கடவுளின் படைப்பில் ஏன் இந்தப் பாரபட்சம்?
நீதியான இறைவன் உயிர்களுக்கு முதன் முதலாக உடலைக் கொடுக்கும்போது எல்லா உயிர்களுக்கும் பாரபட்சமில்லாமல் ஒரே விதமான உடலையே கொடுக்கின்றான்.
இந்த உடல் எட்டு தத்துவங்கள் அல்லது இருப்புகளினால் ஆனது. பிறப்புக்கு முந்திய நிலையில் இருந்து முதன்முதலில் பிறப்பெடுக்கும் உயிர்களுக்கு இறைவனால் முதன்முதலாகக் கொடுக்கப்படும் இந்த உடலைப் புரியட்டகாயம் என்று சைவம் கூறுகின்றது. அட்டம் என்றால் எட்டு; காயம் என்றால் உடம்பு.
புரியட்ட காயம் பின்வரும் எட்டு தத்துவங்களின் கூட்டால் ஆனது.
1. சப்தம்- கேட்கும் சக்தி
2. ரூபம் – பார்க்கும் சக்தி
3. ரஸம் – சுவைக்கும் சக்தி
4. ஸ்பரிஸம் – தொட்டுணரும் சக்தி
5. கந்தம் – மணக்கும் சக்தி
6. மனம் – சிந்திப்பதற்கு
7. புத்தி – நிச்சயித்து முடிவு எடுப்பதற்கு
8. அஹங்காரம் – நான் என்னும் தனித்துவ உணர்வு.
இந்த எட்டு தத்துவங்களினாலான உடல் கிடைத்ததும் உயிர்கள் சிறிது உணர்வு, அறிவு, ஆற்றல் பெற்று மனதினாலேயே கர்மம் ஆற்றத்தொடங்குகின்றன. இந்தக் கர்மா அவற்றுக்கு அடுத்த உடலைத் தீர்மானித்து பிறவியைக் கொடுக்கின்றது.
இவ்வாறு பல்வேறு உயிரினங்களில் நாம் காணும் இந்த வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் அவற்றின் கர்மாவினால் வந்தவையே. இறைவன் விதித்தது அல்ல.
இறைவன் உயிர்களுக்கு அவற்றின் கர்மாவுக்கு ஏற்ப உடல்களைக் கொடுக்கின்றான். அவ்வளவுதான். இதையே திருவள்ளுவரும் திருக்குறளில் பின்வருமாறு கூறுகின்றார்.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமையால்
செய்தொழில் என்பது கர்மா. முதலாவது பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றுதான்.
அவற்றின் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவற்றுக்கு வேறு வேறு பிறப்புகள் தொடர்கின்றன.
Book Reference –
பசுவியல் – விளக்க முற் குறிப்பு – 8
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).