ஆணவம் என்பது பொதுவழக்கில் கருதப்படுவதுபோல் தற்செருக்கா?

ஆணவம் என்பது பொதுவழக்கில் கருதப்படுவதுபோல் தற்செருக்கா?
சைவ சித்தாந்தம் கூறும் ஆணவ மலம்.
THE DARKNESS OF IGNORANCE OF SAIVA SIDDHANTA

எம்மை அநாதியாகப் பீடித்திருக்கும் மலங்கள் அல்லது அழுக்குகள் மூன்று. இவற்றுள் மூல மலம் ஆணவம். அணு என்றால் சிறுமை என்று பொருள். இச்சா, ஞானா, கிரியா சக்தி சொரூபமான ஆன்மாவின் அறிவு, செயல், இச்சைகளை மறைத்து மயக்கி அதை அணுத் தன்மையதாக்கிச் சிறுமைபடுத்தி வைத்திருக்கின்றது இந்த ஆணவம் என்னும் இருள். இவ்வாறு அணுத்தன்மையதாகச் சிறுமைப்படுத்துவதனால்தான் அதற்கு ஆணவம் என்று பெயரிட்டனர் சைவத்தின் ஆத்மீக உளவியலாளர்கள்.

இன்று நாம் ஆணவம் என்ற் சொல்லை தற்செருக்கு (Ego) என்ற கருத்தில் பாவிக்கின்றோம். சைவம் கூறும் ஆணவம் தற்பெருமை அன்று. அதை தற்செருக்கு (Ego) என்று மொழி பெயர்த்துச் சொல்வது சரியான விளக்கம் அல்லது சொல்லாக்கம் அல்ல. ஆணவம் தற்செருக்கு அல்ல; தற்செருக்குக்கு காரணமாய் அமைவது ஆணவம்.

மூல மலமாகிய ஆணவத்துக்கு இரண்டு சக்திகள் உண்டு என்றும், இதன் செயற்பாடுகள் ஏழு என்றும் சைவம் கூறுகின்றது.

ஆணவ_மலத்தின்_சக்திகள்:

சிவபெருமான் யானையை உரி செய்து யானைத் தோலைப் போர்த்தி இருக்கிறார், புலித்தோலையும் போர்த்தி இருக்கிறார். இவை இரண்டுமே பெருமான் ஆணவ மலத்தின் வலிமையை அடக்கி உயிர்களுக்கு அருளும் திருவருள் வெளிப்பாடுகள்.

• யானைத்தோல் என்பது ஆணவமலத்தின் ஆவாரக சக்தி என்பதனையும்,

• புலித்தோல் ஆணவ மலத்தின் அதோநியாமிகா சக்தி என்பதனையும் குறிக்கின்றது.

ஆவாரக சக்தி என்பது மறைக்கும் ஆற்றல்/ Deluding Potency. பிறப்புகளுக்கு முந்திய அநாதி கேவல நிலையில் உயிரின் அறிவை ஆணவம் முற்றிலும் மறைந்திருக்கும். அந்த ஆற்றல் ஆவாரக சக்தி.

அதோ = கீழ் , நியாமிகா = செலுத்துதல். பிறந்து இறந்து உழலும் சகல நிலையில் உயிர் கருவி கரணங்களோடு (கன்ம, மாயை) கூடி இருக்கும் நிலையில், ஆணவ மலத்தின் ஆற்றல் உயிர்களைக் கீழ் நோக்கி (புறப் பொருள்களில்) செலுத்தும், மயக்கத்தில் ஆழ்த்தும். இது அதோ நியாமிகா சக்தி/ Potency Driving Down.

இந் நிலையில் ஆணவ மலத்தின் செயற்பாடுகள் ஏழு ஆகும்; அவை வருமாறு:

1. மோகம் (Infactuation) :

எமக்குள்ள அறிவின் துணையால் தீமை விளைவிப்பனவற்றை அறிகின்றோம். ஆனாலும் அவற்றைத் தவிர்க்காமல், அவற்றில் ஈடுபடுவதிலே விருப்பம் கொள்கின்றோம். இது மோகம் எனப்படும். புகைப்படித்தல் தீங்கானது என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து விரும்புதல், கொழுப்பு அல்லது எண்ணெய் உணவுகள் தீங்கானது என்று தெரிந்தும் தொடர்ந்தும் அதை நாடுதல் என்பன் இதற்கு சில உதாரணங்காளகும்.

2. மதம் (Egoism/ Self-conceit):

தன்னைப்பற்றி உயர்வாகவும், தன் கொள்ளைகளைச் சிறந்ததாகவும் எண்ணித் தற்பெருமை கொள்ளல் மதம் எனப்படும். ‘நான் ஒருபோதும் இப்படிச் செய்வதில்லை; “நான் இத் தன்மைப்பட்டவன்’ என்று எம்மை அறியாமலே சொல்லிப் பெருமைப்படுவதும், எனது கொள்கை, எனது வியாபாரம், எனது சங்கம், எனது கழகம், எனது பணி, எனது மதம் தான் சிறந்தது என்று எண்ணுதலும், சொல்லுதலும்கூட ஆணவத்தின் குணமான மதம் ஆகும். தற்செருக்கு (Ego) என்பது மதத்தின் வெளிப்பாடே.

3. அராகம் (unrealistic desire):
ஒரு பொருள் கிடைக்காதென்று தெரிந்தும் அதனை அடைய ஆசைப்படுதல் அராகம் எனப்படும். ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்றார் ஓளவையார். (நாம் முன்னர் பாடம் ஏழிலே பார்த்த வித்தியா தத்துவங்களில் ஒன்றான அராகம் வேறு)

4. கவலை (Sorrow):

கிடைக்க வேண்டியது கிடைக்குமா கிடைக்காதா என்றும், முயற்சி செய்வதற்கேற்ற பலன் வருமா வராதா என்றும், உறவுகளும், உடைமைகளும் என்றும் இருக்குமா இருக்காதா என்றும் எண்ணி மனம் வருந்துவது கவலை எனப்படும். எமது தொழிலைப்பற்றியும், படிப்பைப்பற்றியும், வருமானத்தைப்பற்றியும், உறவுகளைப்பற்றியும் நாம் கவலைப்படுவதெல்லாம் ஆணவத்தின் ஒரு இயல்பே. ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ என்று வள்ளுவர் சொன்னது போல இறைவனை அடைக்கலம் என்று தஞ்சம் அடைந்தவர்களுக்குத் தான் இந்த மனக்கவலையில் இருந்து விடுபட முடியும். (Take the shelter from the God for all your worries to go away. ) நாம் இது அறியாமல் பெரும் பணத்தையும், நேரத்தையும் விருந்துகளுக்கும், களியாட்டங்களுக்கும், விடுமுறைப்பயணங்களுக்கும் செலவழித்தும்கூட கவலையைப் போக்க வழி தெரியாமல் அல்லல் உறுகின்றோம்.
நமது ஊரிலே நமது முன்னோர்கள் பிறந்ததில் இருந்து இறக்கும்வரை ஒரே ஊரிலேயே வாழ்ந்தாலும், எவ்வளவு வசதிக்குறைவுகளுடன் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது அவர்களுடைய அசைக்க முடியாத இறை நம்பிக்கையினாலேயே. நாம் அதை விட்டு விட்டு வெற்றுப் பாத்திரம் கொண்டு மகிழ்ச்சிக்காக ஓடோடென்று ஓடித் திரிகிறோம். புதிதாக மதம் மாறியவர்கள் பெறும் மகிழ்ச்சியும், நிம்மதியும் அவர்கள் சேர்ந்த புது மதத்தினால் அல்ல; அவர்களின் புத்துயிர்க்கப் பட்ட இறை நம்பிக்கையால்தான். இதே நம்பிக்கையும், ஊக்கமும், உயிர்ப்பும் சொந்த மதத்திலேயே காட்டியிருந்தால் அங்கேயே மகிழ்ச்சியைக் கண்டிருப்பர் என்பது திண்ணம்.

5. தாபம் (Separation anxiety and worry):
எங்களுக்கு வேண்டப்பட்டவரைப் பிரிந்தபோதும், அவர்களைப் பிரிய நேரிடும் என்பதை எண்ணும் போதும் உண்டாகும் பிரிவாற்றாமை தாபம் எனப்படும். இதுவும் ஆணவத்தின் குணங்களில் ஒன்று.

6. வாட்டம் (Longing in separation) :

தாபத்தினால் உண்டாகும் வருத்தம் வாட்டம் எனப்படும்.

7. விசித்திரம் (Strangnesss of thinking and acting in contradition):

எமது இன்ப துன்பத்துக்கு நாமே காரணமாக இருக்கின்றோம். ‘நன்றும் தீதும் பிறர் தர வாரா.’ ஆயினும் அவற்றுக்கு மற்றவர்களைக் காரணமாகக் கூறுவதும், மற்றவர்களைக் குறை கூறுவதும் நமக்கு இயல்பாக இருக்கின்றது. இது ஆணவத்தின் தன்மையான விசித்திரம் அல்லது வேடிக்கை எனப்படும்.
இப்போது பார்த்தீர்களானால் நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம் இந்த ஆணவமே என்பது புரியும். நமது இச்சா, கிரியா, ஞானா சக்திகளின் இயல்புகளான இச்சை (motivation), கிரியை (action), ஞானம் (wisdom) என்பவற்றை இருள் போல மறைத்திருக்கின்றது இந்த ஆணவம். இவ்வாறு அகத்தில் இருளாக இருப்பதே நமக்குத் தெரியாத அளவுக்கு மறைத்திருக்கும் கொடிய இருள் ஆணவம் – DARKNESS OF IGNORANCE என்று சைவம் கூறும். இந்த ஆணவத்தை இன்றைய சமயப் பிரசாரகர்கள் கூறுவதுபோல எமது அறிவினாலோ, படிப்பினாலோ, பயிற்சியினாலோ அல்லது சுய முயற்சியினாலோ கட்டுப்படுத்த முடியாது. பல்வேறு பிறவிகளில் பிறந்து நாம் பெறும் அனுபவங்களினாலும், செய்யும் செயல்களினாலும், ஆத்மீக சாதனைகளினாலும் பக்குவ முதிர்ச்சி ஏற்பட குருவருள் கூடிவருகின்றது. அப்போது இறையருளின் ஒளியினால் இந்த ஆணவ இருள் விலகுகின்றது. அப்போதுதான் நமது துன்பங்களில் இருந்து நமக்கு நிரந்தர வீடுபேறு கிடைக்கின்றது.

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).