பலனும் இல்லையாம்.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 148

விளக்கக்குறிப்பு: 2.
#இருக்கு_வேதம்_அட்சமாலிகா_உபநிடதம்-
இது 108 உபநிடதங்களில் 68வது உபநிடதம் ஆகும். பதினொரு வசனங்கள் கொண்ட இந்த உபநிடதம் முழுவதும் ஜபமாலைப் பிரதிட்டை விதியைக் கூறுகின்றது. இது வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதீக முறையிலான பிரதிட்டை முறை ஆகும்.
#பிரதிட்டை_செய்து_பூசித்த_செபமாலையில் செபித்த மந்திரம் #உடனே_பலனளிப்பதாகும் என்று #குகப்பெருமான் கூறியருளினார் என்பது உபநிடதம்.

‘ஓம் வாங்மே மனஸி’ இதி சாந்தி;|
1. பிரம்மா குஹரிடம் ‘பகவானே! அட்ச மாலையின் வகைகளையும் விதிகளையும் கூறியருளுங்கள்’ என்று கேட்கவே அவருக்கு குஹர் பின்வருமாறு கூறினார்.

2. பவளம், முத்து, படிகம், சங்கு, வெள்ளி, பொன், சந்தனம், தாமரை, மணி, ருத்திராக்ஷம் ஆகியவை அக்ஷ மாலையின் மணி பேதங்கள்.

3. ‘ அ’ முதல் ‘க்ஷ’ வரை (51 அட்சரங்களையும்) அவற்றில் முறைப்படி தியானிக்கப்பட வேண்டும்.

4. ஸூத்ரம் தங்கக்கம்பியாகவோ, வெள்ளிக்கம்பியாகவோ, தாமிரக்கம்பியாகவோ இருக்கலாம்.

5. மணிகளில் ஊடுருவிச் செல்லும் ஸூத்ரம் பிரம்ம ஸ்வரூபம்.

6. பஞ்ச கவ்வியத்தாலும், சந்தனத்தாலும் அபிஷேம் செய்து, அஷ்ட கந்தம் பூசி, தேவ பூஜை ஸ்தலத்தில் வைத்துப் புஷ்ப அக்ஷதைகளால் பூசித்து,

7. ஒவ்வொரு மணியிலும் ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை 51 அட்சரங்களையும் தியானித்து, அட்ச மாலையை எல்லா தேவதைகளின் ஆயதனமாகக் கருதி மகா நைவேத்தியம் செய்து, ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை அட்சரங்களை ‘அம் நம;’, ‘ஆம் நம;’ என்று உச்சரித்து 108 தடவை தொடவும்.

8. பிறகு அதை எடுத்து வைத்துப் பிரதட்சணம் செய்து

9. ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸர்வசங்கரி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே விச்வாம்ருதே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ம்ருத்யுஞ்ஜய ஸ்வரூபிணி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸகல லோகோத் தீபினி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸகல லோக ரக்ஷாதிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸகல லோகோஜ் ஜீவிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸகல லோகோத் பாதிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே திவா ப்ரவர்த்திகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ராத்ரிப் ப்ரவர்த்திகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நத்யந்தரம் யாஸி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே தேசாந்தரம் யாஸி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே த்வீ பாந்தரம் யாஸி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே லோகாந்தரம் யாஸி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸர்வதாப்ஸ்ப்புரஸி
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே ஸர்வஹ்ருதி வாஸஸி

10. ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே பராரூபே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே பச்யந்தீரூபே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே மத்த்யமாரூபே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே வைகரீ ரூபே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே ஸர்வதத்வாத்மிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே ஸர்வவித்யாத்மிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே ஸர்வசக்த்யாத்மிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே ஸர்வதேவாத்மிகே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே வசிஷ்ட்டேன முனினாராதிதே
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே விச்வாமித்ரேண முனினா
ஓம் நமஸ்தே பகவதி மந்த்ரமாத்ருகே
அக்ஷமாலே நமஸ்தே உப ஜீவ்யமானே நமஸ்தே நமஸ்தே
என்று கூறித் தோத்திரம் செய்யவேண்டும்.

11. இப்படிப் பூசித்த அட்சமாலையில் செபித்த மந்திரம் உடனே பலனளிப்பதாகும் என்று குகப்பெருமான் கூறியருளினார் என்பது உபநிடதம்.
இங்ஙனம் அட்ச மாலிகா உபநிடதம் முற்றும்.

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).