உயிர் அல்லது ஆத்மாவின் வரைவிலக்கணம்

உயிர் அல்லது ஆத்மாவின் வரைவிலக்கணம்:

1. ஸர்வம் ஆப்னோதி இதி ஆத்மா

எங்கும் வியாபித்துள்ளது ஆத்மா.

குறிப்பு:
பரமாத்மாவாகிய இறைவனும் எங்கும் வியாபித்து உள்ளான். சீவாத்மாவாகிய உயிரும் எங்கும் வியாபித்துள்ளது. இவ்வாறு எங்கும் வியாபித்துள்ள உயிரின் அண்டப் பரிமாணத்தை அது அறியவிடாமல் கட்டி அதை உடம்போடு கூடிய ஏகதேசப் பரிமாணத்துக்குள் அணுத்தன்மையதாகச் சிறுமைப்படுத்தியிருப்பது ஆணவம். இந்த கட்டு அற உயிர் தனது இறைவனுடன் கூடிய தனது அண்டப்பரிமாணத்தை அறிந்து அனுபவிக்கும்.

2. ஸர்வம் ஆதி இதி ஆத்மா

எல்லாவற்றையும் அனுபவிப்பது ஆத்மா.

குறிப்பு:
எங்கும் நிறைந்து, எல்லாவற்றையும் இயல்பாகவே உணர்ந்தவனாகவும், முற்றறிவு உடையவனாகவும் உள்ள இறைவன் எவற்றையும் அறிய வேண்டியதோ அனுபவிக்கவேண்டியதோ இல்லை. ஆனால் உயிர் கட்டுண்ட நிலையில் உலகை அறிந்து அனுபவிக்கின்றது; விடுபட்ட முத்தி நிலையில் இறையை அறிந்து அனுபவிக்கின்றது. உலகைச் சார்ந்து அதை அனுபவிக்கும்போது உயிரானது உலகைப் போல் சடம் போல உள்ளது. இறையைச் சார்ந்து, இறையை அனுபவிக்கும்போது உயிரானது இறையைப் போல் முற்றறிவுள்ள சித்தாக ஆனந்த மயமாய் சார்ந்ததன் வண்ணமாய் இருக்கும்.

*****பசு என்றால் என்ன ?

பசு என்பது இங்கு உயிர்களைக் குறிக்கின்றது. இது’பச்’ என்னும் சமஸ்கிருத அடிச்சொல்லில் இருந்து வந்தது. பச் – என்றால் கட்டுண்டது என்று பொருள். ஆன்ம அழுக்காகிய மலங்களில் அல்லது மலங்களால் கட்டுண்டிருப்பது உயிர்; ஆகவே இதை பசு என்றனர். பசுவின் தமிழ்ச்சொல்லாகிய மாடு என்பது மாட்டுப்பட்டது என்பதைக் குறிப்பதையும் கவனிக்க.

****உயிரின் வெவ்வேறு பெயர்கள் எவை?

ஆவி, பிராணன், அணு, சேதனன் (சைதன்யம்), பசு, புற்கலன் (புருடன்), சீவன், இயமானன் (எசமான்), ஆதன், பூதன், செந்து, உறவி, கூத்தன் என்று பதின்மூன்று பெயர்கள் உயிருக்கு வழங்குவதாக பிங்கல நிகண்டு கூறுகின்றது. இதைவிட சில இடங்களில் உயிரானது உள்ளம் என்ற பெயராலும், சித்தம் என்ற பெயராலும் கூட குறிக்கப்படுகின்றது.

பசு, உயிர். சீவன், புற்கலன், சேதனன்,
அணு, இயமானன், ஆதன், செந்து,
ஆவி, பூதன், உறவி, கூத்தன்,
ஆன இன்னவை ஆன்மா வாகும்.
– பிங்கல நிகண்டு 312

• என் #உள்ளம் கவர் கள்வன்
-1ம் திருமுறை, சம்பந்தர் தேவாரம்,

• #சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்.
– 8ம் திருமுறை – திருவாசகம்

***உயிர் / ஆன்மா பற்றிய பிறசமயக் கொள்கைகள்****

1. தேக ஆன்மவாதியர் – இவர்கள் இந்த உடலே ஆன்மா என்று கூறுவோர்.

2. அந்தக்கரண ஆன்மவாதியர் – இவர்கள் உள்ளமே ஆன்மா என்பவர்கள்.

3. பிராண ஆன்மவாதியர் – இவர்கள் இந்த உடலின் மூச்சு. இருதயத்துடிப்பு, இரத்தோட்டம் முதலான அத்தியாவசிய உயிர்ச்செயற்பாடுகளே (VITALS)ஆன்மா என்பர்.

4. புத்தியான்மவாதியர் – இவர்கள் புத்தியே (INTELLECT) ஆன்மா என்பர்.

5. சமூகான்ம வாதியர் – இவர்கள் மேற்கூறிய எல்லாவற்றினதும் அல்லது ஒரு சிலவற்றினது சேர்க்கையே ஆன்மா என்பர்.

6. சூன்ய ஆன்மவாதியர் – இவர்கள் ஒன்றுமிலாத சூனியமே ஆன்மா என்பர்.

7. ஏகான்ம வாதியர் – இவர்கள் கடவுளே ஆன்மா என்று வாதிப்பர்.

Book Reference –
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *