Super Brain Yoga
நெற்றியில் குட்டி வழிபடுதல் ஏன்?
விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்து எழுந்து கும்பிடல் வேண்டும்.
விளக்கக்குறிப்பு: 1
தோப்புக்கரணம் – Super Brain Yoga:
தோப்புக்கரணம் போன்ற உடலின் நடுக்கோட்டைக் குறுக்காகக் கடந்து செய்யும் தொடுதல்கள், அசைவுகள், அப்பியாசங்கள் நரம்புத்தொகுதியினைத் தூண்டி புத்துணர்ச்சி அளிக்கின்றன என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகின்றது. இதை இப்போது மூளைக்குரிய உன்னதமான யோகப்பயிற்சி – Super Brain Yoga -என்று அழைகின்றார்கள். இவ்விதமான அப்பியாசங்கள் மூளை மற்றும் நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சைமுறையாகவும் பரிந்துரைக்கப்படுகின்றது.
விளக்கக்குறிப்பு: 2
• எமது உடலில் பாதத்தில் இருந்து இடுப்பு வரையாக உள்ள பகுதி அக்கினி மண்டலம்; இடுப்பில் இருந்து கழுத்து வரையான பகுதி சூரியமண்டலம்; கழுத்துக்கு மேல் சந்திர மண்டலம்.
• சகஸ்ராரத்தில் இருந்து வடியும் அமிர்தம் சந்திரமண்டலத்தில் உள்ளது.
• மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி, ஆறு ஆதாரச் சக்கரங்களினூடாக சுழுமுனை நாடியால் மேல் நோக்கிச் செலுத்தி அதனைச் சிரசில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரையான சகஸ்ரார சக்கரத்தில் சிவத்துடன் சேர்க்கும் சிவயோகிகளுக்கு அந்த சிவ- சக்தி ஐக்கியத்தால் அமிர்தம் பெருகி நிறைந்து தானாகவே உள்நாக்கின் வழி கீழே வடிந்து நடுநெஞ்சில் சற்றே வலப்புறமாக உள்ள இதயத்தாமரையின் மத்தியில் ஆத்மலிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவத்தில் கொட்டி வழிந்து உடலில் செறியும்.
• சிவயோகிகள் அல்லாத ஏனையோருக்கு இவ்வாறு அமுதம் நிறைந்து தானாகச் சொட்டும் நிலை இல்லை, இவர்கள் தமது நெற்றியில் குட்டி வழிபடும்போது அற்ப அளவுக்கே உள்ள அமுதத்தில் சில துளிகளை இவ்வாறு கீழ்நோக்கிச் சொட்டச் செய்யலாம்.
• இதனால் உடலிலும், உள்ளத்திலும் சுறுசுறுப்பும், எழுச்சியும் உண்டாகின்றது. கற்பதற்கும், வழிபடுவதற்கும், தியானிப்பதற்கும் தேவையான மன ஒருமைப்பாடும் இதனால் கிடைக்கின்றது.
ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே
– 10ம் திருமுறை, திருமந்திரம் பாடல் 802
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே
– 10ம் திருமுறை, திருமந்திரம் பாடல் 695
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD)
அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).