சைவத்தின் அடிப்படையான குரு, லிங்க, சங்கம வழிபாடு.

சைவத்தின் அடிப்படையான
குரு, லிங்க, சங்கம வழிபாடு.

199. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?
சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவும் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும்.
(சைலம்=சிலை; சங்கமம் = மெய்யடியார் கூட்டம்)

விளக்கக்குறிப்பு:
எமது சைவம்
1. குரு
2. லிங்கம்
3. சங்கமம்

என்னும் மூன்றையும் இறைவன் வெளிப்பட்டு நிற்கும் இடங்களாகச் சொல்லுகின்றது.
• குரு என்பது அஞ்ஞான இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றும் ஞானகுருவையே குறிக்கின்றது.
• போலிக் குருமாரினதும், போலி அடியார்களினதும் வலையில் வீழாமல் மெய்யான குருவையும், மெய்யான அடியார்களையும் இனம் கண்டுகொள்வதற்கு சைவ நூல்களிலுள்ள ஆச்சாரிய இலட்சணமும், அடியார் இயல்புகளும் தெரிந்திருத்தல் வேண்டும்.
• போலிக்குருமாரைப் பற்றி திருமூலர் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே .
– 10ம் திருமுறை – திருமந்திரம் 1680

• போலிக்குருமாரைப் பற்றி காழிக் கண்ணுடை வள்ளல் பின்வருமாறு கூறுகின்றார்.
கூலித் தொழிலாளர், கொண்டு விற்போர் போன்ற
வேலைப் பகடிகளை மேவாதே – காலம் போற்
பார்த்திருக்க வைத்த பரமகுருவைப் பேண
வார்த்தையிலை தீண்டா மனம்.
– ஒழிவில் ஒடுக்கம் 03

• கும்பம், விம்பம், இயந்திரம் மூன்றும் இறையின் திருமேனிகளாம்.
• கும்பம் என்பது நிறைகுடம்.
• விம்பம் என்பது உருவச்சிலைகளும் சித்திரங்களும். இந்த உருவங்கள் எல்லாவற்றிலும் மூலமானதும், முதன்மையானதும், சிறப்பானதும் சிவலிங்கம் ஆகும்.
• காணாத அருவுக்கும் உருவுக்கும் காரணமாய்

நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்
கண்ணுக்குப் புலப்படாத அருவத் திருமேனிக்கும்,
கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும்
மூலமான இருப்பிடமாய், நீண்ட பாம்பை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுவ தற்குச் சிறந்த அடையாளமாய குறியாய் விளங்கும் சிவலிங்கம்.
பெரியபுராணம் -12ம் திருமுறை – 3648 ம் பாடல்

• உலகத் தோற்றம், ஒடுக்கம். இருப்பு யாவும் – சிவலிங்க வடிவம் – அண்ட லிங்கம் என்று திருமந்திரம் கூறும்.

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே
– திருமந்திரம் – 10ம் திருமுறை -1712ம் பாடல்

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).