முருகன் ஏன் தமிழ்க்கடவுள் – அறிமுகம்

 

முருகன் ஏன் தமிழ்க்கடவுள் – அறிமுகம்

மாயோன் என்னும் திருமாலும், சேயோன் என்னும் முருகனும், வேந்தன் என்னும் இந்திரனும், வருணனும் பண்டைத் தமிழர்களின் கடவுளராகத் தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றனர். தமிழர் தத்துவமாம் சைவம் சிவனையே முழுமுதற்கடவுளாகக் கொண்டாடுகின்றது. ஆயினும் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்ற சிறப்புக்கு உரியவனாகின்றான். இது ஏன் என்று ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். 

தமிழுக்கு எழுத்து, சொல், பொருள் என்று இலக்கணமும், தமிழர் வாழ்நெறியும் வகுத்த பழம்பெரும் தொல்காப்பியம் போற்றுவதால் முருகன் தமிழ்க்கடவுளா? தொல்காப்பியம் முருகனை மட்டுமா கூறுகின்றது? திருமால். இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களையுமல்லவா போற்றுகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழந்தமிழர் வாழ்நெறியையும் பண்பாட்டையும் கூறும் சங்க இலக்கியங்களில் கூறப்படுவதனால் முருகன் தமிழ்க் கடவுளா? சங்க இலக்கியங்கள் முருகனை மட்டுமா கூறுகின்றன? திருமாலையும் அல்லவா கூறுகின்றன.

சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்ச்சங்கம் அமர்ந்து தானும் தமிழ் வளர்த்ததினால் முருகன் தமிழ்க் கடவுள் ஆனானா? சிவனும் தானே தமிழ்ச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்ததாக் கூறப்படுகின்றது.  

தமிழ்நாட்டில் எங்கும் பரவலாக வணங்கப்படும் தெய்வமாக குன்றுகள் தோறும், குறிச்சிகள் தோறும் கொண்டாடப்படும் தெய்வமாக இருப்பதனால் முருகன் தமிழ்க்கடவுளா? தமிழ் நாட்டுக்கு அப்பாலும் கார்த்திகேயன் என்றும், சுப்பிரமணியன் என்றும் முருகன் வணங்கப்படுகின்றானே? தமிழ் நாட்டில் இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் உறையும் தெய்வமாக பிள்ளையார் அல்லவா உள்ளார்?

18.000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடல்களைக்கொண்ட பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்ட, போற்றப்பட்ட கடவுள் சிவன் தானே? மூத்தநாயானார் திரு இரட்டை மணிமாலை, மூத்தபிள்ளையார் திருமும்ம்மணிக்கோவை, திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை ஆகிய மூன்று பாடல்களே பிள்ளையாருக்கும், திருமுருகாற்றுப்படை என்னும் ஒரேயொரு பாடலே முருகனுக்கும் திருமுறைகளில் உள்ளன. அப்படியிருக்க முருகன் எப்படி தமிழ்க்கடவுள் என்ற இடத்தைப் பெற்றார்?

தமிழர்களின் தனிப்பெருஞ் சமயமாம் சைவத்தினதும், தமிழர்களின் தனித்துவமான தத்துவமாம் சைவசித்தாந்தத்தினதும் பதியாகிய கடவுள் சிவனே. அப்படியிருக்க முருகன் எப்படி தமிழ்க்கடவுள் ஆனார்? சற்று விரிவாகப் பார்ப்போமா?