கர்மா முதலில் வந்ததா

கர்மா முதலில் வந்ததா? பிறவி முதலில் வந்ததா?

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
– கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல்

முதற்பிறவியில் நாம் எடுக்கும் உடலாகிய புரியட்ட காயம் நாம் கர்மா செய்யத் தொடங்க முதலே இறைவனால் பாரபட்சமில்லாமல் எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரியாகக் கொடுக்கப்படுவது.

“விச்சதின்றியே விளைவு செய்குவாய்”
– 8ம் திருமுறை – திருவாசகம்

வித்தில்லாமலே நீ வேளாண்மை செய்வாய். வித்து என்பது கர்ம வினை; வேளாண்மை என்பது பிறப்பு அல்லது படைப்பு. இறைவன் வினையில்லாமலே உயிர்களுக்கு முதலுடல் கொடுப்பதையும் அவற்றுக்கு உடல் மட்டுமல்லாது உடலுக்குரிய கருவி கரணங்களையும், உலகங்களையும், உலக அநுபவப் பொருட்களையும் கொடுப்பதையும் இது குறிக்கின்றது.

இதனாலேயே இறைவன் எல்லா உயிர்களுக்கும் அம்மாவாகவும், அப்பாவாகவும் ஆகின்றான். இதனாலேயே நாம் சைவத்தில் இறைவனை அம்மையப்பர் என்று கூறுகின்றோம்.

Note – புரியட்ட காயம் பற்றியபதிவு….
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid02Y71J6QhwzVSrKj5jqYmzkfQ6LHZXkYh6XuqMuRe1QeLogZJ7C6S5f5w31fvB1uTjl?_rdc=1&_rdr

இந்த முதலாவது உடலாகிய புரியட்ட காயத்தினால் உயிர்கள் செய்கின்ற வெவ்வேறு கர்ம வினைகள் அடுத்து வருகின்ற வெவ்வேறு வகைப்பட்ட பிறவிகளைத் தீர்மானிக்கின்றன. இந்தப் புரியட்ட காயத்தை இறுதியிலே பல பிறவிகளினூடாக நாம் முத்தி நிலையில் இறைவனைச் சென்றடையும்போது அவர் அழித்து விடுகின்றார்.

அந்நிலையில் உயிரானது உடலோ மனம், புலன்கள் போன்ற கருவிகரணங்களோ இல்லாமல் நேரடியாக இறையை அநுபவிக்கும் நித்தியானந்த நிலையை அடைகின்றது.

”ஏக போகமாய் நீயும் நானுமாய்”
என்று திருப்புகழ் இதைக் கூறுகின்றது.

Book Reference
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).