உலக_படைப்பின்_நோக்கம்.
விளக்கக் குறிப்பு: 1.
கர்மா, மாயை ஆகியவற்றின் நோக்கம் அல்லது பங்கு என்ன?
கர்மாவும், மாயையும் அநாதியானவை. ஆனாலும் மூல அழுக்காகிய ஆணவத்தை நீக்குவதற்காக இடையில் இறைவனால் ஆன்மாவுடன் சேர்க்கப்பட்ட அழுக்குகளே. இது கரி பிடித்த பாத்திரத்தைத் துலக்க நாம் சாம்பலும், மண்ணும் சேர்த்துத் தேய்ப்பது போல. இவ்வாறு பாத்திரம் தேய்க்கும்போது அழுக்கைத் தேய்ப்பதற்குச் சிறிது நீர் சேர்க்கின்றோம். இறைவனும் தனது மறைப்புச் சக்தியான திரோதாயி ஊடாக உயிர்களை மாயை, கர்மா ஆகிய மலங்களுடன் சேர்த்து இவ்வுலக வாழ்க்கையில் செலுத்துவது உயிரை அனாதியாகவே பீடித்து சிறுமைப்படுத்தி வைத்திருக்கும் மூல அழுக்காகிய ஆணவ மலத்தை அகற்றுவதற்கே.
கரிபிடித்த பாத்திரம் நன்கு தேய்க்கப்பட்டு கரி முற்றாக நீங்கும் நிலைக்கு வந்ததும் நீரைக் கொட்டி அதைக் கழுவுகின்றோம். அப்போது முன்னிருந்த கரியுடன் அதைப் போக்குவற்காக பின்னர் சேர்த்துத் தேய்த்த சாம்பலும், மண்ணும் முற்றாக நீங்கப் பாத்திரம் பளிச்சென்று துலங்கின்றது. இதே போல உயிரும் பிறப்பு இறப்பு அனுபவங்களினூடாகச் செல்லும்போது முதலில் சட்டம், ஒழுங்கு முதலான உலக தர்மங்களைப் பேணியும், பின்னர் மற்ற உயிர்களுக்கு உதவும் சமூக சேவை போன்ற வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்தும், ஈற்றில் சிவபுண்ணியங்களான கடவுளை மையப்படுத்திய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் வாழ்க்கைப்படிநெறிகளூடாகச் சென்றும் பக்குவப்படுகின்றது. இவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு இறையின் அருட்சக்தி பொழிய அதன் மூலமலமான ஆணவ மலத்துடன், இடையில் சேர்ந்த மலங்களான கர்மாவும், மாயையும் நீங்க ஆன்மா சிவத்தைச் சேர்ந்த்து சிவானுபவத்தில் திளைக்கின்றது.
விளக்கக் குறிப்பு: 2.
இந்த ஆணவத்தை நீங்கி உயிர்கள் முத்தி பெறுவது எவ்வாறு?
இந்த ஆணவ மலத்தை எமது அறிவினாலோ, படிப்பினாலோ, பயிற்சியினாலோ அல்லது சுய முயற்சியினாலோ ஒடுக்கவோ, அழிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. எத்தனை விளக்கு வெளிச்சங்களினூடாகவும் இரவிலே சூரியனைப் பார்க்க முடியாதது போல. அந்தச் சூரியனே வந்து அதனது ஒளியினால் காட்டினால் மாத்திரமே நாம் சூரியனைக் காண முடியும். இதுபோல ஆணவமாகிய இருளை அகற்ற இறையின் திருவருள் என்னும் ஒளி வந்து காட்டினால்
மாத்திரமே நாம் இறையைக் காண முடியும்.
ஆறுமுகநாவலர் வினாவிடை…..
57. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?
ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவ மலமுங் கன்ம மலமுமாகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும் பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.
58. தனு கரண முதலியவைகளும் மலமன்றோ? மலமென்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?
வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசிறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன்; அது போலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவ மலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வுடைய தாகச் செய்வார்.
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).