சைவக்கிரியைகள் – நியாசமும் பாவனையும் Part 4.

சைவக்கிரியைகள்
நியாசமும் பாவனையும் Part 4.

Part 1, 2, 3 link….

சைவக்கிரியைகள் 01

சைவக்கிரியைகள் 02,03

“சிவனெனவே தேவரையுஞ் சிந்தி அவனை அவனெனக்கண்டார் நிரயத்தார்.”
மற்றத் தேவர்களை வழிபடும்போது அவர்களைச் சிவன் எனவே சிந்தித்து வழிபடு. சிவனை அத் தேவர்களுள் ஒருவராக கண்டு வழிபடுபவர் நரகத்தைச் சேர்வர்.
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய
சங்கற்ப நிராகரணம், குறள் 8:41

நியாசம்:
நியாசம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு தொடுதல் என்றும் பதித்தல் என்றும் பொருள். ஆறுமுகநாவலர் எழுதிய நித்தியகரும விதி நியாசம் என்பதைத் தொடுமிடம்தொடுதல் என்று கூறுகின்றது.

எந்த ஊடகத்தில் இறையைப் பாவித்து எழுந்தருளப் பண்ணிப் பூசிக்கப் போகின்றோமோ அந்த ஊடகத்தை இறை எழுந்தருளுவதற்கு ஏற்றதாகப் பாத்தியப்படுத்துவது அல்லதுதகுதிப்படுத்துவதே நியாசம் எனலாம்.

இதுவும் மற்ற சைவக் கிரியைகளைப் போன்றே மந்திரம், பாவனை, முத்திரை எனும் மூன்றையும் கொண்டது.
இறையைப் பாவித்து எழுந்தருளப் பண்ணும் ஊடகமானது விம்பம் என்னும்
உருவச்சிலையாகவோ, இலிங்கமாகவோ, கும்பமாகவோ, இயந்திரமாகவோ, ஓமகுண்டத்து அக்கினியாகவோ, நீர் நிறைந்த அர்க்கிய பாத்திரமாகவோ, பால் நிறைந்த பஞ்சகவ்விய பாத்திரமாகவோ, பூசை செய்பவரின் தேகமாகவோ, அபரக்கிரியைகளில்
பிரேதமாகவோ கூட இருக்கலாம்.

இந்த ஊடகங்களையும் அவற்றின் அந்தந்த தானங்களையும் அந்தந்த மந்திரங்களை உச்சரித்து அந்தந்த முத்திரைகளுடன் கூடிய கைவிரல்களினால் தொட்டு சதாசிவமூர்த்தியின் அந்தந்த அங்க, உபாங்கங்கள் ஆகப் பாவித்து அந்த ஊடகத்தில் ஐந்து முகங்களும், பதினைந்து கண்களும் கொண்ட சதாசிவ மூர்த்தியைப் பாவித்து எழுந்தருளப் பண்ணுவதே பாவனையுடன் கூடிய நியாசம் ஆகும். இதுவே சைவக்கிரியைகளின் தனித்துவமும் உயிர்நாடியும் ஆகும்.

ஆகம தந்திர நூல் வழியில் இக்கிரியை இந்து மதத்தின் ஏனைய சம்பிரதாயங்களிலும் ஓரளவுக்கு இடம் பெற்றிருந்தாலும் சைவக் கிரியகளில் இவற்றுக்கு உள்ள விரிவும், முக்கியத்துவமும் வேறெங்கும் காண்பது அரிது.

இவ்வாறு கிரியையைச் செய்கின்றவர் தாம் சிவமேயாகிய சிவோஹம் பாவனையுடன் செய்கின்ற இந்த மந்திர நியாசத்தினாலேயே நீர் சிவ தீர்த்தம் ஆகின்றது; பஞ்சகவ்வியம் சிவசொரூபம் ஆகின்றது; அக்கினி சிவாக்கினி ஆகின்றது; கும்பம் சிவகும்பம் ஆகின்றது; தேகம் சிவதனு அல்லது சிவ சரீரம் ஆகின்றது; சவமும் சிவம் ஆகின்றது, சீவன் சிவன் ஆகின்றான்; கல்லும் கடவுள் ஆகின்றது, பலிபீடம் பத்திரலிங்கம் ஆகின்றது, கோபுரம் தூலலிங்கம் ஆகின்றது. இவ்வாறு செய்கின்ற ஆச்சாரியார் சிவாச்சாரியார் ஆகின்றார்.

இரசவாதி இரும்பைப் பொன்னாக்குவதுபோல சிவாச்சாரியார் இக்கிரியையினால் மண்ணையும், மரத்தையும், கல்லையும், இரும்பையும், செம்பையும், எந்த உலோகத்தையும்
மற்றும் இவை போன்ற அழியும் பொருட்களினாலான எந்த உருவத்தையும் சிவமேயாக்கவல்லவர். அதன் பின்னர் அந்த உருவத்தில், வடிவத்தில், மூர்த்தத்தில் நின்று, அங்கு
வழிபடுவோருக்கு அவரவர் வழிபாட்டுக்கேற்ற பலன்களைத் தருவது சிவமேயாம்.

“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு
பாகனார் தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும், பிறக்கும் ,மேல் வினையுஞ் செய்யும்;
ஆதலான் இவையிலா தான் அறிந்தருள் செய்வனன்றே.”
– சிவஞானசித்தியார்

அந்த உருவங்களும் வடிவங்களும் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட வடிவங்களாகவும், உருவங்களாகவும் இருப்பது உத்தமம். ஆச்சாரியார்கள், குருமார், சிவபக்தர்களின் வடிவங்களும் கொள்ளத்தக்கவை. இந்த வடிவங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்க வடிவம்
உத்தமத்திலும் உத்தமம் ஆகும். சிவாகம மரபுக்கு அப்பாற்பட்ட வேறு வடிவங்களாக இருப்பின் அந்த தெய்வத்ட்கை, தேவரை, மூர்த்தியை, குருவை, அதன் வடிவத்தை, உருவத்தை, சிலையைச் சைவர்கள் சிவனாகப் பாவித்தல் வேண்டும். மாறாக சிவனை அந்த தெய்வமாக, மூர்த்தியாகப் பாவித்தலும் வழிபடுதலும் நமக்கு உய்தியாகாது.

“சிந்தனை செய்க சிவனிவனே என்றுள்ளத்துள் பந்தமறுப்பானைப் புரிந்து.”
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய சைவசமயநெறி, குறள் 14
“சிவனைக் குரவனெனச் சிந்தியேல் இந்த அவமதியால் ஆழ்வர் அவலத்து”
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய சைவசமயநெறி, குறள் -15
“சிவனெனவே தேசிகனை அன்பரையும் சிந்தி; அவனை அவராக நினையல்.”
சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய
சங்கற்ப நிராகரணம், குறள் 8:40

“சிவனெனவே தேவரையுஞ் சிந்தி அவனை அவனெனக் கண்டார் நிரயத்தார்.”
சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர்
அருளிய சங்கற்ப நிராகரணம், குறள் 8:41

குருவடி பணிந்து
வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com