சத்தி பேதங்கள்

சத்தி பேதங்கள்

Dr. Lambotharan Ramanathan (MD)

பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுரன் சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளுக்குப் பெயர் என்ன?

(சக்தி = சத்தி)

பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி;
விட்டுணுவினுடைய சத்தி இலக்குமி;
உருத்திரனுடைய சத்தி உமை;
மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி;
சதாசிவனுடைய சத்தி மனோன்மணி.

விளக்கக்குறிப்பு:
சிவன் எந்த வடிவம் கொள்ளுகின்றானோ அந்த வடிவத்துக்கு ஏற்றதாகச் சக்தியும் வடிவம் கொள்ளும். சிவன் கொள்ளும் வடிவங்களாகிய பரநாதத்திற்கு பரபிந்துவாகவும், சதாசிவனுக்கு மனோன்மணியாகவும், மகேசுவரனுக்கு மகேசையாகவும், சிவனுக்கு உமையாகவும், விஷ்ணுவுக்கு திருமகள் ஆகவும், பிரம்மாவுக்கு வாணியாகவும் ஒரே சக்தியே பல்வேறு வடிவங்களை எடுத்து நிற்கின்றாள்.
ஓரே சக்தியானது பிரஜைகளுக்கு நன்மை பயப்பதற்காக கோபரூபத்தில் காளியாகவும், ஆண் வடிவத்தில் விஷ்ணுவாகவும்,
போகம் தரும்போது பவானியாகவும், யுத்தம் செய்யும்போது துர்க்கையாகவும் வடிவெடுக்கிறாள்.

“சத்தியாய் ,விந்து சத்தியாய்,மனோன்மணி தானாகி,
ஒத்துறு மகேசையாகி உமை, திரு, வாணியாகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சத்தி ஒருத்தி யாகும்”
எத்திற நின்றான் ஈசன்; அத்திறம் அவளும் நிற்பள்.”
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் – 165

“இறுதி செய்திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா
அறைதரு சக்தி நான்காம் அரன்தனக் கையை காளி
முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப் பெறலருஞ் சத்தி யான் இப்பெற்றியும் மறைகள் பேசும்.”
இறையின் ஒரே சக்தியே கோபவடிவில் காளியாகவும்,
போகவடிவில் பவானியாகவும், யுத்தம் புரியும் துர்க்கையாகவும், ஆண் வடிவில் விஷ்ணுவாகவும் நிற்கின்றது என்று வேதங்கள் சொல்கின்றன.
– கந்தபுராணம் – 9798

“ஏகைவ சக்தி பரமேச்வரஸ்ய
ப்ரயோ ஜநார்த்தாய சதுர்விதாபூத்
போகே பவாநீ புருஷேஷு விஷ்ணு
க்ரோதே ச காளீ ஸமரே ச துர்கா”

சொற்பொருள்:
ஏக – ஒன்று;
சதுர் – நான்கு
இறையின் ஒரே சக்தியே கோபவடிவில் காளியாகவும்,
போகவடிவில் பவானியாகவும், யுத்தம் புரியும் துர்க்கையாகவும், ஆண் வடிவில் விஷ்ணுவாகவும் நிற்கின்றது.
– காளிதாசரின் குமாரசம்பவம்

“ஆத்யா சக்திர் மஹேசஸ்ய
சதுர்த்தா பின்ன விக்ரகா
போகே பவானீ ரூபா ச
துர்கா ரூப ச சங்கரே
கோபே ச காளிகா ரூபா
பும் ரூபா ச மதாத்மிகா”

சொற்பொருள்:
பும் – ஆண்;
ம – நான்
இறையின் ஒரே சக்தியே கோப வடிவில் காளியாகவும்,
போக வடிவில் பவானியாகவும், யுத்தம் புரியும் துர்க்கையாகவும், ஆணாக என் வடிவிலும் இருக்கின்றது.
– பிரம்மாண்ட புராணத்தில் விஷ்ணுவின் கூற்று

“கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்
துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ”
வேதியர்கள் அயன்நாவில் விஞ்சைமகள் என்றும்,
சீதரன்தன் மணிமார்பில் செழுங்கமலை என்றும்,
நாதரிடத்(து) அரிவை என்றும், நாட்டுவர் எண்ணடங்கா
ஆதிபரன் மூலபரை யாமளையுன மயக்கால்.
ஆதிபரனுடைய ஒரே மூல சக்தியாகிய உன்னையே, உன்னுடையமயக்கால், பிரம்மாவின் நாவில் சரஸ்வதியாகவும், விஷ்ணுவின் மார்பில் இலக்குமி யாகவும், சிவனின் இடப்பாகத்தில் உமையாகவும் இன்னும் பல வடிவங்களாகவும் காண்கின்றனர்.

– ஆதிசங்கரரின் சௌந்தர்யலஹரி – 97

அழகு தமிழில் வீரைக் கவிராய பண்டிதர்.
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).