சைவம் அழியுமா? தமிழ் அழியுமா?

சைவம் அழியுமா? தமிழ் அழியுமா?

சரி மொழி அழியுமா? தமிழ் அழியுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஏதோ புரியாத சைவமும், சித்தாந்தமும் சொல்லி குழப்பி விட்டீர். இந்தச் சைவமும் ஒரு காலத்தில் அழியும்தானே? இன்றில்லாவிடில் என்ன இன்னும் 1000, 10000 அல்லது 100000 வருஷத்திலாவது அழியும் தானே!
ஒரு காலத்தில் என்ன; இப்போதே எமது தலைமுறையிலேயே சைவம் நலிகிறது என்றும் அழிகிறது என்றும் ஓலமிட்டு பல சங்கங்களையும் சபைகளையும் கூட்டி பல வேலைகளையும் திட்டங்களையும் செய்கின்றோமே?

இது அடுத்த தலைமுறைக்குப்போவதே பெரும் காரியமாக இருக்கின்றது. ஆகவே இந்த கேள்வி அபசாரமாகப்பட்டாலும் பொருத்தமானதுதானே? இதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

திருவதிகை மனவாசகம் கடந்த தேவர் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கில் ஒன்றாகிய உண்மை விளக்கம் அருளியவர். அவர் அதிலே தனது குருவான மெய்கண்டாரை ஒரு கேள்வி கேட்கிறார். ” அது சரி இப்படி எல்லாம் அழியும் என்று கூறுகிறாயே? மொழியும் அழியும் எழுத்துக்களும் அழியும். அப்படி என்றால் நீ சொல்லும் இந்த அஞ்செழுந்து மந்திரமும் அப்படி அழியும் எழுத்துத்தானோ?” போட்டாரே ஒரு போடு.

நாதாந்த நாடகத்தை நன்றா அருள்செய்தீர்
ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி- தீதுஅறவே
அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ
தஞ்ச அருள்குருவே சாற்று
-உண்மை விளக்கம் பாடல் 39-

எனக்குத் தஞ்சமாகவுள்ள எனது அருட் குருவே, நீர் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த திருக்கூத்தினை நன்றாக விளக்கி அருளினீர். மலப்பிடிப்பினாலான தீதுகள் அறுந்து போகும்படி இப்போது அஞ்சு எழுத்தின் பொருளை எனக்கு உள்ளபடி ஓதுவீராக. இது இறை எழுத்து ஆகில், இதுவும் மற்ற எழுத்துக்களைப் போல கால ஓட்டத்தில் அழிந்து விடுகின்றதாய் விடுமோ?
இதற்கு மெய்கண்டார் என்ன சொன்னார்?

உற்ற குறி அழியும் ஓதுங்கால் பாடைகளில்
சற்றும் பொருள்தான் சலியாது- மற்றுஅது கேள்
ஈசன்அருள் ஆவி எழில்ஆர் திரோதமலம்
ஆகில் எழுத்து அஞ்சின் அடைவுஆம்
-உண்மை விளக்கம் பாடல் 40-

இதைச் சொல்லுங்கால் பாஷைகளில் குறி வடிவங்கள் அழியும். அவை சுட்டும் பொருள்களும் அழியும். ஆனால் இந்த அஞ்செழுத்து சுட்டும் பொருள் அழியாது. அது என்னவென்று கேள். ஈசன், அருட் சத்தி, ஆவியாகிய ஆன்மா, திரோதான சத்தி, மலம் என்னும் ஐந்துமாம்.
ஆகவே பாஷைகள் அழியலாம்; அவற்றின் எழுத்து வடிவங்கள் அழியலாம்; மற்றைய எல்லாப் பொருள்களும் அழியலாம்; அவைகளுக்கு பாசைகளில் உள்ள பெயர்களும் அழியலாம்;

ஆனால் இந்த சிவாயநம என்னும் ஐந்தெழுத்து சுட்டும் மேற்சொன்ன ஐந்தும் என்றும் நிலையானவை.

சி- சிவன்
வா- அருட் சத்தி
ய- ஆன்மா
ந- திரோதான சத்தி
ம- மலம்
இதையே திருவருட் பயன்

“ஏகன் அனேகன் இருள் கன்மம்
மாயை இரண்டு இவை ஆதி இல்”
என்று கூறுகின்றது. இதிலே
* ஏகன்- ஒருவனாகிய இறைவன்
* அனேகன்- அனந்தமாக உள்ள உயிர்கள்
* இருள்- ஆணவ மலம்
* கன்மம்- கன்ம மலம்
* மாயை இரண்டு- சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் மலமாயை இரண்டு
இவைகளுக்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை.

இப்போது விளங்குகின்றதா சைவம் ஏன் சாசுவதமானது; என்றும் நிலையானது; அழிவற்றது என்று. இன்றைக்கு விஞ்ஞானத்திலும் கடந்த சில வருடங்களில் பல் வேறு பெயர்களாக வைக்கப்பட்டுள்ள பல உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் சுத்தாத்துவித சித்தாந்த சைவத்தின் கொள்கை விளக்கங்களுக்கு உரம் சேர்ப்பதாக இருப்பதே இதற்கு சான்று.
By. Dr. Lambotharan Ramanathan (MD)