சைவக்கிரியைகள் – 01 நியாசமும்_பாவனையும்

சைவக்கிரியைகள் – 01
நியாசமும்_பாவனையும்

“சிவனெனவே தேவரையுஞ் சிந்தி; அவனை அவனெனக் கண்டார் நிரயத்தார்”
மற்றத் தேவர்களை வழிபடும்போது அவர்களைச் சிவன் எனவே சிந்தித்து வழிபடு. சிவனை அத் தேவர்களுள் ஒருவராக கண்டு வழிபடுபவர் நரகத்தைச் சேர்வர்.
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய
சங்கற்ப நிராகரணம், குறள் 8:41

சைவம் சிவ சம்பந்தமாவது. சைவம் சிவ சம்பந்தமாக்குவது. சைவம் எம்மைச் சிவமேயாக்குவது.
“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்”
– திருவாசகம்

எங்கும் வியாபகமாக நிறைந்திருக்கும் சிவத்தைச் சில குறிப்பிட்ட தானங்கள் அல்லது இடங்களில் வெளிப்படையாக இருத்தி, உறைப்பாகத் தியானித்து வழிபாடாற்றுவது சைவக் கிரியைகள் ஆகும்.
இவ்வாறு சிவத்துடன் எம்மைச் சம்பந்தப் படுத்தும் சைவக்கிரியைகள் மூன்று.

1. ஹோமம்,
2. தியானம்,
3. பூசை.

இந்த மூன்று சைவக் கிரியைகளும்

1. மந்திரம்,
2. கிரியை என்னும் செயன்முறை,
3. பாவனை என்னும் மூன்று அங்கங்கள் அல்லது பகுதிகள் கொண்டன.

இவற்றுள் முக்கியமாவது பாவனை ஆகும்.

“பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி.”
– திருநாவுக்கரசர் தேவாரம்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.
– திருமந்திரம்

இந்த பாவனையே சைவக் கிரியைகளுக்கு உயிர் கொடுப்பது. இது இல்லாவிட்டால் சைவக்கிரியைகள் உயிரில்லாத சவக்கிரியைகள் ஆகிவிடும். ஆனால் உண்மையில் அபரக்கிரியை என்னும் சவக்கிரியையும் கூட, சிவத்தை முன்னிறுத்திச் செய்யும் சைவக் கிரியைகளில் ஒன்றேயாம்.
இந்த 1. ஹோமம், 2. தியானம், 3. பூசை என்னும் மூன்றையும்,

1. மந்திரம், 2. கிரியை என்னும் கை முத்திரைகளுடன் கூடிய செயன்முறை, 3. பாவனை என்னும் மூன்றாலும்
அகத்தே மனத்தால் செய்வது அந்தர்யாகம் என்னும் அகப்பூசை.
புறத்தே வெளியில் செய்வது புறப்பூசை.
அகப்பூசை செய்தே புறப்பூசை செய்யவேண்டும் என்பது சைவக்கிரியை விதி.

குருவடி பணிந்து
வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com