பஞ்ச யக்ஞம் இல்லறத்தாரின் ஐம்பெரும் கடமைகள்.

பஞ்ச யக்ஞம்
இல்லறத்தாரின் ஐம்பெரும் கடமைகள்.

கல்வி, தொழில் பயிற்சிகளைப் பெற்று தமது வாழ்வில் தனித்து இயங்கும் தகைமை அடைந்ததும் தமக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் ஈடுபடும் குடும்ப வாழ்க்கை கிருஹஸ்தம் எனப்படும். இல்லறத்தாருக்கு வகுக்கப்பட்டுள்ள ஐம்பெரும் கடமைகளை பஞ்ச யக்ஞம் அல்லது ஐம்பெரும் வேள்விகள் என்று கூறுவர்.

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்
தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
– திருக்குறள் 42

இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன், இறைவனுக்கான வழிபாடு, விருந்தோம்பல், சுற்றம் தாங்கல், தன்னைப் பேணல் என்று இல்லறதாருக்கான இந்த ஐம்பெரும் கடமைகளை திருக்குறள் கூறுகின்றது.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
– திருக்குறள் 41

துறவிகளுக்கும், ஏனையவர்களுக்கும், இறந்த பித்துருக்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக உள்ளான்.
வேதங்கள் இல்லறத்தாருக்கு வகுத்த பஞ்ச யக்ஞம் என்னும் ஐம்பெரும் கடமைகளாவன:

i. பித்ரு யக்ஞம் என்னும் இறந்த மூதாதையருக்கு ஆற்றும் கடமைகள்,

ii. தேவ யக்ஞம் என்னும் தெய்வ வழிபாடு,

iii. ரிஷி யக்ஞம் என்னும் ஆன்மீக நூல்களைப் படித்தலும், மற்றவர்கள் படிப்பதற்கு உதவுதல், பேணலும், இதற்கு உதவலும்,

iv. மனுஷ யக்ஞம் என்னும் சக மனிதர்களுக்கு ஆற்றும் உதவிகள்,

v. பூத யக்ஞம் என்னும் மற்ற உயிர்களைப் பேணல் என்னும் ஐந்துமாம்.

இல்லறத்தில் அறியாமல் செய்கின்றபாவங்கள் பஞ்ச யக்ஜங்களை வழுவாமல் செய்துவர நீங்கும்.

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).
www.knowingourroots.com