சிவபெருமானுடைய உருவம் ஆன்மாக்களாகிய நம்போலிகளுடைய உருவம் போன்றதா?
ஆன்மாக்களுடைய உருவம் இருவினைக்கு ஈடாகித் தோல், எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்; சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யுந் தியானம், பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்னது இன்னது, இன்ன இன்ன அவயவம் என்று பாவிக்கப்படும் உருவம்.
விளக்கக்குறிப்பு:
உருவம் அல்லது உடல் ஒன்று இருந்தால் அது எதனால் ஆனது? எமது உடலானது ரசம், இரத்தம், மாமிசம், கொழுப்பு, என்பு, மச்சை, சுக்கிலம் ஆகிய சப்த தாதுக்களால் ஆனது என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. சப்த என்றால் ஏழு. இவற்றுக்கு மூலப்பொருள் மாயை என்று சைவம் கூறுகின்றது.
அப்படியாயின் இறைவனின் உருவம் எதனால் ஆனது? அதுவும் மாயையால் ஆன சப்த தாதுக்கள் கூடி எடுத்த உருவமா? என்ற வினாக்கள் எழுகின்றன. சில சமயங்கள் இறையின் உருவத் தோற்றங்களும் மாயையால் ஆனவையே என்று கூறுகின்றன.
ஆனால் சைவமோ இறைவனை விமலன், நிமலன், அமலன், அதாவது மல சம்பந்தம் இல்லாதவன் என்று கூறுகின்றது. அவனுடைய உருவத்துக்கு மலமாகிய மாயை மூலமாக இருக்க முடியாது. அப்படியானால் இறையின் உருவங்களை ஆக்கும் மூலப்பொருள் எது?
குளிரானது கண்ணுக்குப் புலானாகாத நீராவியை நீராகவும் பனிக்கட்டியாகவும் உருவாக்குவதுபோல இறைவன் நம்மீது கொண்ட அளப்பரும் அன்பும் கருணையுமாகிய அருளே இறைவனின் உருவங்களை தருகின்ற மூலமாகும். இறைவனிடம் இருந்து பிரிப்பற்ற இந்த அருளையே நாம் அம்பாள் என்கின்றோம்.
• காயமோ மாயை அன்று; காண்பது சத்தி தன்னால்
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் – 61
சொற்பொருள்: காயம் – உடல்
• உமையலாது உருவம் இல்லை, ஐயன் ஐயாறனார்கே
– 4ம் திருமுறை, அப்பர் தேவாரம்
• உருமேனி தரித்துக் கொண்டது என்றலும், உரு இறந்த
அருமேனி அதுவும் கண்டோம், அருவுரு ஆனபோது
திருமேனி உபயம் பெற்றோம், செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார்- 75
• உருஅருள், குணங்களோடு உணர்வு அருள், உருவில் தோன்றும்
கருமமும் அருள், அரன்தன் கர சரணாதி சாங்கம்
தரும்அருள், உபாங்கம் எல்லாந் தான்அருள், தனக்கொன்று இன்றி
அருளுரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே.
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் – 67
• காணாத அருவுக்கும் உருவுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
– 12ம் திருமுறை – பெரியபுராணம் – 3648
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).