விரதங்களால் விளையும் உடல்நல மருத்துவ, வாழ்வியல் மற்றும் ஆன்மீக பயன்கள்…………

விரதங்களால் விளையும் உடல்நல மருத்துவ, வாழ்வியல் மற்றும் ஆன்மீக பயன்கள்…………

விரதமாவது யாது?

மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும், கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேடமாக வழிபடுதல்.

விளக்கக் குறிப்பு: 1.

இங்கு பொதுவாகக் கூறப்படும் விரதங்களுக்கான கட்டுப்பாடுகள் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவரவர் வயது, உடல்நிலை, தொழில் நிலை, குடும்ப சூழல், சமுதாயக் கடமைகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபடும். உதாரணமாக நீரிழிவு நோயளருக்கான விரதக் கட்டுப்பாடுகள் மருத்துவ ஆலோசனைப்படி நடைமுறைப் படுத்தப்படவேண்டும். இவ்வாறே சிறு பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், வயோதிபர்கள் போன்றோருக்கும் விரத நியமங்களில் இலகு நடைமுறைகள் உள்ளன.

விளக்கக் குறிப்பு: 2.

விரதங்களால் விளையும் மருத்துவ, உடல் நல பயன்கள்.
உணவை விடுத்தும், சுருக்கியும் கடைப்பிடிக்கும் விரதங்கள் பின் வரும் வழிகளால் உடல் நலத்துக்கு நன்மை பயக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

1. இடையிட்ட குறுகிய கால விரதங்கள் குருதி வெல்லத்தின் அளவைக் குறைக்கின்றன. உடலின் இயற்கையாகச் சுரக்கும் இன்சுலின் செயற்பாட்டை அதிகரிக்கின்றன.

2. உணவை விடுத்தும், சுருக்கியும் கடைப்பிடிக்கும் விரதங்கள் உடலின் பல்வேறுபட்ட அழற்சிகளைக் (Inflammation)குறைகின்றன. அழற்சிச் சுட்டிகளின் (Inflamatory Markers) அளவும் குறைகின்றது. அழற்சியானது வாத நோய்கள் (Arthritis), குருதிக்குழாய் அடைப்பு ( Arthroscelerosis) உட்பட்ட பல்வேறுபட்ட நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

3. விரதமானது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் ( Cholesterol and Triglycerides) அளவையும், குருதி அமுக்கத்தையும் ( Hypertension) குறைப்பதால் இதய நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் செய்கின்றது.

4. இடையிட்ட குறுகிய கால விரதங்களை பதினொரு மாதங்கள் கடைப்பிடிக்க மூளையினதும், நரம்புகளினதும் தொழிற்பாடும், வினைத்திறனும் ( Brain and Nerve cell Function) அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மறதி நோய் ( Dementia) , நடுக்க நோய் ( Parkinsonism) என்பவற்றின் தாக்கமும் குறைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

5. விரதங்கள் உடற்பருமனைக் ( Obesity) குறைத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

6. 24 மணித்தியாலம் தொடக்கம் 48 மணித்தியாலங்கள் வரையான விரதங்கள் உடல் வளர்சிக்குரிய ஓமோன் ( Human Growth Hormone) சுரப்பைக் கூட்டுவதால் பிள்ளைகளில் வளர்ச்சியையும், வளர்ந்தவர்களில் தசைப் பலத்தையும் கூட்டுகின்றது.

7. விலங்குகளில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் இருந்து உணவைக் குறைத்தும், விடுத்தும் செயற்படுத்தப்படும் விரதமானது முதுமையைப் பின்போடுவதுடன் ஆயுளையும் கூட்டுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

8. உணவைச் சுருக்கியும், விடுத்தும் கடைப்பிடிக்கும் விரதங்கள் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைப்பதுடன், புற்றுநோய் மருந்துகளின் (Chemotherapy) செயற்பாட்டையும் கூட்டுகின்றமை அவதானிக்கப்படுள்ளது.

9. நாளும் அனுசரிக்கும் 12 தொடக்கம் 14 மணித்தியால உணவு தவிர்ப்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நவீன ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விளக்கக் குறிப்பு 3
விரதங்களின் ஆன்மீகப் பயன்கள் –

விரதங்களின் கட்டுப்பாடுகள் படிமுறையான ஆன்மீகப் பயிற்சி நெறிகளாகும். இவை படிப்படியாக வாய்மை, கொல்லாமை, அகிம்சை, சத்தியம், தர்மம் முதலான இயம நியமங்களை (Do’s & Don’ts) நமது அன்றாட வாழ்க்கையில் வழமைப்படுத்த உதவுகின்றன. ஆன்மீக நூல்களை படிக்கவும், கேட்கவும் வழி காட்டுகின்றன. ஆலய தரிசனத்தையும், மெய்யடியார் சேர்க்கையையும் உறுதிப்படுத்துகின்றன.

விளக்கக் குறிப்பு 4:
விரதங்களின் வாழ்வியற் பயன்கள்-

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையான பண்புகளான விடாமுயற்சி, ஒழுங்கு, மனக்கட்டுப்பாடு, பொறுமை போன்றவற்றை வளர்க்க உதவுகின்றன.

விளக்கக் குறிப்பு 5:
பல விரதங்களை ஒரே நேரத்தில் அனுட்டித்தல்:

ஒருவர் பல விரத்தங்களை ஒரே நேரத்தில் அனுட்டித்தல் தவிர்க்கப்படவேண்டும். ஒரு விரதத்தைப் பூர்த்தி செய்து பாரணை முடிக்க காலாமோ அவகாசமோ இல்லாமல் பலர் அவதிப்படுவதைக் காண்கின்றோம். ஒரு விரதம் அனுட்டிக்கும்போதே அந்த விரத நாட்களில் அவர்கள் அனுட்டிக்கும் இன்னொரு விரதமும் வரும்போது இது அவர்களுக்கு குள்ப்பத்தைத் தருகின்றது. பொதுவாக நவராத்திரி, கேதாரகௌரி விரதம், கந்தசட்டி விரத நாட்களில் இதைக் காணலாம். இங்கு கூறப்பட்ட எல்லா விரதங்களிலும் சிவராத்திரியை எல்லோரும் அனுட்டித்தல் வேண்டும். மற்றைய விரதங்களில் தமது வழிபடு கடவுளுக்குரிய ஏதாவது ஒரு விரதத்தை அனுட்டிக்கலாம். இடையிலே சில காரியசித்திகளை முன்னிட்டு ஒரு சில விரதங்களை அத்தெய்வம் நோக்கி தன்னுடைய மற்றைய விரதத்துக்கு பங்கம் வராத வண்ணம் அனுட்டிக்கலாம். பல விரதங்களை ஒருவரே ஒரே நேரத்தில் அனுட்டிப்பதை தவிர்க்கவேண்டும்.

*****ஆறுமுக நாவலரின் சைவவினாவிடை விரதவியல் பகுதி மிகத்தெளிவாகவும் அறுதியாகவும் விரதங்களையும், அவற்றை அனுட்டிக்கும் முறைமையையும் கூறுகின்றது. இதற்கு மேல் புதிய தேடல்கள் தேவையில்லை. விரதங்களை அனுட்டித்துப் பயனடைந்தோர்களின் விபரங்கள் புராணங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆர்வமுடையோர் பார்த்துப் பயன் அடைக.********

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *