ஆலய வழிபாட்டில் ஆகம மரபும், நாட்டார் மரபும். பாகம் – 2.

ஆலய வழிபாட்டில்
ஆகம மரபும், நாட்டார் மரபும். பாகம் – 2.

2. ஆகமத்துக்கு அப்பாலான வழிபாடு / தாய்வழி மரபு வழிபாடு (UNCONVENTIONAL WORSHIP)

எமது கிராமிய வழிபாட்டு முறைகளான பொங்கல், குளிர்த்தி, மடை. படையல், காவடி, தீ மிதிப்பு, கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சிணம், சாமியாடல் யாவும் இவ்வாறான தாய்வழி மரபு வழிபாட்டு முறைகளாகும். இவற்றைப் பற்றிய விபரங்களையோ குறிப்புகளையோ ஆகமங்களில் காணமுடியாது.

வழிபாட்டில் மச்சம், மாமிசம், மது, மாது என்பவற்றுடன் வழிபடும் முறைகளைக் கூறுகின்ற சாக்த ஆகமங்களை வாம தந்திரங்கள் என்று அழைகின்றார்கள். சைவத்தின் அகப்புறச்சமயங்கள் ஆறினுள் சக்தியை முதலாகக் கொண்ட வாமமும் ஒன்று.

இதே விதமான வழிபாட்டு முறைகளுடன் பைரவரை முதலாகக் கொண்ட மார்க்கம் பைரவம். பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்ட சிவன் பைரவ சன்னியாசி வடிவிலேயே வந்ததாகப் பெரியபுராணம் கூறுகின்றது.

“…………………………………அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர் தாம் சித்த மகிழ் வயிரவராய்த் திருமலை நின் றணைகின்றார்.
– பெரியபுராணம்

இதையொத்த இன்னொரு அகச்சமயம் மாவிரதம். இவர்கள் அணியும் பஞ்சவடி என்னும் பூணூல் தலைமுடியினால் ஆனது. மானக்கஞ்சாறரின் மகளின் திருமண மேடையில் வந்து அவளுடைய கூந்தலை தனது பூணூலுக்காகக் கேட்ட சிவன் வந்தது ஒரு மாவிரதி வடிவத்தில் ஆகும்.

வந்தணைந்த மாவிரத
முனிவரைக் கண்டெதி ரெழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ்
சிறந்த பெருந் தொண்டனார்
எந்தை பிரான் புரிதவத்தோர்
இவ்விடத்தே யெழுந்தருள
உய்ந்தொழிந்தேன் அடியேன் என்
றுருகிய அன்பொடு பணிந்தார்.
– பெரியபுராணம்.

இந்த தலைமயிரினால் ஆன பஞ்சவடி என்னும் பூணூல் அணியும் மாவிரதிகள், கபாலத்தைக் கையில் ஏந்தி அதில் பிச்சை ஏற்கும் கபாலிகள், உடலெங்கணும் நீறு பூசித் திரிகின்ற பாசுபதர் முதலானோரைத் தேவாரங்களிலும் பாடியுள்ளதைக் காணலாம்.

“தாட்பாவு கமல மலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்”
– திருநாவுக்கரசர் தேவாரம்,
திருமுறை 6: 67: 04

“அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.”
– திருநாவுக்கரசர் தேவாரம்,
திருமுறை 4 : 20: 03

“நிலையிலா வூர் மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையு நாணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்புந் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.”
– திருநாவுக்கரசர் தேவாரம்,
திருமுறை 4: 64: 04

“பளிங்கின் நிழலுட் பதித்த சோதியானைப், பசுபதியைப் பாசுபத வேடத்தானை”
– திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 6: 91: 02

“உருத்திரனை உமாபதியை உலகானானை உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப்
பஞ்சவடி மார்பினானைப் ”
– திருநாவுக்கரசர் தேவாரம்,
திருமுறை 6: 90: 05

குருவடி பணிந்து
வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com