பஞ்சப் பிரளயங்கள்

பஞ்சப் பிரளயங்கள்

-சங்க இலக்கியத்தில் இருந்து பாரதி பாடல் வரை-

குருவடி பணிந்து

இ. லம்போதரன் MD

www.knowingourroots.com

 

ஐந்து வகையான உலக அழிவுகளைப் பற்றி இந்து மதம் கூறுகின்றது. இந்த அழிவுகள் எமது பூமிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான அண்டத்தொகுதிகளுக்கும் பல்வேறுபட்ட காலங்களில் நடைபெறும் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. 

  1. நைமித்திய பிரளயம்; இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நடைபெறுவது. இதன்போது எமது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியுடன் அதற்கும் அப்பாலுள்ள புவர்லோகம் என்னும் அன்ட்றோ மீடா அண்டத்தொகுதியும் அதற்கும் அப்பால் விளங்கும் சுவர்லோக அண்டத் தொகுதியுமாக மூன்று அண்டத்தொகுதிகளும் மொத்தமாக நீரில் அமிழும். இதையே பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் “பசும்பொன் உலகமும் மண்ணும் விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல” என்று குறிப்பிடுகின்றது.

ஒவ்வொரு மன்வந்தரமும் 71 சதுர் யுகங்கள் கொண்டது. சதுர் என்றால் நான்கு. சத்தியயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று அடுத்தடுத்து வரும் நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். இவ்வாறான ஒரு சதுர்யுகத்தில் 43 இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் உள்ளன. ஆகவே 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒரு மன்வந்தரம் முப்பது கோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் ஆகும். 

இந்த மன்வந்தரம் என்பது ஒரு மனுவின் காலமாகும். இப்போது உள்ள மனு வைவஸ்வான் என்னும் ஒரு ஆதித்தன். இதனால் இப்போது நடைபெறும் இந்தக் காலத்தை வைவஸ்வத மன்வந்தரம் என்பர். 

இதிலே உள்ள எழுபத்தொரு சதுர்யுகங்களில் இருபத்தேழு சதுர்யுகங்கள் ஏற்கெனவே கழிந்துபோயின். தற்போது நடப்பது இருபத்தெட்டாவது சதுர் யுகமாகும். இந்த இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் முதல் மூன்று யுகங்களான சத்திய யுகம் 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களும், திரேதா யுகம் 12 இலட்சத்து தொண்ணூற்றாறாயிரம் வருடங்களும், துவாபர யுகம் 8 இலட்சத்து அறுபத்துநாலாயிரம் வருடங்களும் கழிந்து தற்போது நடக்கும் கலியுகம் பெப்ரவரி மாதம் 17ம் திகதி கிமு 3102 ம் வருடம் தொடங்கியது

இந்த கலியுகம் மொத்தம் 4 இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் கொண்டது. இதிலே இன்று 2024ம் ஆண்டுடன்  வெறும் 5125 வருடங்களே இதுவரை கழிந்திருக்கின்றன. இந்த கலியுகம் முடிய இன்னமும் 4 இலட்சத்து இருபத்து ஆறாயிரத்து எண்ணூற்று எழுபத்தைந்து வருடங்கள் உள்ளன. அப்போதும் உலக அழிவு நடைபெறாது. தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கி இருக்கும் அக்கலியுக முடிவில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும் என எமது இந்து சமயப் புராண நூல்கள் பகர்கின்றன. கல்கி மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். அத்துடன் கலியுகம் முடிந்து இருபத்து ஒன்பதாவது சதுர்யுகத்தின் முதற்பகுதியான சத்திய யுகம் என்ப்படும் கிருத யுகம் பிறக்கும். இதையே ரஷ்சிய புரட்சி பற்றிப் பாடிய பாரதியும் “கிருத யுகம் எழுக மாதோ” என்று பாடினான். இவ்வாறாக இன்னும் 43 சதுர்யுகங்கள் கழிந்த இந்த மூவுலகங்களும் நீரில் அமிழும். இதுவே நைமித்திய பிரளயம் ஆகும். இப் பிரளய காலம் ஒரு கிருதயுக காலத்துக்கு அதாவது 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களுக்கு நிலைத்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் அடுத்த மன்வந்தரம் தொடங்க இம்மூவுலகங்களும் மீண்டும் படைக்கப்படும்.

குறிப்பு; 

சதுர்யுகம்

  1. கிருதயுகம் என்னும் சத்திய யுகம் – 17, 28, 000 வருடங்கள்
  2. திரேதாயுகம் – 12, 96, 000 வருடங்கள்
  3. துவாபரயுகம் – 8, 64, 000 வருடங்கள்
  4. கலியுகம் – 4, 32, 000 வருடங்கள்

மொத்தமாக ஒரு சதுர் யுகம் 43, 20, 000 ( நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்) வருடங்கள் கொண்டது. 

மன்வந்தரம்

71 சதுர் யுகம் – ஒரு மன்வந்தரம் – 306, 720, 000 (முப்பதுகோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள்)கல்பம்

ஆயிரம் சதுர் யுகங்கள் – ஒரு கல்பம் – 4, 320, 000, 000 (நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடங்கள்)

  1. நித்தியப் பிரளயம்; இது ஒவ்வொரு கல்ப கால முடிவிலும் நடைபெறும் அண்ட அழிவாகும். இதிலே மேற்சொன்ன மூவுலகங்கள் உட்பட பிரம்மாவின் ஆதிபத்தியத்துக்கு உட்ப்பட்டு அவரால் படைக்கப்பட்ட ஈரேழு பதினான்கு உலகங்கள் உள்ளிட்ட ஆடகேசுர புவனம், காலாக்னிருத்ர புவனம், கூஷ்மாண்ட புவனம் என ஆறு பேரண்டத் தொகுதிகள் அழியும். 

இந்த கற்ப காலம் எனப்படுவது ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது. இது 432 கோடி வருடங்கள் கொண்டது. இது படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கு ஒரு பகல் பொழுது. இப்பிரளய காலம் அவரின் இரவுப்பொழுது ஒரு கல்ப காலத்துக்கு நீடித்திருக்கும். இதன் முடிவில் தனது அடுத்த நாளில் பிரம்மா மீண்டும் இவ்வுலகங்களைப் படைக்க அவை இருப்புக்கு வரும். 

  1. மத்திம பிரளயம்: மேற்குறிப்பிட்ட ஆறு பேரண்டத்தொகுதிகள் உள்ளிட்ட 164 அண்டத்தொகுதிகள் கொண்ட பிரகிருதி மாயா புவனங்கள் யாவும் முற்றாக  ஓடுங்கும் காலம் மத்திமப் பிரளய காலமாகும். கால தத்துவம் கடந்து நிகழ்வதால் இதனுடைய காலக்கணிப்பு நமது கணிப்புக்கு அப்பாற்பட்டது. இதை நிகழ்த்துபவர் வித்தியா தத்துவ புவனங்களில் உறைகின்ற ஸ்ரீகண்டருத்திரர் ஆவார்.                                                                             
  2. அவாந்தரப் பிரளயம்: முன் மத்திமப் பிரளயத்தில் ஒடுங்கிய எமது இயற்கை விதிகளுக்கு உட்பட்ட பிரகிருதி புவனங்களின் பௌதிக விஞ்ஞான விதிகளுக்கும், காட்சிகளுக்கும், கணிப்புகளுக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்ட அடுத்துள்ள இருபத்தேழு வித்தியா தத்துவ புவனங்களின் ஒடுக்கம் அவாந்தரப் பிரளயம் ஆகும்.  இதை நிகழ்த்துபவர் சுத்தமாயா உலகில் உறையும் அனந்தேசுவரர் ஆவார்.  

 

  1. மகா பிரளயம்; முன் ஒடுங்கிய புவனங்களோடு அதற்கும் அப்பாலாயுள்ள முப்பத்தொரு புவனங்களும் ஒடுங்குகின்ற, எமது வார்த்தைகளுக்கும் கருத்துக்கும் கணிப்புக்கும் எட்டாத சுத்தமாயா உலகப் பிரளயமே இறுதியான பிரளயம் ஆகும். ஆதலால் இதை மகாப்பிரளயம் என்பர். 

இந்த மகாபிரளயத்தை நடாத்துபவரே மகாசங்கார மூர்த்தியாகிய சிவன். அவனே மகாருத்திரன். உலகங்கள் யாவும் அவற்றின் மூலமாகிய மாயையிலே ஒடுங்க, மாயை சத்தியிலே ஒடுங்க, சத்தியும் சிவத்தில் ஒடுங்கும் காலம் இந்த மகாசங்காரகாலமாகும்.  

இறுதியாம் காலந் தன்னில் ஒருவனே, இருவரும் தம்
உறுதியில் நின்றார் என்னில் இறுதிதான் உண்டா காதாம்;
அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால், அவனால் இன்னும்
பெறுதும் நாம் ஆக்கம் நோக்கம் பேர் அதி கரணத் தாலே.

  • சிவஞானசித்தியார் சுபக்கம் 55ம் பாடல்

இந்த ஐந்து விதமான அண்டப்பேரழிவுகளை பஞ்சப் பிரளயம் என்று கூறுவர். இந்த ஐந்து வகை பிரளயங்களிலும் அழிவில்லாமல் நிலைத்திருப்பவன் நஞ்சைக் கண்டத்திலே கொண்ட நெற்றிக்கண்கடவுள் என்று இப்பாடல் கூறுகின்றது. 

பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி
நஞ்சு பொதிமிடற்றான் நயனத் தழல்விழியான்

    – பட்டினத்தார் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *