பிரதோஷ வழிபாடும் சோமசூத்ரபிரதட்ஷணமும்.
*** நித்தியமும் நியமமாக ஆலய தரிசனம் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, கந்தசட்டி முதலிய புண்ணிய காலங்களில் ஆயினும் தரிசனம் செய்தல் வேண்டும்.
விளக்கக்குறிப்பு:
சோமவாரம் – திங்கட்கிழமை; சுக்கிரவாரம் – வெள்ளிக்கிழமை, மங்களவாரம் – செவ்வாய்க்கிழமை
*** பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?
இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.
விளக்கக்குறிப்பு:
இது சோமசூத்திரப் பிரதட்சணம் எனப்படுகின்றது. இது தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது அதிலிருந்து தோன்றிய கொடிய ஆலகால நஞ்சின் தாக்கத்துக்கு அஞ்சி அலறியடித்து இடமும் வலமும் அங்கும் இங்குமாக ஓடி அலைந்ததைக் குறிக்கின்றது. இறுதியில் சிவன் அந்த ஆலகால விஷத்தைத் தாம் எடுத்துக்கொண்டு தேவர்களையும், அசுரர்களையும் இரட்சித்தார். இதன் பின்னர் பிரதோஷ காலத்தில் (மாலை வேளையில்) அவர்கள் அனைவரும் காண நந்தியின் கொம்புகளுக்கிடையில் நின்று நடனம் ஆடினார்.
சிவன் நீதியான தேவன்; நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒரே மாதியாக அருள் புரிகின்ற அளவற்ற அன்பாளன் என்பது அவன் தான் ஆலகால விஷத்தை அருந்தித் தேவர்கள், அசுரர்கள் ஆகிய இருவருக்கும் அருளியதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். இறைவன் பாரபட்சமின்றி அருள் புரிந்தாலும் தீயவர்கள் தமது தவறான தெரிவுகளால் இழப்புகளைச் சந்திக்கின்றார்கள் என்பது அசுரர்கள் மோகினியை நாடி அமிர்தத்தை இழந்ததில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
நாமும் எமது வாழ்க்கையிலும் இதே போல எமக்கு நல்லதை வேண்டி முயற்சி செய்யும்போது எதிர்பாராத பல தீமைகளும், துயர்களும் தோன்றி எம்மை அலைக்கின்றன. இப் பிரதோஷ வழிபாட்டை சோம சூத்திரப் பிரதட்சணத்துடன் செய்து சிவலிங்கப் பெருமானை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையால் பார்த்து தரிசனம் செய்து வர எமது அல்லல்கள், துயரங்களையும் சிவன் எடுத்து விலக்கி எம்மைக் காத்து ஈற்றில் தனது தரிசனத்தையும் அருளுவார்.
*** பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனம் செய்யிற் பயன் என்னை?
கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும்.
சொற்பொருள்:
கிலேசம் = துயரம்; அவமிருத்து = துர் மரணம்.
Book Reference
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).