உயிர்களை கடவுள் ஏன் படைத்தார்?

உயிர்களை கடவுள் ஏன் படைத்தார்?

ஆண்டவன் தனது மகிமையை வெளிப்படுத்துவதற்காக உயிர்களைப் படைத்தார் என்று சில மதங்கள் கூறுகின்றன. இறைவன் உயிர்களைப் படைத்தது அவனுடைய லீலை அல்லது திருவிளையாடல் என்று சிலர் கூறுகின்றார்கள்.

• இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான்
விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச்
செய்தன தாம் விளையாட…
– கண்ணதாசனின் திரைப்படப் பாடல்

இறைவன் என்பதே இல்லை; கணந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கின்ற அணுக்கள் அல்லது கூறுகளின் சேர்க்கையே உயிர்கள், உடல்கள் மற்றும் இந்த உலகங்கள் என்று சில மதங்கள் கூறுகின்றன.

உயிர்கள் யாராலும் படைக்கப்படவில்லை. கடவுளைப்போல் உயிர்களும் தொடக்கமோ, முடிவோ இல்லாதவை; அநாதியானவை. ஆதி- என்றால் தொடக்கம்; அநாதி- என்றால் தொடக்கம் இல்லாதது. உயிர்களுக்கு உடல் கொடுத்தவரே கடவுள்; அவர் உயிர்களைப் படைக்கவில்லை என்று சைவம் கூறுகின்றது.

அப்படியானால் கடவுள் எதைப் படைக்கிறார்?

கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை. ஆனால் உயிர்களுக்கான உடல்களைத் தருவது இறைவன். அந்த உடலுக்குரிய கருவி கரணங்களைத் தருவது இறைவன். அவை பிறப்பதற்கான உலகங்களைப் படைப்பது இறைவன். அவ்வுலகங்களிலுள்ள உயிர்களுக்கான அநுபவப் பொருட்களைப் படைப்பது இறைவன். மொத்தத்தில் இறைவன் படைப்பது

1. தனு (உடல்),
2. கரண ,
3. புவன,
4. போகங்கள் என்னும் இந்த நான்கையுமே.

Book Reference –
பசுவியல் – விளக்க முற் குறிப்பு – 5
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).