உயிர் மனித உடலிலே எங்கு உள்ளது?

உயிர் மனித உடலிலே எங்கு உள்ளது?
இறைவன் உலகெங்கும் நீக்கமற நிறைந்து நின்று இயங்குவதுபோலவும், இயக்குவது போலவும் உடலிலே உயிரானது எங்கும் நீக்கமற நின்று இயங்குகின்றது; இயக்குகின்றது. இவ்வாறு இவ்வுலகில் நீக்கமற எங்கும் நிற்கும் இறைவன் தலங்களிலே சிறப்பாக வெளிப்படுவதுபோல உடலில் எங்கனும் நீக்கமற நின்று இயக்கும், இயங்கும் உயிரும் உடலின் சில தானங்களிலும், சக்கரங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது.
அண்டசராசரம் எங்கும் நிறைந்த இறைவனுக்கு அவற்றுக்கு அதீதமான பரலோகம் இருப்பிடமாவது போல உடலிலே எங்கும் நிறைந்து நின்று தொழிற்படும் உயிருக்கு உடலின் கூறுகளுக்கு அப்பாற்பட்ட இருதய கமலம் இருப்பிடமாகின்றது.
இந்த இருதயம் மார்பின் இடப்பக்கமாக அமைந்து இரத்தத்தை உடலெங்கும் செலுத்துகின்ற இதயம் அல்ல.
இருதய கமலம் கவிழ்ந்திருக்கும் தாமரை அரும்பு வடிவில் நடுமார்பில் சற்றே வலப்புறமாக அமைந்திருப்பது. கண்ணாலோ, கருவிகளினாலோ பார்க்க முடியாதது.
• ………………………மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா
சொற்பொருள்: தனு – உடல்
– மெய்கண்டசாத்திரம், சிவஞானபோதம், 3ம் சூத்திரம்
• உயிரானது உடலின் உள்ளே இருக்கின்றதா? வெளியே இருக்கின்றதா? உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றதா? உலகெங்கனும் பரந்து இருகின்றதா? என்று கேட்டால், பிரிவதற்கு கடினமான உடலுணர்வினின்றும் அறிவைப் பாவித்து பிரிந்து நின்று ஆராய்ந்தால் உயிரானது அறிவுமயமாக உள்ளும், புறமும், உலகெங்கும் நிற்பது புரியும்.
சொற்பொருள்: தனு – உடல்.
                           – பண்டாரசாத்திரம், உபாயநிட்டை – 25
• உயிர் உடலின் உள்ளே இருப்பதாகக் கொண்டால் உடல் அழியும்போது அதுவும் அழிய வேண்டும். உயிர் உடலின் வெளியே இருப்பதாகக் கொண்டால் அது உடலின் கருவி கரணங்களையும், புலன்களையும் பொருந்தி நின்று இயக்க முடியாது. உயிரானது எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் வியாபகமான இறையுள் பொருந்தித் தானும் அதனுடன் பிரிவின்றி அத்துவிதமாக எங்கும் பரந்து வியாப்பியமாக நிற்கும் என அறிவாயாக.
                        – பண்டாரசாத்திரம், உபாயநிட்டை – 26
• இருமுலை நடுமார்பு அடிவயிறு இதன்மேல்
இருமுப் பொருளுள நிறம்பல இவற்றுள்
ஒரு பொருள் ஆம்பல் அரும்பென உள்ளே
இருவிரல் வலத்தே யிருப்பது மிதயம்.
                      – இரமண மஹரிஷி, தனிப்பாடல்
• வெள்ளை நிறப் பூவுமல்ல; வேறெந்த மலருமல்ல;
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
             – மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் பாடல்
• நாட்டு மிதயந் தானும்…………………………
………………………………… இந்த விளைவறிந்து போற்றே
           – மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் 300
இதயக்கமலத்தில் உள்ள இந்த உயிரையே நாம் இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகப் பாவித்து மலர் தூவி வழிபடுகின்றோம். மலர் தூவும்போது ஒவ்வொரு முழுமையான மலராக, வலது கையின் பெருவிரல், நடுவிரல், மோதிர விரல் மூன்றினாலும் (மிருகீ முத்திரை) எடுத்து நடுமார்படியிலிருந்து தூவி வழிபட வேண்டும்.
Book Reference –
பசுவியல் – விளக்க முற் குறிப்பு – 8
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD)
அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *