சைவம் கூறுகின்ற மாயையின் தனித்துவம் என்ன?

சைவம் கூறுகின்ற மாயையின் தனித்துவம் என்ன?

• சைவம் மாயைக்கு கொடுக்கும் விளக்கம் தனித்துவமானது; வேதாந்திகள் கொடுக்கும் ஒன்றும் இல்லாத இல்பொருள் மாயை என்னும் விளக்கத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது.

• மா – ஒடுங்குதல்; யா – வருதல். யாவும் ஒடுங்குதலும், தோன்றுதலும் இதில் இருந்தே ஆதலால் மாயா எனப்படுகின்றது எனச் சைவம் கூறுகின்றது.

• மாயை என்பது சூக்குமமான சடம் என்றும், இந்த சடமாகிய மூலத்தில் இருந்தே சடப்பொருள்களாலான இந்த உலகங்கள் யாவும் அவற்றின் இருப்புகளும் தோன்றுகின்றன என்றும் சைவம் கூறுகின்றது. முதலில் சடசக்தியின் அலை வடிவாகவும், பின்னர் நுண்ணிய பரமாணுத் துணிக்கைகளாகவும், பின்னர் அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும் உருவாகி அண்டத்தொகுதிகளாகவும் விரிகின்றது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவது சைவத்தின் கூற்றுடன் நன்கு ஒத்துப்போகின்றது. ஆயினும் சடத்துக்கெல்லாம் மூலமாகிய மாயையை விஞ்ஞானத்தால் அளக்கவோ, கணிக்கவோ, ஊகிக்கவோ, அறியவோ முடியாது என்பது சைவத்தின் உறுதியான கொள்கை.

• உலகங்கள் மட்டுமல்ல; சடப்பொருளாகிய எமது உடல்களும், உடற்கருவிகளும் கூட மாயையில் இருந்தே ஆக்கப்படுகின்றன என்று சைவம் கூறுகின்றது.

• சடப்பொருட்களான எமது உலகங்கள், உடல்கள், உலகின் அனுபவப் பொருட்கள் மட்டுமல்ல; எமது சிந்தனைக் கருவிகளான மனம், புத்தி, சித்தம் ஆகியவை கூட இந்த மாயையில் இருந்து உருவான சடக் கூறுகளே என்று சைவம் கூறுகின்றது.

• மாயாவினே- மாயையால் உலகை சிருஷ்டிப்பவர்
– சிவ சஹஸ்ர நாமம் 586

• இறையை உயிரில் இருந்து பிரிக்கின்ற அழுக்காகிய இந்த மாயை இறையின் ஒரு கூறாக அல்லது பகுதியாக இருக்க முடியாது என்று சைவம் கூறுகின்றது. ஏனெனில் இறைவன் இயல்பாகவே மலங்களின் தொடர்பற்றவன், அமலன், நிமலன், நிர்மலன். அநாதியான இந்த மாயையை இயக்குவதும் இறைவனின் சக்தியே என்று சைவம் கூறுகின்றது. இது மறைப்பு சக்தியான திரோதான சக்தி.

• ஆணவத்தோடு உள்ள மற்றொரு அழுக்கு மலம் மாயை. உணர்வும், அறிவும் அற்ற சடப்பொருளாகிய உலகமும், கருவி கரணங்களும் அறிவும் உணர்வும் உள்ள சித்துப்பொருளாகிய இறையில் இருந்தோ, உயிரில் இருந்தோ தோன்ற முடியாது. அது சடத்தில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். சடமாகிய உலகின் தோற்றத்துக்கு காரணமான சடத்தை சைவம் மாயை என்று கூறுகின்றது. இந்த மாயை சூட்சுமமானது. இதன் ஒரு சிறு பகுதி இறைவனால் படைப்புக்கு மூலப்பொருளாகப் பாவிக்கப்படுவது.

• இறைவனால் தேவைக்கேற்ப பாவிக்கப்படும் சடசக்தியாக இருப்பது இந்த மாயை. இதனால் மாயை இறைவனின் சக்தி என்றும் உபசாரமாகச் சொல்லப்படுவது.
” விமலனுக்கோர் சத்தியாய்”
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார் 143

• ஆயினும் மாயாள் என்னும் மாயையானது இறைவனிடம் இருந்து பிரிந்தே இருக்கும் சடசக்தியாகும். இது இறைவனுடன் என்றும் பிரியாது விளங்குகின்ற உணர்வும், அறிவும் உள்ள சித்சக்தியாகிய உமையில் இருந்து வேறுபட்டது.

• மாயை எமது உடல், கருவி, கரணங்களுக்கு மூலமாக இருப்பதால் இருளில் விளக்கு போல இருந்து ஓரளவுக்கு தெளிவைக் கொடுக்கின்றது; உயிருக்குச் சிறிது அறிவு விளங்கவும் உதவுகின்றது.
”விடிவாமளவும் விளக்கனைய மாயை”
– மெய்கண்ட சாத்திரம், திருவருட்பயன் 30.

• வகுப்பிலே தூங்குகின்ற மாணவனை தடியால் தட்டி எழுப்பும் ஆசிரியர் போல, ஆணவத்திலே அழுந்தியிருக்கும் உயிரை மாயையினால் இறைவன் தட்டி எழுப்புகிறான் என்று சைவம் கூறுகின்றது.
ஆசான் முன்னே துயிலும் மாணவரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடாண வத்தரை,
ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே
– 10ம் திருமுறை – திருமந்திரம், பாடல் 2163

• மாயையினால் வருகின்ற இந்த அரைகுறை வெளிச்சம் உள்ளதை உள்ளபடி முழுமையாக அறிய உதவாது. மாயையால் வரும் இவ் விளக்கு வெளிச்சத்தால் ஆணவ இருளாகிய அறியாமையை முழுமையாகப் போக்கடிக்க முடியாது. இந்த அரைகுறை விளக்கம் உண்மையை உள்ளபடி உணாரமல் மயக்கவும் செய்யும்.
”மாயை மயக்கமும் செய்யு மன்றே”
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானசித்தியார்
சுபக்கம் 143.

”மாயாந்து பிரக்ருதீம் வித்யாத்
மாயிநந்து மஹேச்வரம்
தஸ்யாவய பூதஸ்து
வ்யாப்தம் ஸர்வமிதம் ஜகத்”

மாயையை பிரகிருதியின் காரணம் என அறிக; மாயையைத் தனது உடமைப் பொருளாக உடையவன் மகேசுவரன். இந்த உலகம் முழுமையும் அவனது அவயவங்களாக நின்று தொழிற்படும் உயிர்களால் நிரம்பியுள்ளது.
– கிருஷ்ண யசுர் வேதம், சுவேதாசுவர உபநிடதம்.

• “மாயா கல்பிதே தேச கால கலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹாயோகீவ ய: ஸ்வேச்சயா”
வித்துளே முளை போல் முன்னம் விகற்பம் இல் இச்சகம் பின் கற்பித மாயா தேய கால கர்மத்தால் பற்பல சித்திரம் விரிப்பன் யாவன்? சித்தனும் மாயிகன் போல்
சத்தியால்; குருவாம் அந்தத் தட்சிணா மூர்த்தி போற்றி
-ஆதி சங்கரரின் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்ரம் 03, அழகு தமிழில் இரமண மஹரிஷி

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *