தேடிய கர்மா மூன்று விதங்களில் வைப்பில் உள்ளது.
1. #பிராரப்தம்:
இப் பிறவியில் நாம் அனுபவித்துக் கழிப்பதற்காக வரும்போது கொண்டு வந்த எமது கர்ம மூட்டையின் ஒரு பகுதி இது. இதை ஊழ் என்றும் விதி என்றும் கூறுவர்.
”பேறு இழவு இன்பமோடு பிணி மூப்பு சாக்காடு எனும் ஆறும் முன் கருவுட் பட்டது”
வாழ்வில் நாம் சம்பாதிப்பவை, இழப்பவை அவற்றால் வரும் இன்பதுன்ப அனுபவங்களான போகங்கள் , நமக்கு வரும் நோய்கள், முதுமையடையும் காலம், எவ்வாறு இறப்போம் போன்ற ஆறும் நாம் கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டவை.
– மெய்கண்ட சாத்திரம், சிவஞான சித்தியார் 99
“ஊழ் அல்லது உணவாகா”
– மெய்கண்ட சாத்திரம், சிவப்பிரகாசம் 27
“ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்”
– சிலப்பதிகாரம்
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
– திருக்குறள் – 380
2. #சஞ்சிதம்:
இதுவரை அனுபவத்துக்கு வராது, இனிமேல் வருகின்ற பிறவிகளில் அனுபவிப்பதற்காகச் சேமிப்பில் உள்ள எமது கர்மவினைகள் சஞ்சிதம் ஆகும்.
“சஞ்சித பாப விநாசன லிங்கம்”
– ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம்.
3. #ஆகாமியம்:
இப் பிறவியில் நாம் செய்யும் வினைகள் ஆகாமியம் ஆகும். இவை எமது இறப்பின் பின் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிப்பதற்காகச் சஞ்சித மூட்டையில் சேர்க்கப்படும். ஆயினும் விதிவிலக்காக இவற்றில் ஒரு சில இப்பிறப்பிலேயே பலனைத் தரலாம்.
“குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம்,
செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள்
இம்மை யேவருந்திண்ணமே”
– 7ம் திருமுறை, சுந்தரர் தேவாரம்
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே
– 10ம் ம் திருமுறை, திருமந்திரம் 532
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.
– திருக்குறள் -319
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).