சைவக்கிரியைகள் (நிறைவுப்பகுதி) நியாசமும் பாவனையும் Part – 5

சைவக்கிரியைகள் (நிறைவுப்பகுதி)
நியாசமும் பாவனையும் Part – 5

Part 4, 3, 2,1..links……

சைவக்கிரியைகள் 01

சைவக்கிரியைகள் 02,03

சைவக்கிரியைகள் 04

“சிவனெனவே தேவரையுஞ் சிந்தி அவனை அவனெனக் கண்டார் நிரயத்தார். ”
மற்றத் தேவர்களை வழிபடும்போது அவர்களைச் சிவன் எனவே சிந்தித்து வழிபடு. சிவனை அத்தேவர்களுள் ஒருவராக கண்டு வழிபடுபவர் நரகத்தைச் சேர்வர்.
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய
சங்கற்ப நிராகரணம், குறள் 8:41

கர_நியாசம்:

பின்வரும் மூவகை நியாசங்களில் ஏதாவதொன்றால் அந்தந்த மந்திரங்களுடன் கைகளின் அந்தந்தப் பகுதிகளையும் விரல்களையும் அந்தந்த கை முத்திரைகளினால் தொட்டு இறையை அங்கு பதித்து கிரியை செய்பவர் தமது கரங்களை சிவ கரங்கள் அல்லது சிவ ஹஸ்தம் ஆக்குதல் கர நியாசம் ஆகும். இது மூன்று வகைப்படும்.

1. ஸ்திதி_நியாசம்:

ஈசான, தற்புருஷ, அகோர, வாமதேவ, சத்தியோசாத, ஹிருதய, சிரசு, சிகை, கவச, நேத்திர, அஸ்திர மந்திரங்களினால் பெருவிரல் தொடங்கி சிறுவிரல் வரை உள்ளங்கை, புறங்கைகளையும் அந்தந்த மந்திரங்களுடன் தொட்டு செய்யும் நியாசம் ஸ்திதி நியாசம் ஆகும். இது இல்லறத்தாருக்கு உரியது.

2. சிருஷ்டி_நியாசம்:

ஈசான, தற்புருஷ, அகோர, வாமதேவ, சத்தியோசாத, ஹிருதய, சிரசு, சிகை, கவச, நேத்திர, அஸ்திர மந்திரங்களினால் வலது கைப் பெருவிரல் தொடங்கி இடது கைப் பெருவிரல் வரை உள்ளங்கை, புறங்கைகளையும் அந்தந்த மந்திரங்களுடன் தொட்டு செய்யும் நியாசம் சிருஷ்டி நியாசம் ஆகும்.

3. இலய_நியாசம்:

ஈசான, தற்புருஷ, அகோர, வாமதேவ, சத்தியோசாத, ஹிருதய, சிரசு, சிகை, கவச, நேத்திர, அஸ்திர மந்திரங்களினால் சிறுவிரல் தொடங்கி பெருவிரல் வரை உள்ளங்கை, புறங்கைகளையும் அந்தந்த மந்திரங்களுடன் தொட்டு செய்யும் நியாசம் இலய நியாசம் ஆகும். இது துறவறத்தாருக்கும், வானப்பிரஸ்தருக்கும் உரியது.

இந்த கர நியாசத்தின் பின் அக்கரத்தினால் செய்யப்படும் எக் கிரியையும் சிவனது கரங்களினால் செய்யப்படுவதாகப் பாவனை. கர நியாசத்தின் பின்னரேயே அங்க நியாசம் செய்ய வேண்டும்.

அங்க_நியாசம்:

உடலில் அல்லது ஊடகத்தில் பின்வரும் நியாசங்களில் இயலுமான நியாசங்களைச் செய்து அதனை சிவதனு என்னும் சிவனது உடல் ஆக்குக.

1. தண்ட_பங்கி_நியாசம்:

தண்டம் என்றால் நடுவுடல்.
ஈசான மந்திரத்தினால் சிவனது சிரசும்,
தற்புருஷ மந்திரத்தினால் முகமும்,
அகோர மந்திரத்தினால் மார்பும்,
வாமதேவ மந்திரத்தினால் இடையும்,
சத்தியோசாத மந்திரத்தினால் கை, கால்கள், அவயவங்களும் பாவனையுடன் கூடிய தொடுகைகளினால் குறிப்பிட்ட ஊடகத்தில் அல்லது விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் தண்ட பங்கி நியாசம் ஆகும்.

2. முண்ட_பங்கி_நியாசம்:

முண்டம் என்பது தலை.
ஈசான மந்திரத்தினால் சிவனது உச்சி நோக்கிய சிரசும்,
தற்புருஷ மந்திரத்தினால் கிழக்கு (அல்லது தன்னை) நோக்கிய சிரசும்,
அகோர மந்திரத்தினால் தெற்கு (அல்லது இடது பக்கம்) நோக்கிய சிரசும்,
வாமதேவ மந்திரத்தினால் வடக்கு (அல்லது வலப் பக்கம்) நோக்கிய சிரசும்,
சத்தியோசாத மந்திரத்தினால் மேற்கு (அல்லது பின்புறம்) நோக்கிய சிரசும்,
பாவனையுடன் கூடிய தொடுகைகளினால் குறிப்பிட்ட ஊடகத்தில் அல்லது விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் முண்ட பங்கி நியாசம் ஆகும்.

3. வக்த்ர_பங்கி_நியாசம்:

வக்த்ரம் என்பது முகம்.
ஈசான மந்திரத்தினால் சிவனது உச்சி நோக்கிய முகமும்,
தற்புருஷ மந்திரத்தினால் கிழக்கு (அல்லது தன்னை) நோக்கிய முகமும்,
அகோர மந்திரத்தினால் தெற்கு (அல்லது இடது பக்கம்) நோக்கிய முகமும்,
வாமதேவ மந்திரத்தினால் வடக்கு (அல்லது வலப் பக்கம்) நோக்கிய முகமும்,
சத்தியோசாத மந்திரத்தினால் மேற்கு (அல்லது பின்புறம்) நோக்கிய முகமும்,
பாவனையுடன் கூடிய தொடுகைகளினால் குறிப்பிட்ட ஊடகத்தில் அல்லது விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் வக்த்ர பங்கி நியாசம் ஆகும்.

4. ஹிருதயாதி_நியாசம்:

உடல் அவயவங்களில்,
ஹிருதய மந்திரத்தினால் இருதயமும்,
சிரசு மந்திரத்தினால் தலையும்,
சிகை மந்திரத்தினால் குடுமியும்,
கவச மந்திரத்தினால் கவசமும்,
நேத்திர மந்திரத்தினால் கண்களும்,
அஸ்திர மந்திரத்தினால் ஆயுதங்களும்
பாவனையுடன் குடிய தொடுகைகளினால் சிவனது சரீர அங்கமாக விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் ஹிருதயாதி நியாசம் ஆகும்.

5. பஞ்ச_கலா_நியாசம்:

பஞ்ச கலைகளில் சாந்தியதீத கலை மந்திரத்தால் உச்சி முகத்தையும்,
சாந்தி கலை மந்திரத்தால் கிழக்கு (அல்லது தன்னை நோக்கிய) முகத்தையும்,
வித்யா கலை மந்திரத்தால் தெற்கு ( அல்லது இடது பக்கம்) நோக்கிய முகத்தையும்,
பிரதிஷ்டா கலா மந்திரத்தால் வடக்கு ( அல்லது வலது பக்கம்) நோக்கிய முகத்தையும்,
நிவிர்த்தி கலா மந்திரத்தால் மேற்கு (அல்லது பின்புறம்) நோக்கிய முகத்தையும்,
பாவனையுடன் குடிய தொடுகைகளினால் சிவனது சரீர அங்கமாக விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் பஞ்ச கலா நியாசம் ஆகும்.

6. அத்துவா_நியாசம்:

ஒவ்வொரு முகங்களிலும்
மந்திர அத்துவா
பத அத்துவா
வர்ண அத்துவா
புவன அத்துவா
தத்வ அத்துவா
கலா அத்துவா
ஆகிய ஆறு அத்துவாக்களையும்,
உச்சி நோக்கிய ஈசான முகத்தில் சாந்தியாதீத கலா மந்திரத்துடனும்,
கிழக்கு ( அல்லது தன்னை) நோக்கிய தற்புருஷ முகத்தில் சாந்திகலா மந்திரத்துடனும்,
தெற்கு (அல்லது இடது பக்கம்) நோக்கிய அகோர முகத்தில் வித்யாகலா மந்திரத்துடனும்,
வடக்கு (அல்லது வலது பக்கம்) நோக்கிய வாமதேவ முகத்தில் பிரதிஷ்டா கலா மந்திரத்துடனும்,
மேற்கு (அல்லது பின்புறம்) நோக்கிய சத்தியோசாத முகத்தில் நிவிர்த்தி கலா மந்திரத்துடனும்
பாவனையுடன் குடிய தொடுகைகளினால் சிவனது சரீர அங்கமாக விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் அத்துவா நியாசம் ஆகும்.

7. தத்துவ_நியாசம்:

முப்பத்தாறு தத்துவங்களையும் சிவனது சரீரமாக விக்கிரகத்தில் தொட்டு நியசித்தல் தத்துவ நியாசம் ஆகும்.

8. பஞ்சாட்சர_மந்திர_நியாசம்:
பஞ்சாட்சர மந்திரத்தின் ந-ம-சி-வா-ய என்னும் ஐந்து எழுத்துக்களையும் சிவனது சரீரமாக விக்கிரகத்தில் அல்லது ஊடகத்தில் தொட்டு நியசித்தல் பஞ்சாட்சர மந்திர நியாசம் ஆகும்.

9. அட்சர_நியாசம்:

ஐம்பத்தொரு அட்சரங்களையும் சிவனது சரீரமாக தொட்டு விக்கிரகத்தில் நியசித்தல்

10. ஆகம_நியாசம்:

இருபத்தெட்டு சிவாகமங்களையும் சிவனது சரீரமாக தொட்டு விக்கிரகத்தில் நியாசித்தல் ஆகம நியாசம் ஆகும்.
இவ்வாறு வேறும் பல நியாசங்கள் உள்ளன.
இவற்றில் தண்டபங்கி (உடல் கொடுத்தல்), முண்டபங்கி(ஐந்து தலைகள் கொடுத்தல்), வக்த்ர பங்கி (முகம் கொடுத்தல்) ஆகிய நியாசங்கள் முக்கியமானவை.
இவற்றுடன் ஏனைய நியாசங்களில் ஒன்றையோ பலவற்றையோ கிரியைகளைப் பொறுத்தும், கிடைக்கும் கால நேர அவகாசங்களைப் பொறுத்தும், கிரியைகளைப் பொறுத்தும் கூட்டியும் குறைத்தும் சேர்த்தும் செய்யலாம்.
முற்றும்.
By Dr. Ramanathan Lambotharan (MD)