சைவத்தின் கடவுள் கொள்கை – 01
(கடவுளும் தெய்வமும் ஒன்றா ? )
பதி என்றால் இரட்சிப்பவன், காப்பவன், தலைவன் என்று பொருள். இங்கு எல்லாவற்றுக்கும் தலைவனாகிய கடவுளைக் குறிக்கின்றது. பதியாகிய கடவுளுக்கு பசுக்களாகிய உயிர்கள் அடிமை, பாசமாகிய உலகம் உடைமை.
உலகத்துக்குக் கருத்தா சிவபெருமான். ”கிரு” என்னும் வடமொழி வேர்ச்சொல் செய்தல் என்று பொருள் படும். இதிலிருந்தே கர்த்தா என்னும் சொல் வந்தது. கர்த்தா என்றால் செய்பவர். உலகிற்கு காரணகர்த்தாவாக ஒரு கடவுள் உள்ளார் என்பதைச் சிலர் ஏற்பதில்லை. ஆனாலும் உணர்வும், அறிவும் அற்ற சடமாகிய இந்த உலகம் தானாக உருவாக முடியாது; இதன் பின்னணியில் முழுமையான அறிவுள்ள, முற்றும் உணர்ந்த ஒன்று இருக்கின்றது என்று ஆத்திக மதங்கள் யாவும் கூறுகின்றன.
உலகத்துக்கு காரண கர்த்தாவாகிய ஒரே கடவுளைச் சைவம் சிவம் எனக் கூறுகின்றது; காண்கின்றது; விளக்குகின்றது. இந்த முழுமுதற் கர்த்தாவையே சைவம் சிவபெருமான் என்று காண்கின்றது.
சொற்பொருள்: ஆத்திக – கடவுள் நம்பிக்கை உள்ள
****கடவுள் வேறு; தெய்வம் வேறு.****
கடவுள் ஒருவரே; தெய்வங்கள் பல. சிவன் கடவுள்; உயிர்களுக்குக் கடவுளால் பல வகைப் பிறவிகள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பிறவிகளில் சிறந்த பிறவி தேவர்களும், தெய்வங்களுமாம். மிகுந்த புண்ணியம் செய்த உயிர்கள் கடவுளின் அருளால் தேவர் அல்லது தெய்வம் என்னும் மேலான பிறவிகளாகப் பிறந்து அவ்வப் பதவிகளையும், அதற்குரிய அதிகாரங்களையும் பெற்று அவ்வப் பதவிகளுக்குரிய பணிகளை மட்டும் இறைவன் கொடுத்த அதிகாரத்தின் படி செய்வர். உரிய காலம் கழிந்த பின் அப்பதவியில் இருந்து நீங்கி தமது அடுத்த பயணத்தைத் தொடர்வர்.
சமய நூல்களில் பேசப்படுகின்ற பிற கடவுளர் எல்லாம் இவ்வாறான தேவர்களும், தெய்வங்களுமே. உயிர்களாகிய தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் பிறப்பு, இறப்பு உண்டு. கடவுள், தெய்வம் ஆகிய இரண்டினுள், கடவுளிடத்தே மட்டும் உள்ள சிறப்பியல்பு எக் காலத்திலும், எக் காரணம் பற்றியும் பிறவாமையே ஆகும். இச் சிறப்பு சிவனுக்கு மட்டுமே உரியது. சிவனே அவரவர் வணங்கும் வெவ்வேறு தெய்வ வடிவங்களினூடாக அவரவர்களுக்கு அருள் செய்யும் கடவுள்.
• எல்லார் பிறப்பும் இறப்பும் இயற்பாவலர் தம்
சொல்லால் தெளிந்தேம்; நம் சோணேசர் – இல்லிற்
பிறந்த கதையும் கேளேம்; பேருலகில் வாழ்ந்து உண்டு
இறந்த கதையும் கேட்டிலேம்.
– குகைநமச்சிவாயர் அருளிய அருணகிரி அந்தாதி
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்”- சிலப்பதிகாரம்.
• யாதொரு தெய்வம் கொண்டீர்; அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர்; மற்று அத்தெய்வங்கள்
வேதனைப் படும், இறக்கும், பிறக்கும், மேல் வினையுஞ் செய்யும்;
ஆதலான் இவை இலாதான், அறிந்து, அருள் செய்வன் அன்றே.
– மெய்கண்ட சாத்திரம் – சிவஞானசித்தியார் – 115
• உரைத்த இத் தொழில்கள் மூன்றும் மூவருக்கு உலகம் ஓத
வரைத்து ஒருவனுக்கே ஆக்கி வைத்தது இங்கு என்னை?” என்னின்
விரைக் கமலத்தோன், மாலும் ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்து அதிகார சத்தி புண்ணியம் நண்ண லாலே.
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் – 54
சொற்பொருள்:
மூவர் – மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, உருத்திரன்.
விரைக்கமலத்தோன் – இதழ்களையுடைய தாமரையிலே வீற்றிருக்கும் பிரம்மா, ஏடுடைய மலரான்;
ஏவலால் – பணியால்
Book Reference
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).