சைவசமயிகள் அவசியமாக சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?

சைவசமயிகள் அவசியமாக சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?

விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.
விளக்கக் குறிப்பு:
மிக ஆதியான எமது சமய சின்னங்கள் விபூதியும், உருத்திராட்சமுமே. வேதங்களில் ஏனைய சமய சின்னங்களான சந்தனம், குங்குமம், நாமம், துளசி மாலை போன்றவை குறிப்பிடப்படவில்லை.
மகாபாரதத்தின் கிருஷ்ணரும், அர்ச்சுனனும், இராமாயணத்தின் இராமரும் விபூதி அணிந்தவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றார்கள். ஆதியில் பெருமாள் கோவில்களில் உள்ள விஷ்ணுவுக்கும் திருநீறே அணியும் வழமை இருந்தது.

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்மிர குண்டலம் கண்டிகை
ஓதியவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே
– 10 ம் திருமுறை, திருமந்திரம் – 609.

வேதத்தில் உள்ளது நீறு
– 2ம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே யிடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர்பெருமான் தன்னை
உரிய சொல்லா லிசை மாலைகளேத்தி யுள்ளப் பெற்றேற்கு
அரிய துண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி யென்றுமே
– நாலாயிர திவ்வியப் பிரபந்தம், நம்மாழ்வார் திருவாய்மொழி 4-5-6

ஆசு இல் நான் மறைப்படியும், எண்ணில் கோடி
ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறிப்
பூசினான் வடிவமெல்லாம் விபூதியால் அப்
பூதியினைப் புரிந்த சடைப்புறத்தே சேர்த்தான்
தேசினால் அப்பொருப்பின் சிசிரம் மேவும் சிவன்
இவனே போலும் எனத் தேவர் எல்லாம்
பேசினார் வரி சிலைக்கை விசயன் பூண்ட
பெருந் தவத்தின் நிலை சிலர்க்குப் பேசலாமோ
– வில்லிபுத்தூராழ்வார் மகாபாரதம்.

“ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ”
இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார்.
-அதர்வ வேதம், ராம ரஹஸ்ய உபநிஷத் 2: 31

“பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ”
திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கண் இருந்து, விபூதி ருத்திராக்ஷ தாரணம் உடையவராய் உபாசிக்கின்றனர்.
– அதர்வ வேதம், பஸ்மஜாபால உபநிஷத்

“ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம்
பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா ”
சாட்சாத் உருத்திரரே போலத் தங்க நிறச் செஞ்சடையுடனும்,
உத்தூளனமாக உடலெங்கும் நீறு பூசிய மேனியருமாக
பார்ப்போரின் உள்ளம் கவரும் ராமர் காணப்பட்டார்.
– அத்தியாத்ம ராமாயணம்

விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?

சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.
(புறத்தில் – வெளியில்)
விளக்கக் குறிப்பு:
• நீறில்லா நெற்றி பாழ்
– ஔவையார் அருளிய நல்வழி – 24
• திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே
– 6ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *