மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்? – மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 01

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 01

178. மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?
குருவை வழிபட்டு, அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்துக்கொண்டே செபித்தல் வேண்டும்.

179. ஸ்ரீபஞ்சாட்சரத்திலே நியமமாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

விளக்கக் குறிப்பு:

மனிதராகிய நாம் ஒரு நாளில் 21,600 தடவை சுவாசிக்கின்றோம். காலை 10, 800 தடவை, இரவு 10, 800 தடவை மூச்சு விடுகின்றோம். விடுகின்ற மூச்சில் குறைந்தது நூற்றில் ஒரு பங்கு அதாவது ஒரு வீதமாவது கடவுளை நினைந்து காலையில் 108 முறை, மாலையில் 108 முறை பஞ்சாட்சரம் சொல்ல வேண்டும்.
180. செபத்துக்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?
செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். (விரலிறை=கட்டைவிரல்)

விளக்கக் குறிப்பு:

நெக்குள் ஆர்வம் மிகப்பெருகிந் நினைந்து
அக்கு_மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத் தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.
– 3ம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் #அஞ்சுந்_தம்முடை
அங்கையில்_ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
– 3ம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

ஜெபமாலை தந்த சற்குருநாதா
திருவாவினன் குடிப்பெருமாளே.
– அருணகிரிநாதஸ்வாமிகள் அருளிய திருப்புகழ்.

181. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?
உருத்திராட்சமணி கொண்டு செய்வது உத்தமம்.

விளக்கக் குறிப்பு: 1.

செபத்திற்கு உருத்திராட்ச மாலைதான் சிறந்தது.
உண்டு மணிகள் பலவும் அவற்றுள்ளும்
கண்டி விசிட்டமெனக் காண்
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி – 133வது குறள்

அதாவது உருத்திராட்ச மணி, தாமரை மணி, பளிங்கு மணி, புத்திர தீப மணி, சங்கு மணி எனப்பலவகை மணிகள் உண்டாயினும் அவைகள் எல்லாவற்றுள்ளும் உருத்திராட்சமே விசேடமானது என்று அறிக.

விளக்கக் குறிப்பு: 2.

உ லகில் உள்ள பல சமயங்களுக்கும் செப மாலை உண்டு. அவற்றில் இயற்கையாகவே துளையுள்ள மணிகளால் ஆகிய மாலை உருத்திராக்ஷ மாலை ஒன்றுதான். இது இதற்காகவே படைக்கப்பட்டது என்பதற்கு இதுவே ஆதாரம். தாவரவியல் மற்றும் பரிணாம கூர்ப்பு வழியாக உருத்திராட்சக் கொட்டைகளின் இயற்கையான துளைகளுக்கு விளக்கம் எதுவும் விஞ்ஞானத்தில் இல்லை.

விளக்கக் குறிப்பு: 3.

விரலினால் செபிப்பதிலும் விரலிறையினால் (கட்டை விரலினால்) செபிப்பது எட்டு மடங்கு பலன் அதிகம்; அதிலும் புத்திர தீபமணி மாலை பத்து மடங்கு அதிகம்; அதிலும் சங்கு மணி மாலை நூறு மடங்கு அதிகம்; அதிலும் பவள மணி மாலை ஆயிரம் மடங்கு அதிகம்; அதினும் படிக மணி மாலை பதினாயிரம் மடங்கு அதிகம்; அதினும் முத்து மாலை இலட்சம் மடங்கு அதிகம்; அதினும் தாமரை மணி மாலை பத்து இலட்சம் மடங்கு அதிகம்; அதினும் பொன்மணி மாலை கோடி மடங்கு அதிகம்; அதினும் தர்ப்பைப் பவித்திர முடிச்சு மாலை பத்துக்கோடி மடங்கு அதிகம்; அதினும் உருத்திராட்ச மாலை அநந்த மடங்கு அதிகம். உருத்தராட்ச மாலையை தரிசித்தவருக்கு இலட்சம் மடங்கு பலம்; பரிசித்தவருக்கு கோடி மடங்கு பலம்; சரீரத்திலே தரித்தவருக்கு ஆயிரம் கோடி மடங்கு பலம்; கையிற் கொண்டு செபித்தவருக்கு அநந்த (முடிவில்லாத)மடங்கு பலம்”

விளக்கக் குறிப்பு: 4.

அம்பாள் கூட தனது கையில் அட்சமாலை ஏந்தியிருக்கின்றாள்.
ஓம்_ஸ்ரீ_அக்ஷமாலாதி_தாராயை_நமகா
– லலிதா சகஸ்ர நாமம் – 489.

அக்ஷம் என்றால் கண். இது ருத்திரன் கண்களிலிருந்து வந்த உருத்திராட்சத்தைக் குறிக்கின்றது.

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).