ஸ்ரீசக்கரம் சிவலிங்க வடிவமே

ஸ்ரீசக்கரம் சிவலிங்க வடிவமே

ஸைவானாமபி ஸாக்தானாம் சக்ராணாம் ச பரஸ்பரம்

அவிநாபாவ சம்பந்தாம் யோ ஜானதி ச சக்ரவித் ॥ 15॥
திரிகோண ரூபிணி சக்திர் பிந்து ரூப பர சிவ
அவிநாபாவ சம்பந்தாம் தஸ்மாத் விந்து த்ரிகோணயோ ॥ 16॥
ஏவம் விபாகமஞாத்வா ஸ்ரீசக்ரம் ய சமர்சயேத்
ந தத்பலம் அவாப்னோதி லலிதாம்பா ந துஸ்யதி ॥ 16॥

சைவமும் சாக்தமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் சங்கமிக்கும் இடம் ஸ்ரீசக்கர பூசை. சக்தி ஸ்ரீசக்கரத்தின் நடுவில் உள்ள திரிகோணம்; சிவன் அதன் மையத்தில் உள்ள புள்ளி. இவர்கள் இருவரும் இங்கு இணை பிரியாது விளங்குவர். இதை அறியாது ஸ்ரீசக்கரத்தைப் பூசிப்பவர்கள் தேவியின் பிரீதியையோ பூசையின் பயனையோ பெறுவதில்லை.
– ஸ்ரீலலிதா திரிசதி, உத்தர பீடிகா 15 – 17

இயந்திரம் என்பது பொதுவாக உலோகத் தகட்டிலே கேத்திரகணித முறைப்படி அச்சொட்டாக வரையப்பட்ட வரைபடம் ஆகும். இயந்திரமானது சுவரிலும், மரப்பலகையிலும், மண்ணிலும், விபூதியிலும், தானியத்திலும், ஆபரணத்திலும் கூட வரையப்படலாம். சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்புறமாக அருவ வழிபாடு நடைபெறும் இடத்தில் உள்ள சுவரின் உள்ளே சிதம்பரச் சக்கரம் என்னும் இயந்திரம் உள்ளதாகக் கூறுவர். திருவானைக்கா என்னும் தலத்திலே எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் வரைந்த குண்டலங்களை அணிவித்ததாகக் கூறுவர். மனோன்மணிச் சக்கரம், புவனேஸ்வரிச் சக்கரம் ஆகிய இயந்திரங்கள் ஈழத்துச் சைவ மரபில் தாபிக்கப்பட்ட அம்பாள் ஆலயங்களில் மூல விக்கிரகத்தின் அடியில் தாபிக்கப்பட்ட இயந்திரங்களாம். ஸ்ரீ சக்கரம் என்பது தற்காலத்தில் பிரபலமான அம்பாள் இயந்திரமாகும். இதன் முப்பரிமாணத் தோற்றமே கூம்பு வடிவான மஹாமேருச் சக்கரம்.
சக்தி பீடங்களில் ஒன்றாகிய காமாட்சி அம்பாளின் தலம் உள்ள காஞ்சிபுரம் நகரமே ஸ்ரீசக்கர வடிவில் ஆதியில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சங்க இலக்கியமும் ஸ்ரீ சக்கர வடிவின் தாமரை இதழ் வடிவில் காஞ்சி நகர மதில் சுவர் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது.
பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்……….
பல இதழ்களைக் கொண்ட தாமரை மலர் வடிவத்தில் காட்சியளிக்கின்ற, சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்ட நீண்ட மதில்களினால் சூழ்ப்பட்ட நகர்.. ..
– சங்க இலக்கியம், பெரும்பாணாற்றுப்படை

சங்கமம் என்றால் அசைவுள்ளது என்று பொருள், இங்கு சங்கமம் என்பது நடமாடும் சிவமாகிய மெய்யடியார்களைக் குறிக்கின்றது. .

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).