சண்டேஸ்வரர் வழிபாடு நோக்கமும் பலனும்

சண்டேஸ்வரர் வழிபாடு நோக்கமும் பலனும்..

“அண்டர்பிரானும் தொண்டர் தமக்கதிபன் ஆக்கி அனைத்துநாம் உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங்கவர் பொற்றடமுடிக்குத்
துண்ட மதிசேர்சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.”
பெரியபுராணம், சண்டேஸ்வரநாயனார் புராணம் – 56

******ஆலயத்தில் தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?******

பிரதட்சிணம் செய்து, சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டுத், தோத்திரம் செய்து, மூன்று முறை கைகொட்டிச், சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து, இடபதேவருடைய இரண்டு கொம்பின் நடுவே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப், பலி பீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து, எழுந்து, இருந்து, ஸ்ரீ பஞ்சாட்சரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமும் செபித்துக் கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

விளக்கக் குறிப்பு: 1.
“சண்டனை அர்ச் சித்தவரே சம்புவை அர்ச் சித்த பலங்
கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்.”
– காழி மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய
சைவசமய நெறி, பொது அதிகாரம், குறள் – 555

விளக்கக்குறிப்பு: 2.
கலியுகத்து சண்டேசர் 63 நாயன்மார்களில் ஒருவரான சிவனடியார். பூசை இறுதியில் செய்யப்படும் சண்டேசர் வழிபாடானது அடியார் வழிபாடு இல்லாமல் அரன் வழிபாடு பலன் தராது என்பதைக் குறிப்பதாகும்.

விளக்கக்குறிப்பு: 3.
அரனுக்குச் சமர்ப்பித்த ஆடை அலங்காரம் மாலை முதலான நிர்மாலியங்களும் அமுது முதலான நைவேத்தியங்களும் சண்டேசருக்கு பூசை இறுதியில் சமர்ப்பிக்கப்படுவது போல சிவனுக்கு சமர்ப்பித்த யாவும் அடியார்களுக்கு சமர்ப்பித்து மிகுதியையே நாம் எடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
பிரசாதங்களை தமக்கு எடுத்துவைத்துவிட்டு அடியவர்களுக்கு விநியோகிப்பது என்பது பூசைப் பலனை இழக்கச் செய்யும். அத்தோடு இது சிவபூசை செய்யப்போய் சேறு பூசிக்கொள்வது போல் சிவ அபராதம் ஆகிவிடும்.

விளக்கக்குறிப்பு:4.
பொதுவாக வழிபாட்டாளர்க்கும், சிறப்பாக அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவோர்க்கும் ‘நந்திக்கு இப்பால் நின்று செய்க’ என்பதுவிதி. பூசை, அருச்சனை செய்வித்துப் பிரசாதம் பெறுவோர்க்கும் ‘நந்தியைக் கடவாமல் நின்றுபெறுக’ என்பதே விதி. நந்தி பரிசுத்தான்மா. அதன் எல்லையை மீறிப்போவது ஆன்மசுத்தி பெறவேண்டியவர்களின் அடக்கப்பண்புக்கு விரோதமாகும் என்ற குறிப்பினாலேயே இவ்விதிகள் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.
– சிவாலயசேவை, ஏன்? எப்படி? – ஏழாலை பண்டிதர் மு. கந்தையா

விளக்கக்குறிப்பு: 5.
கோயிலுக்குச் செல்பவர்கள் தமது வழிபாடு முடிந்தவுடன் அங்கு ஒரு சில நிமிடங்களேனும் தரையில் அமர்ந்திருந்துவிட்டு வருவது வழமை. இது வெறுமனே அமர்ந்திருந்துவிட்டு வருவதற்காக அல்ல; மந்திர செபத்துக்காகவே ஆகும்.

“பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே”
– சுந்தரமூர்த்திஸ்வாமிகள் தேவாரம்

Book Reference
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *