ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும், பாகம் – 1

ஆலய வழிபாட்டில்
ஆகம மரபும், நாட்டார் மரபும், பாகம் – 1

எமது சமய வழிபாட்டு மரபில் இரு வகையான பாரம்பரியஙகள் உள்ளதைக் காணலாம்.

1. வேத, ஆகம மரபு / தந்தை வழி மரபு (CONVENTIONAL WORSHIP):

ஆகம நியமங்களின்படி வழிபாடுகளாற்றும் மரபு எங்கும் பரவலாக உள்ளது. இதற்கான விதிமுறைகள் ஆகம நூல்களிலும், அவற்றின் வழி வந்த பத்ததிகளிலும் உள்ளன. இவ்வாறு சைவத்துக்கு இருபத்தெட்டு சிவாகமங்களும், 207 உப ஆகமங்களும், பதினெட்டு பத்ததிகளும் உள்ளன. இவற்றுள் இன்று சைவக்கிரியை மற்றும் வழிபாடுகளுக்கு அடிப்படையாக உள்ளவை காரணம், காமிகம் என்னும் இரண்டு சிவாகமங்களும், முருக வழிபாட்டுக்குரிய குமாரதந்திரம் என்னும் உப ஆகமமும், சோமசம்பு பத்ததி, அகோரசிவ பத்ததி என்னும் இரு பத்ததிகளுமாம். மகுடாகம முறை திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் சிதம்பரம் போன்ற சில ஆலயங்களில் பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

இதே போலச் சாக்தத்துக்கு அறுபத்து நான்கு ஆகமங்கள் உள்ள போதிலும் கௌலம் என்னும் சாக்த அகமமும், யாமளம் என்னும் சைவ/ சாக்த ஆகமமுமே சக்தி வழிபாட்டில் தீவிரமாக உள்ள சாக்தர்களால் பின்பற்றப்படுகின்றது.

”உன் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே”

என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டர் என்னும் பெயர் பெற்ற சுப்பிரமணிய பட்டர் பாடுகின்றார்.

வைணவ மரபில் பாஞ்சராத்திரம், வைகானசம் என்னும் இரண்டு ஆகமங்கள் இராமானுஜர் காலத்தில் இருந்து தெனிந்தியாவில் வழக்கில் உள்ளன. திருவேங்கடத்தில் வைகானச ஆகமமும், திருவரங்கத்தில் பாஞ்சராத்திர ஆகமமும் நடைமுறையில் உள்ளன. இருந்த போதிலும் ஈழத்து வைணவ ஆலயங்களில் சிவனுடைய நவந்தரு பேத வடிவங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படிகின்ற மஹாவிஷ்ணு ஆலயங்களில் தொன்று தொட்டு சிவாகம மரபுப்படியே பூசைகள், திருவிழாக்கள் நடைபெறுவது வழமை. இதற்கான பத்ததி கையெழுத்துப் பிரதியாக ஈழத்துச் சிவாச்சாரியார்களிடம் இன்றளவும் வழக்கில் உள்ளது. ஆயினும் இதுவும் தென்னிந்திய வைணவ ஆகம மரபை ஒட்டி திருத்தப்படுவருவது கவலைக்குரியது. தென்னிந்திய வைணவ ஆகமங்களையும் அதன் வழி ஒழுகும் பட்டர்களையும் ஈழத்திலும் அறிமுகப்படுத்தும் அண்மைக்கால முயற்சிகள் சில இன்றளவும் வெற்றியளிக்கவில்லை.
ஆகமங்களினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள இவ்வளவு வழிபாட்டு முறைகளும் எமது சமயத்தின் தந்தை வழி மரபு எனலாம். இதை நெறிப்படுத்துபவர்களும், நடைமுறைப்படுத்துபவர்களும் சிவாச்சாரியர்களும், அவர்களின் மாணவ மரபினருமே. ஆகமங்களிலும் கூட ஆங்காங்கே மரபுக்குப் புறம்பான தெய்வங்களின் பிரதிட்டைகள் பற்றியும், வழிபாடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவாகம மரபில் உள்ள சிவாச்சாரியார்கள் ஏனைய மரபின் மூர்த்தங்களையும், ஆலயங்களையும் தாபிப்பதிலும், கிரியைகள் செய்வதிலும் அதிகாரம் உள்ளவர்கள் என்றும் சிவாகமங்களில் கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பித்தக்கது.

குருவடி பணிந்து
வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *