உலகளாவிய சைவம் (Part – 01)


உலகளாவிய சைவம் (Part – 01)

சிவஞானசித்தியாரிலிருந்து சைவத்தின் படிமுறைகள் சில…..
சைவம் சிவசம்பந்தமாவது; சிவசம்பந்தமாக்குவது; எல்லா உயிர்களும் அறிந்தோ அறியாமலோ சிவசம்பந்தமானவையே. அந்த உறவை மீள உறுதிப்படுத்துவதே சைவம். இதையே சேக்கிழார் பெருமானும் திருஞானசம்பந்தர் புராணத்தில் அருளுகின்றார்.

“நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம்
நிலைமை அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்”
– பாடல் எண் : 926

பொழிப்புரை:
நிற்பனவும் நடப்பனவுமான தாவரம் முதலாக எல்லா உயிர் வகைகளும் சைவமே யாகும்’ என்ற உண்மையை அப்புத்தர்கள் அறிந்து உய்யுமாறு , சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் அருளிச் செய்து…….

இதுவே அன்றும் இன்றும் என்றும் எங்கும் நிலைபெற்ற உலகளாவிய சைவமாகும். இதன் படிமுறைகள் சிவஞானசித்தியாரில் மிக அழகாகக் கூறப்பட்டுள்ளன.
எல்லா உயிர்களுக்கும் தத்தம் வினைக்கேற்ற பலன்களை முதல்வனாகிய சிவபெருமானே பிறவிகள் தோறும் கூட்டுவார் என்று முதல்பாடலில் கூறி அடுத்த பாடலில் ஒழுக்கம், சத்தியம் போன்ற பொது அறங்கள் வழி ஒழுகிவரின் அவற்றையும் முதல்வன் தன்பணியாக கொண்டு அவ்வுயிர்களுக்கும் அருளுவார் என்று கூறுகின்றார். இதற்க்கு சான்றாக நாம் சாக்கிய நாயனாரையும் கூறலாம். அவர் பிறந்தது பௌத்த சமயத்தில். பௌத்தத்தில் கர்மா உண்டு, இறைவன் இல்லை. அவர் அந்த நெறியின் வழி கூறப்பட்ட பொது அறங்களை மெய்யாகவே கடைப்பிடித்து ஒழுகி வந்ததின் பயனாக அவருக்குள் திருவருள் பதிய முப்பொருள் உண்மையை உணர்ந்தார். மெய்யன்பால் வழிபட்டார். அந்நிலையிலும் அவரின் பௌத்த வேடத்திலேயே இருந்து மறவாது கல்லெறிந்து வழிபட்டார்.

செய்வினையுஞ் செய்வானும் அதன் பயனுங் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொரு ளெனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே யுணர்ந்தறிந்தார்
– பெரியபுராணம் – சாக்கிய நாயனார் புராணம் 5.

பொழிப்புரை:
செய்யும்வினை, செய்பவனான வினைமுதல், அதன்பயன், இவைகளைத் தந்து ஊட்டுபவனான இறைவன் ஆக உண்மை வகையால், பொருள்கள் நான்காகும் என்னும் தெளிவு கொண்டு, இச்சிறப்பியல்பு சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிவையும், உய்தி பெற அடைதற்குரிய பொருள் சிவமே என்னும் உண்மையையும், அப்பெருமானின் திருவருளால் உணர்ந்து கொண்டார்.

திருவருள் கைகூடியபின்னரும் வேடம் மாற்றவில்லை என்றதை கூறும் பாடல்…

எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்
– பெரியபுராணம் – சாக்கிய நாயனார் புராணம் 6.

பொழிப்புரை:
எந்தநிலையில் நின்றாலும், எந்தக்கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்பை உடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப்பொருளாகும் எனத்துணிந்து தாம் மேற்கொண்டு ஏற்ற அப்புத்தக் கோலத்தினின்றும் நீங்காமலேயே தூயதாய சிவலிங்கத் திருமேனியை மிக்க அன்புடன் மறவாத நிலையில் போற்றி வருவாராய்,

இதற்கு அடுத்தபடியாக அறவழியில் பக்தி சிரத்தையுடன் ஏதேனும் ஒரு இஷ்டதெய்வத்தினை வழிபட்டுவரினும் அவ்வத்தெய்வத்தின் இடமாக நின்று முதல்வனாகிய சிவபெருமானே அருள்செய்வார் என்று கூறுகின்றார்.
இதற்கு அடுத்தபாடல் வேறு வேறாக அறியப்படுகின்ற தெய்வங்கள் யாவும் பிறப்பிறப்புக்கும், இன்பத்துன்பங்கள் முதலிய மும்மலங்களிற்கும் உட்பட்டவையாதலால் இவைகளில் இருந்துநீங்கிய பரம்பொருளாகிய சிவபெருமானே அவ்வத் தெய்வங்களிடமாகவும் நின்று அருள் செய்வார் என்று கூறுகின்றார்.

இதற்கு அடுத்தபாடலிலும் இக்கருத்துப்பற்றியே நாம் இங்கு பலவாறாக வழிபடுகின்ற தெய்வங்கள் குரு, பெற்றோர் யாவரிடமாகவும் இருந்து அருள் செய்வது சிவபெருமானேயாதலால் அந்தந்த தெய்வங்களிடமாகவும் வழிபடுபொருள் யாவற்றிலும் பரம்பொருளாகிய சிவத்தையே காண்பாய் என்று கூறுகின்றார்.(அத்தெய்வம் அத்தனைக்காண்)

இவ்வாறாக அடுத்த படிநிலையில் எல்லாத் தெய்வங்களிடத்தும் யாவற்றிலும் நின்று வேறற அருள்செய்பவர் சிவபெருமானே என்றுணர்ந்து அவரைவழிபடல் மேலான சிறப்புபுண்ணியமாக கூறி அடுத்தபாடலில் மெய்யுணர்வோடு சிவத்தினை வழிபடும் வழிமுறைகளையும் கூறுகின்றார்.

சுருக்கம் –
பாவங்களை ஒழித்து ஒழுக்கம் முதலிய புண்ணியங்களை செய்தல் யாவர்க்கும் பொதுவாயுள்ள அறங்களாம்.
அப்புண்ணியங்களை செய்தலோடு இச்சித்த தெய்வம் போற்றுதல் அவற்றினும் சிறந்த புண்ணியமாம்.
எல்லா நிலைகளிலும் எல்லாவழிபாடுகளையும் ஏற்றுப் பலனளிப்பவர் பரமசிவனே யாதலின் அவரைவழிபடுதல் இஷ்டதெய்வவழிபாட்டை விட சிறந்த புண்ணியமாம்.

இந்நிலைமைகளையும் அவரின் கருணையையும் மெய்யாக உணர்ந்து, வழிபாடேற்கும் தெய்வங்கள்,குருமார் போன்ற யாவற்றிலும் சிவத்தினை கண்டு மெய்யன்போடு வழிபடுதல் எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியமாகும்.
சிவபெருமானை மறந்து நம்மை முன்னிலைப்படுத்தி செய்யும் புண்ணியங்கள் எல்லாம் வீண் செயல்களாம்.
மேற்படி கருத்தியல் பற்றிய சிவஞான சித்தியார் பாடல் இலக்கங்கள்; பிரமாணவியல் – இரண்டாஞ் சூத்திரம்; பாடல் எண் : 22, 23, 24, 25, 26, 27. பாடல் link…..
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=2018&padhi=018&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
தொடரும்…