கொடியேற்ற விளக்கம்

கொடியேற்ற விளக்கம்

***பிறப்பைப் பொறுத்து உயிர்களின் மூன்று வகையான நிலைகள் யாவை?

01. அநாதி கேவல நிலை – Pre-embodied State of the Souls:

இது முதன்முதலாகப் பிறவி எடுப்பதற்கு முன்னுள்ள உயிரின் நிலை. எண்ணற்ற உயிர்கள் இன்னமும் இந்நிலையில் உள்ளன. இருட்டறையில் கண்ணில்லாத குழந்தை போலக் கட்டுண்டிருக்கும் நிலை. ஆற்றல் இருந்தும் உடலோ, கருவி கரணங்களோ இல்லாமையால் அறிவோ, உணர்வோ, அநுபவிப்போ இல்லாதிருக்கும் நிலை.

02. சகல நிலை – Embodied State of the Souls:

மாறி மாறிப் பிறந்து இறந்து கொண்டிருக்கும் பிறவிச் சுழலில் உள்ள உயிரின் நிலை. இறைவன் கொடுத்த தனு (உடல்), கரண ( மனம், புலன்கள் போன்ற உபகரணங்கள்), புவன (224 புவனங்களாக விரிந்துள்ள பல கோடி அண்டத்தொகுதிகள்), போகங்கள் (அநுபவப் பொருட்கள்) பெற்று,பல்வேறு பிறவிகளினூடாக அறிவும்,அநுபவமும், உணர்வும் சிறிது சிறிதாக விளக்கம் பெறும் நிலை. இவ்வாறு உயிர்கள் பல்வேறுபட்ட பிறவிகளிலே பெறுகின்ற பட்டறிவும் ( அநுபவ அறிவு), சுட்டறிவும் (சுட்டிக்காட்டப்பட்டு அறிகின்ற அறிவு/ படிப்பறிவும்)சிற்றறிவே.

• புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்……….
– 8ம் திருமுறை – திருவாசகம்

03. சுத்த நிலை – Liberated State of the Souls:

பிறவிச்சுழலில் இருந்து விடுபட்டு முத்தியடைந்த உயிரின் நிலை. இந்நிலையில் உயிர் மலங்கள் என்னும் உயிரழுக்குகள் நீங்கி, உடலோ, கருவி கரணங்களோ இல்லாமல், பேரறிவும், பேரின்பமும் உடைய இறையுடன் ஒன்றி பேரறிவும், முடிவில்லாத பேரின்பமும் முடிவின்றி அநுபவிக்கும் சிவத்துவ நிலை. இந்நிலையடைந்த உயிர்கள் மீண்டும் வந்து பிறப்பதே இல்லை.

• சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்…….
• மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே…….
• அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்…….
– 8ம் திருமுறை – திருவாசகம்

கேவல சகல சுத்தம்………………
……………………………………. உற்பவந் துடைத்தே.
– மெய்கண்ட சாத்திரம் – சிவஞான சித்தியார் 227

***கோவிலில் நடைபெறும் கொடியேற்றத் திருவிழாவின் விளக்கம் என்ன?

# கொடிமரத்தின் அடிப்பகுதி -பிறப்புக்கு முந்திய அநாதி கேவல நிலை

# கொடிமரத்தின் நடுப்பகுதி -பிறவிச்சுழலில் உழலும் சகல நிலை

# கொடிமரத்தின் உச்சிப் பகுதி -முத்தியடைந்த சுத்த நிலை

இறைவன் உயிர்களை அநாதி கேவல நிலையில் இருந்து, சகல நிலைக்கு உயர்த்தி ஈற்றில் சுத்த நிலையாகிய முத்தி நிலைக்கு உயர்த்துவதைக் குறிக்கின்றது கொடியேற்றம்.

அந்த மலம் அறுத்து இங்கு ஆன்மாவைக் காட்டி அதற்கு
அந்த அறிவை அறிவித்து அங்கு – இந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி
– மெய்கண்ட சாத்திரம், கொடிக்கவி, பாடல் -5

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *