உ
உலகளாவிய சைவம் (Part – 02)
சிவஞானசித்தியாரிலிருந்து சைவத்தின் படிமுறைகள் சில…..
Summary – பதிவு ஒன்றின் சுருக்கம் –
பாவங்களை ஒழித்து ஒழுக்கம் முதலிய புண்ணியங்களை செய்தல் யாவர்க்கும் பொதுவாயுள்ள அறங்களாம். அப்புண்ணியங்களை செய்தலோடு இச்சித்த தெய்வம் போற்றுதல் அவற்றினும் சிறந்த புண்ணியமாம். எல்லா நிலைகளிலும் எல்லாவழிபாடுகளையும் ஏற்றுப் பலனளிப்பவர் பரமசிவனே யாதலின் இந்நிலைமைகளையும் அவரின் கருணையையும் மெய்யாக உணர்ந்து வழிபடுதல் எல்லாவற்றிலும் மேலான புண்ணியமாம்.சிவபெருமானை மறந்து நம்மை முன்னிலைப்படுத்தி செய்யும் புண்ணியங்கள் எல்லாம் வீண் செயல்களாம்.
இவற்றை விளக்கும் சிவஞானசித்தியார் பாடல்களை விளக்கத்துடன் கீழே பார்ப்போம்.
படிநிலை – 01
எந்தவொரு பொது அறங்களோ, தெய்வ வழிபாடோ, ஆத்ம சாதனையோ அற்ற நிலை.
உலகு உடல் கரணம் காலம் உறுபலம் நியதி செய்தி
பல இவை கொண்டு கன்மம் பண்ணுவது உண்பது ஆனால்
நில இடா இவை தாம்சென்று நினைந்து உயிர் நிறுத்திக் கொள்ளா(து)
அலகு இலா அறிவன் ஆணை அணைத்திடும் அருளினாலே.
– சிவஞானசித்தியார், இரண்டாஞ்சூத்திரம், பாடல் எண் 22
பொழிப்புரை;
தனு என்னும் உடல், கரணம் என்னும் கருவிகள், புவனம் என்னும் உலகங்கள் போகங்கள் என்னும் அனுபவப்பொருள்களையும் இன்ப துன்பங்களையும் உயிரின் வினைக்கேற்ப முதல்வனே ஊட்டுவன் என்றது.
படிநிலை – 02
பொது அறம்களின் வழி ஒழுகிவரின் முதல்வன் அருள் செய்வான் என்றது கீழ்வரும் பாடல்..
ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கிலாத தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி
இழுக்கிலாத அறங்கள் ஆனால் இரங்குவான் பணி அறங்கள்.
-சிவஞானசித்தியார், இரண்டாஞ் சூத்திரம், பாடல் எண் 23
பொழிப்புரை
ஒழுக்கம், அன்பு, தம்மோடு தொடர்பற்றாரிடத்திலும் உண்டான அன்பாகிய அருள், ஆசாரங்கள், நல்லுபசரிப்பு, நல்லஉறவு, நற்குணங்களுடைமை, குறைவற்ற தவங்கள், தானங்கள், பெரியோரை வாழ்த்துதலும் வழிபடலும், சத்தியம், குறைவற்ற துறவாகிய புலனடக்கம், பகுத்தறிந்து செயலாற்றல் ஆகிய நல்லறத்தின்வழி ஒழுகிவர முதல்வனாகிய சிவபெருமான் இவற்றை தம்பணியாகக்கொண்டு எந்நிலையில் எச்சமயத்தில் இருந்தாலும் அருள்செய்வான்.
படிநிலை – 03
இஷ்டதெய்வம் எதுவாகிலும் பக்தி, சிரத்தையோடு வழிபட்டுவர இறைவன் அருள்செய்வான் என்றது கீழ்வரும் பாடல்…
மனம் அது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றிச்
சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும் செயற்கு முன்னிலையாம் அன்றே .
-சிவஞானசித்தியார், இரண்டாஞ் சூத்திரம், பாடல் எண் 24
பொழிப்புரை
மனதினால் நினைந்து, வாக்கினால் துதித்து மந்திரங்கள் சொல்லி கையில் நல்ல மலர்களைக்கொண்டு தாம் விரும்பிய எந்தத்தெய்வத்தை என்றாலும் அர்ச்சித்து வணங்கி, கோபம் முதலிய குற்றங்களில்லாமல் செய்யும் செயல்கள் அறமானால், எல்லாத்தெய்வங்களுக்கும் தெய்வமாயிருக்கின்ற ஒப்பற்ற பரமசிவனே அச்செயலுக்கு அவ்வத் தெய்வத்தினிடமாக நின்று அருள்புரிவன்.
படிநிலை – 04
முதல்வன் எல்லாத்தெய்வங்களிடமாகவும் நின்று அருள்செய்யும் முறைமையும் காரணமும் கீழ்வரும் பாடலிலே கூறப்பட்டது.
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே .
– சிவஞானசித்தியார், இரண்டாஞ் சூத்திரம், பாடல் எண் 25
பொழிப்புரை
எந்தத்தெய்வத்தை வழிபடினும் அந்தத்தெய்வத்தினிடமாநின்று அருள்செய்வது உமையொருபாகராகிய சிவபெருமானே; ஏனைய தெய்வங்கள் என்று நாம் வணங்குபவையும் வழிபடுபவையும் யோனிவாய்ப்பட்டு பிறப்பவை, பிறந்தனயாவும் இறக்கும் என்ற நியதிப்படி பின் இறப்பன,அத்தெய்வங்கள் தாம் வாழும்காலத்தில் வினைப்பயனாகிய இன்ப துன்பங்களை அனுபவிப்பன ,அக்காலத்தில் மேலும் வினைகளை ஆற்றுவன.ஆதலால் இவ்வாறான மும்மலங்களுக்கும் இயல்பாகவே அப்பாற்பட்ட முதல்வனாகிய சிவபெருமானே இந்நிலைமைகளையெல்லாம் அறிந்து அவ்வத்தெய்வங்களின் இடமாக நின்று அந்தந்த வழிபாட்டிற்குரிய பலனை செய்வார்.
படிநிலை – 05
எல்லாத்தெய்வமும் இறைவனின் ஆணைவழி நிற்பது ஆதலால் அந்தந்த தெய்வங்கள் யாவற்றிலும் பரமசிவனையே காணும்படி கீழே உள்ள பாடலில் கூறப்பட்டுள்ளது.
இங்கு நாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்(து)
அங்கு வான் தருவார்; அன்றேல்; அத்தெய்வம் அத்தனைக் காண்;
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்கு ஆணை வைப்பால் அளிப்பன்.
– சிவஞானசித்தியார், இரண்டாஞ் சூத்திரம், பாடல் எண் 26
பொழிப்புரை
இவ்வுலகில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளாகிய பெற்றோர், குரு, பசு, பித்ருக்கள், நவகிரகங்கள், தெய்வங்கள் போன்ற வழிபாடுகளுக்கு இவர்களோ இம்மை மற்றும் மறுமைப் பலன்களை தருவார்கள்? அது அவர்களால் முடியாதாகலின் எல்லாவற்றிலும் உடனாக நின்று அருள்செய்யும் இறைவனை அவ்வத்தெய்வங்களிடமாகவும் வழிபடப்படுவோரிடமாகவும் காண்பாயாக. எல்லாஇடங்களிலும் உள்ள தெய்வங்கள் யாவும் இறைவனின் அருளாணையின் வண்ணம் நிற்பவையாகும். அங்கு அவர்களிடத்தே நாம்செய்கின்ற வழிபாடுகளுக்கு சிவபெருமானே தமது சக்திவாயிலாக அருள் செய்பவன்.
படிநிலை – 06
இவ்வாறு எல்லாநிலைகளிலும் உயிர்க்கு இரங்கி அருள்செய்யும் பரமசிவனின் இயல்புகளை உணர்ந்து வழிபாடாற்றுவது சிறப்பு அறமாகும் என்பது கீழ்வரும் பாடலில்…
காண்பவன் சிவனே ஆனால் அவனடிக்கு அன்பு செய்கை
மாண்பு அறம்; அரன் தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம்
வீண்செயல் இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே .
– சிவஞானசித்தியார், இரண்டாஞ் சூத்திரம், பாடல் எண் 27
பொழிப்புரை
இங்கு எல்லாவற்றினிடமாகவும் நின்று அருள் செய்பவன் சிவபெருமானேயாதலின் அவருடைய திருவடிமேல் அன்புசெலுத்திவழிபடுதல் எல்லாவற்றிலும் சிறப்பான அறமாகும்; சிவபெருமானை மறந்து தற்போதமாக அல்லது ஆன்மபோதமாக எம்மை முன்னிறுத்தி செய்யப்படுகின்ற புண்ணியங்களெல்லாம் வீண்செயல்களாகும். இறைவன் வேதாகமங்களில் கூறியவையே அறங்களாகும். அதன் வழி ஒழுகுவோர்க்கு விருப்புவெறுப்பற்றவனாகிய இறைவன் பயனளிக்க விருப்பம்கொண்டனனாதலினால் அவனடிக்கு அன்புசெய்யும் வழிபாட்டை நீ செய்வாயாக.
என்றுகூறி சிவபெருமானை சிறப்பாக வழிபாடும் முறைமையினை அடுத்தடுத்தபாடல்களிலே கூறுகின்றார்.
தொடரும்…
By S.Easwaran.