சோதிடமும், பிராயச்சித்தமும்

சோதிடமும், பிராயச்சித்தமும்

நமது கர்மாவை நாமே அனுபவித்து தீர்க்க வேண்டும். இதை சைவம் மட்டுமல்ல இந்து மதப்பிரிவுகள் அனைத்தும், பௌத்தம், சமணம் போன்ற ஏனைய மதங்களும் கூட ஏற்றுக்கொண்ட ஒன்று. ஆயினும் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டி, சேவையினூடாகவும், வழிபாடுகளினூடாகவும் சில பரிகாரங்களைச் செய்யும்போது அது நமது கர்ம பலன்களை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ கூடும். ஆகக்குறைந்தது அதை எதிர்கொள்ளும் மனப்பாங்கையும், மனோபலத்தையுமாவது தரவல்லது.

இவை மிகவும் எளிமையான பரிகார முறைகளே. இவற்றுக்கு அதிக பணச்செலவும் இல்லை.
இந்த எளிய பரிகாரங்களைப் பூசகருக்கோ அல்லது இன்னொருவருக்கோ பணம் கொடுத்தும் செய்விக்கலாம் என்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ஒன்றான சிவப்பிரகாசம் கூறுகின்றது.

“மற்றவற்றின் ஒருவினைக்குஓர் வினையால் வீடு
வைதிக சைவம் பகரும் வழியில் ஆற்றப்
பற்றியது கழியும்; விலையால் ஏற்கும் பான்மையுமாம்”
-சிவப்பிரகாசம் பாடல் 31-

ஆனால் இந்தப் பரிகாரங்கள் அல்லது பிராயச்சித்தங்கள் வைதிக சைவம் பகரும் வழியில் அதாவது வேத ஆகம நூல்களின் பிரகாரம் செய்யப்படவேண்டும். சைவ ஆகமங்கள் இருபத்தெட்டிலும் பிராயச்சித்தவிதி என்று ஒரு படலம் உண்டு. இவற்றை அறியாமல் வெற்றுச் சாத்திரிமார் சொல்லும் போலிப்பரிகாரங்களைப் பெரும் பணச்செலவில் செய்தும் பலன் ஒன்றும் இல்லாமல் அலையும் மக்கள் பலர்.

இவ்வாறு கர்ம வினைகளைக் கழிப்பதற்கு முதலிலே நமது கஷ்டங்களுக்கு காரணம் நமது கர்ம வினைகளே என்ற எண்ணம் வர வேண்டும்; அது என்ன என்று அறிய தகுந்த ஒருவரை அணுக வேண்டும்; அவருக்கு சோதிடத்தோடு வேத ஆகம முறைப்படியான பரிகார வழிகளும் தெரிந்திருத்தல் வேண்டும்; அவர் சொல்லும் பரிகாரங்களை நாம் நம்பிக்கையோடு செய்யவேண்டும்.
இவ்வாறு நமது கஷ்டங்களுக்கு நமது கர்மாவே காரணம் என்று உணராமலும், சோதிடரை நாடாமலும், பரிகாரம் தெரியாமலும் இருந்தாலும் எமது கர்ம வினைகள் கழிவதற்கு வழி உண்டா என்று கேட்கலாம். உண்டு என்று முன்னர் சொன்ன சிவப்பிரகாசம் என்னும் சைவ சித்தாந்த நூல் கூறுகின்றது.

” பண்ணாது பலிக்கும் பான்மையுமாம்”
-சிவப்பிரகாசம் பாடல் 31-

அது எவ்வாறெனில் முன் சொன்ன சைவ ஆகம நூல்கள் கூறும் வழிப்படி நடந்து வந்தால். அவ் வழிகள் எவை என்று கேட்கலாம். அவ் வழிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு படிநெறிகளாம். இப்படி முறைகளை எமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் பரிகாரங்களுக்கு அடங்காத கர்ம வினைகள் கூடச் சோர்ந்து அடங்கி விடும்.

”முன் சொற்றரு நூல் வழியின் வரின் மிகுதி சோரும்”
-சிவப்பிரகாசம் பாடல் 31-

“சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்”

என்ற திருவாசக வரிகள் இவ்வாறு திருமுறைகளை ஓதுவதால் எமது முந்தைய கர்ம வினைகள் ஓயும் என்று கூறுகின்றன.

” சிவசிவ என்றிடத் தீவினை மாளும்” என்று திருமந்திரம் சொல்லுகின்றது.

எமது மதத்துக்கு புறம்பாக உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட “சொற்றரு நூல் வழியின் வரின்” என்பதின் படி அவரவர் மத நூல்களின் படி ஒழுகி வந்தாலே அவர்களுக்கு கர்ம வினைகளினால் ஏற்படுகின்ற துன்பங்கள் கழியும்.

‘தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் எவ்வளவு பெரிதாயிருந்த போதிலும், அவற்றுக்குப் பிராயச்சித்தம் தனிமையில் இருந்து சிவநாமத்தை உச்சரித்தலே’ என்று 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியார் பாடிய சுலோகம் ஒன்று கூறுகின்றது.

‘ஞானாக்ஞான ப்ரயுக்தானாம் பாபானாம் மகதாம்கபி
ஏகாந்த நிஷ்கிரதி; சம்போ: ஸகிர்தேவஹி கீர்தனாத்’
– ஹரதத்த சிவாச்சாரியார்-

ஹரதத்த சிவாச்சாரியார் இந்த சுலோகத்தை பாதி எழுதிய நிலையில் வைத்து விட்டு செல்ல இவர் வடிவில் சிவபிரானே வந்து மிகுதி பாதியையும் எழுதி பூரணப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாறு சிவனே தன் கையினால் எழுதி வைத்த கர்ம பரிகாரம் இது.

நல்ல சோதிடர் யார்?

ஆத்மீகத்தைப் போலவே வேதங்களின் ஆறு அங்கங்களுள் ஒன்றாகிய சோதிடத்துக்கும் குரு பாரம்பரியம் வேண்டும். ஒரு நல்ல சோதிடருக்கு பின்வரும் ஐந்து அம்சங்கள் இருக்கவேண்டும்.

1. குரு பாரம்பரியம் வேண்டும்.

இப்போது ஓய்வு பெற்ற பலர் ஒருவாறு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து ஒன்றிரண்டு சோதிடப் புத்தகங்களை வாசித்து அறிந்துவிட்டு சோதிடராக உலா வருகின்றார்கள். இது பணம் சம்பாதிக்கமட்டுமல்ல மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவும் ஒரு சுலபமான வழி. அடுத்தமுறை ஒரு குடும்ப ஒன்றுகூடலிலோ அல்லது விழாவிலோ நீங்கள் ஒருவருக்கு கை ரேகை சோதிடம் அல்லது எண் சோதிடம் சொல்லிப் பாருங்கள்; கொஞ்ச நேரத்தில் எத்தனை பேர் உங்களைச் சூழ்ந்து கொள்வார்கள் என்று. நீங்கள் புறப்படும்போது பலருக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் வேறு கொடுத்துவிட்டு வரவேண்டியிருக்கும். இதற்கு எந்தவித சோதிடமும் தெரிந்திருக்கத் தேவையில்லை.

2. வாக்கு சித்தி வேண்டும்.

இதற்கு சோதிடருடைய சாதகத்தில் இரண்டாமிடமாகிய வாக்குத்தானம், அதன் அதிபதி என்பன பலம் பெற்றிருக்க வேண்டும். இது சோதிடத்துக்கு மட்டுமல்ல வைத்தியம், வர்த்தகம், அரசியல் போன்ற எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

3. சோதிடருடைய சாதகத்தில் அவருக்கு சோதிடம் கை வருவதற்குரிய பலன் இருக்க வேண்டும். குறிப்பாக புதன் பலம் பெற்று நன்னிலையில் இருக்க வேண்டும். குரு நன்னிலையில் இருந்தாலும் சோதிடக்கலை கை வரும்.

4. தெய்வ வழிபாடு இருக்க வேண்டும்.

சோதிடம் வேதங்களின் ஆறு அங்கங்களில் ஒன்று. இது ஒரு தெய்வீகக் கலை. ( எக்கலை தெய்வீகம் இல்லை என்று கேட்காதீர்கள்) இதை பாவித்து பலன் சொல்லுபவர்கள் தினமும் தவறாது தமது தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை வழிபாடுகள் செய்து ஒழுகி வர வேண்டும். ஏனென்றால் சோதிடம் ஒரு வழிகாட்டலே தவிர முடிந்த முடிபல்ல. தெய்வ சித்தம் என்பது எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தது. இதில் பல அனுபவங்கள் உள்ளன.

5. ஆதரவாக ஆலோசனை சொல்லும் பாங்கு வேண்டும்.

சில சோதிடர்கள் உனது குடும்பம் இந்த வருட இறுதிக்குள் பிரியும் என்றும்; உனது தாயார் இந்த மாத இறுதிக்குள் காலமாவார் என்றும்; உனது துணைவி உன்னை விட்டு நீங்குவார் என்றும் சோதிடம் சொல்லி அனுப்புவதை பார்க்கிறோம். அவர்கள் கணிப்பில் தவறில்லை. ஆனால் அதை சொல்லும் விதம் தவறு.
இதையெல்லாம் பார்க்காமல் சோதிடம் பார்க்கப்போய் பின்னர் சோதிடம் புரட்டு என்று சொன்னால் நாம் என்ன செய்வது!!

www.knowingourroots.com
By Dr.Lambotharan Ramanathan (MD)