கடன்படல் Part – 01

கடன்படல் Part – 01

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் அருளியது

சரீர சுகத்தின் பொருட்டாவது, தருமத்தின் பொருட்டாவது, யாவரும் தங்கள் தங்கள் வரவுக்கேற்ப மட்டாகச் செலவு செய்தல் வேண்டும். வரவுக்கு மேலே செலவு செய்யப் புகுவோர் கடன்படத் தலைப்பட்டு பெருந்துன்பத்தையும் அவமானத்தையும் அடைவர். கடனுடையவருக்கு இம்மை மறுமை இரண்டினும் இன்பமே இல்லை. எத்துணைப் பெருஞ் செல்வராயினும் கடன்படத் தலைப்படுவோர், விரைவிலே தங்கள் செல்வ மெல்லாம் இழந்து, தரித்திரராவர். இம்மையிலே மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களெல்லாவற்றினும், கடனால் உண்டாகும் துன்பத்தின் மிக்க துன்பம் யாதொன்றும் இல்லை. தனிகனைத் தாயைக் கண்டாற் போலப் பேரானந்தத்தோடு சென்று கண்டு அவனிடத்தே கடன்பட்டவர், பின்பு அவன் எதிர்ப்படும் போது பேயைக் கண்டாற் போலப் பெரும் பயத்தோடு நடுநடுங்கி ஒளிப்பிடந்தேடி ஓடுவர். (தனிகள் – கடன் கொடுக்கிறவன்.)

பொருளில்லையானால், கூலித்தொழில் செய்து வயிறு வளர்க்கினும் வளர்க்கலாம் பிச்சையேற்று உண்ணிலும் உண்ணலாம். பசிநோயால் வருந்தி இறக்கினும் இறக்கலாம். இவைகளெல்லாம் அவமானங்களல்ல. இவைகளினாலே பிறருக்கு யாதொரு கேடும் இல்லை. இவைகளினாலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இவைகளாலே துன்பம் உண்டா யினும், அத்துன்பமோ மிகச் சிறிது; அச்சிறு துன்பமும், நல்லறிவோடு அமைந்து சிந்திக்கும் போது, நீங்கிவிடும்.
கடனோ இப்படிபட்டதன்று. பெருவியாதி முதலிய கொடு நோய்களினால் உண்டாகுந் துன்பத்தைப் பொறுக்கிலும் பொறுக்கலாம்; கடனால் உண்டாகுந் துன்பத்தைப் பொறுத்தல் அரிது அரிது.

கடன்படக் கூசாதவர் பொய் சொல்லக் கூசார்; பொய்ப்பத்திரம் பிறப்பிக்கக் கூசார்; பொய் வழக்குப் பேசக் கூசார்; விசுவாசகாதகம் செய்யக் கூசார்; வழக்குத் தீர்ப்பிலே பரிதானம் வாங்கக் கூசார்; களவு செய்யக் கூசார்; கொலை செய்யக் கூசார். கடன்படல் எல்லாப் பாவங் களையும் வலிந்து கைப்பிடித்தழைக்குந் தூது.
ஒருவனுக்குத் தன் பொருளிற் சிறிது கடனாகக் கொடுத்தவன், அம்முதற்பொருள் வட்டியோடு வரும் வரும் என்று நெடுங்காலம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றான். சிலபோது தனக்கு முட்டு வந்தவிடத்துத் தன் முதற் பொருளையும் வட்டியையும் நம்பித் தான் பிறனிடத்தே கடன்படுகின்றான்; தான் கொடுத்த கடன் வாராத பொழுது, தன் பிற முயற்சிகளை விடுத்துக் கடனுடையவனைப் பலநாளும் பலதரமும் தேடிக் தேடிக் கேட்டுக் கேட்டு, அலைந்து திரிகின்றான்; அவன் அக்கடனைத் தீராதபோது, அவன் மீது தரும சபையிலே வழக்குத் தொடுத்து அவ்வழக்கு நடத்துவதற்குத் தன் காலத்தையும் தன்னெஞ்சிய பொருளையும் பலவாற்றாலும் அவ்வழக்கிலே போக்குகின்றான்; அவ்வழக்கை நெடுங்காலஞ் சென்றபின், தான் அவ்வழக்கிலே தோல்வியடையாது வெற்றி யடைந்தானாயினும் கடனுடையவனிடத்தே தாவரசங்கமப் பொருள்(அசையும் அசையாச் சொத்துக்கள்) உண்டோ இல்லையோ என்று பல நாளும் ஆராய்ந்து கொண்டு திரி கின்றான்; தாவர சங்கமப் பொருள் கண்டு விக்கிரயஞ் செய்தவிடத்தும், அவைகளின் விலை தனக்கு வரற்பாலனவாகிய முதலுக்கும் வட்டிக்கும் செலவுக்கும் போதாத பொழுது தான் பிறனிடத்தே வாங்கிய கடனைத் தீர்த்துவிட்டு என் செய்வேன் என் செய்வேன் என்று பெருமூச்செறிந்து கவலைக்கடலில் மூழ்கித் தன் மனைவி பிள்ளைகளோடு பட்டினியிருந்து மாய்கின்றான். இது இப்படி இருக்க, தன் பொருளனைத்தையும் திருடரால் இழந்தவனோ சில நாள் மாத்திரம் கவலையுற்றுப் பின்பு அக்கவலையை ஒழித்து விட்டுத் தன்னால் இயன்ற தொழில் செய்து மகிழ்ச்சியோடு சீவனம் செய்கின்றான். ஆதலினாலே, ஒருவனுடைய பொருண்முழுதையும் திருடுதலினும், அவன் பொருளிற் சிறிதையேனும் கடனாக வாங்கிக் கொண்டு அதனைத் தீர்க்காமை பெருங் கொடும் பாவம் பாவம்.

நம்முடைய தேசத்தாருள்ளே கடன்படும் வழக்கம் மிகப் பெரிது. கடன்படாதவர் நூற்றுவருள்ளே ஒருவர் கிடைப்பது மிக அரிது. அநேகர், சுபாசுப கருமங்களிலே பிறர் செலவு செய்வதைப் பார்த்து, தாங்களும் அப்படியே செலவு செய்யாதொழிந்தால் தங்களுக்கு அவமானமாகும் என்று எண்ணி, கண்ணை மூடிக்கொண்டு, அகப்படு மட்டும் கடன்பட்டுச் செலவு செய்கின்றார்கள். கடன்பட்டு வட்டி வளர்ந்த பின் முன்னுள்ளதும் இழந்து பசி நோயால் வருந்துதலும் கடனைத் தீர்க்க இயலாது தனிகர் குடியைக் கெடுத்தலும் அவமானமல்லவாம். வரவுக்கேற்ற மட்டாகச் செலவு செய்து முட்டின்றி வாழ்தல் அவமானமாம். ஐயையோ இவர்கள் அறியாமை இருந்தபடி என்னை!

நம்முடைய தேசத்தார்கள் சுபாசுப கருமங்களிலே செலவிடும் பொருள் பெரும்பாலும் யாவரிடத்தே சேர்கின்றது? தொழில் செய்து சீவனஞ் செய்யச் சத்தியுடையவர்களாய் இருந்தும் அது செய்யாத சோம்பேறிகளிடத்தன்றோ? யாசித்துப் பொருள் சம்பாதிக்கும் இச் சோம்பேறிகளுள்ளே அநேகர் உண்டுடுத்து, எஞ்சிய பொருள் கொண்டு ஆபரணஞ்செய்வித்து, வீடுகட்டிவித்து, விளைநிலம் தோட்டம் முதலியவை வாங்கி நூற்றுக்கு இரண்டு மூன்று வீதம் வட்டிக்குக் கொடுத்துக் கொண்டு, செல்வர்களாய் இருக்கின்றார்களே. தொழில் செய்து வருந்திச் சம்பாதிப் பவர்களுள்ளே அநேகர் சுபாசுப கருமங்களிலே இவர்களிடத்திலே கடன் பட்டு, இவர்களுக்கே இறைத்துவிட்டு வட்டி வளர்ந்த பின், இவர்கள் தங்கள் வீட்டு வாயிலில் வந்து வந்தபடி பேச, அவமானமடைந்து, தங்கள் தாவர சங்கமப் பொருளை விற்றுக்கொடுத்து விட்டு அன்னத்திற்கு அலைகின்றார்களே.

அநேகர் ஆபரணஞ் செய்வித்தற்கும், பண்டி குதிரை வாங்கு வதற்கும், வீடு கட்டுவித்தற்கும், விளைநிலம் தோட்டம் முதலியவை வாங்குதற்கும், கடன்படுகின்றார்கள். வட்டி வளர்ந்தபின், கடன்தீர்க்கப் பிறிது வழியின்மையால், அவ்வாபரணம் முதலியவற்றை விற்கின்றார்கள். அவைகள் வாங்கிய விலைக்கு விலைப்படுதலே அரிது. அப்படியாகவே, அவைகளின் விலைப்பொருள் வட்டிக்கும் முதலுக்கும் எப்படிப் போதும்? போதாமையால் தங்களிடத்து முன்னுள்ள தாவரசங்கமப் பொருளையும் விற்றுக் கொடுத்துவிட்டு வறியவர்களாய் வருந்துகின்றார்கள்.

கடன்பட்டு ஆபரணந்தரிப்போரும், பண்டி, குதிரை ஏறுவோரும், பவனிவருவோரும், பிறர் பார்த்து இன்பம் அனுபவிக்க, தாங்கள் தங்கள் கடனை நினைந்து நினைந்து நெஞ்சம் திடுக்குத் திடுக்கெனப் பெருமூச் செறிந்து, துன்பமே அனுபவிக்கின்றார்கள். தாங்கள் துன்பக் கடலில் மூழ்கியும் பிறருக்கு இன்பத்தைக் கொடுக்கும் இந்த டாம்பீகர்களுடைய சீவகாருணியத்தை யாது சொல்வோம்!

வாணிகம் செய்ய விரும்புவோர் இயன்ற மட்டும் தங்கள் கைப் பொருளைக் கொண்டு வாணிகஞ் செய்வதே தகுதி. கைப்பொருளில் லாதவர் கடன் சொல்லிச் சரக்குகளை வாங்கி வாணிகஞ் செய்ய முயன்றால் கடன் கொடுப்பவன் வட்டி வாசிகளை அச்சரக்கின் விலை யோடு சேர்த்தே கொடுப்பான். ஆதலினாலே, அவ்வாணிகம் தலை யெடுக்காது.

கைப்பொருள் சிறிதும் இல்லாதவர், நிலத்திற்கென்றும் கலப்பைக் கென்றும், மாட்டுக்கென்றும், விதைக்கென்றும் இறைக்கென்றும், கடன் பட்டுப் பயிர்த் தொழில் செய்கின்றார்கள். கடன் கொடுத்தவர்களெல்லாரும் அறுப்புக் காலத்தில் வந்திருந்து கொண்டு, ஒற்றைக்கு இரட்டையாக அளந்து கொண்டுபோக, தாங்கள் போசனத்துக்கு முட்டுப்பட்டு வருந்து கின்றார்கள்.
தொடரும்….
பலபாடம் – நான்காம் புத்தகம்