ஸ்ரீ பஞ்சாட்சர செபத்தாற் பயன் என்னை? – மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 06

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 06
#தூல_நடனம் ( Gross Dance ) & ,#ஞான_நடனம் ( Subtle Dance)

198. ஸ்ரீ பஞ்சாட்சர செபத்தாற் பயன் என்னை?
ஸ்ரீ பஞ்சாட்சரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவர்.

விளக்கக் குறிப்பு: 1.
சிவாய நம எனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமையது ஆக்கிச்
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே
– திருமந்திரம் 2718, 10ம் திருமுறை

விளக்கக் குறிப்பு: 2.
அஞ்செழுத்து அரன் உருவம் – #தூல_நடனம்
ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியிலே ‘ந’கரம் – கூடும்
’ம’கரம் உதரம், வளர்தோள் ’சி’கரம்,
பகருமுகம் ’வா’ முடி ‘ய’ப் பார்.

நடராஜர் திரு உருவமே பஞ்சாட்சர வடிவம்.
ந – திருவடி
ம – உதரம்
சி – தோள்கள்
வா – முகம்
ய – முடி
இதில் உள்ளது ஊன நடன தரிசனம்.
– மெய்கண்ட சாத்திரம் – உண்மை விளக்கம் 32

ந’வ்விரண்டு காலதாய் நவின்ற’மா’ வயிறதாய்
’சி’வ்விரண்டு தோளதாய்ச் சிறந்த ‘வ’வ்வு வாயதாய்
‘ய’வ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வையொத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே.

இதிலே சொல்லப்பட்டது பஞ்சாட்சரத்தில் ஊன நடனத்தின் இன்னொரு வகையான தரிசனம்.
ந – கால்கள் இரண்டு
ம – வயிறு
சி – தோள்கள்
வ – வாய்
ய – கண்கள்.
– சிவவாக்கியர் பாடல்

விளக்கக் குறிப்பு: 3.
அஞ்செழுத்து அரன் உருவம் – #ஞான_நடனம்
சேர்க்கும் துடி ‘சி’கரம், சிக்கன ‘வா’ வீசுகரம்,
ஆர்க்கும் ’ய’கரம் அபயகரம் – பார்க்கில் இறைக்(கு)
அங்கி ’ந’கரம் அடிக் கீழ் முயலகனார்
தங்கும் ’ம’கரம் அது தான்.

நடராஜர் திரு உருவமே பஞ்சாட்சர வடிவம்.
சி -கையில் உள்ள துடி என்னும் உடுக்கு
வா – வீசிய கரம்
ய – அபய கரம்
ந – கையில் தாங்கியுள்ள அக்கினி
ம -அடிக்கு கீழ் உள்ள முயலகன்
இதில் உள்ளது ஞான நடன தரிசனம்.
– மெய்கண்ட சாத்திரம் – உண்மை விளக்கம் 33

விளக்கக் குறிப்பு: 4.
#பஞ்சாட்சரத்தின்_பாவனையும்_பயனும்
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும்
அரன் உருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு),
அஞ்செழுத்தால் அங்க,கர நியாசம் பண்ணி,
ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்து அர்ச்சித்(து)
அஞ்செழுத்தால் குண்டலியின் அனலை ஓம்பி,
அணைவரிய கோதண்டம் அணைந்து,
அருளின் வழி நின்(று)
அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க,
மதி அருக்கன் அணை அரவம் போல் தோன்றும் ஆன்மாவில் அரனே.

சொற்பொருள்:
மதி அருக்கன் அணை அரவம் போல் –
கிரகண காலத்தில் சந்திரனில் தோன்றும் ராகு கேது போல….
– மெய்கண்ட சாத்திரம் – சிவஞானசித்தியார் 299

அஞ்செழுத்தால் உள்ளம் அரன்உடைமை கண்டு
அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் – அஞ்செழுத்தால் குண்டலியில் செய்து;
ஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.
– மெய்கண்ட சாத்திரம் – சிவஞானபோதம் சூத்திரம் 9,

உதாரண வெண்பா
அஞ்செழுத்துமே அம்மை அப்பர் தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றிருந்தே – அஞ்செழுத்தை
ஓதப் புக்குள்ள மதியுங் கெடில் உமைகோன்
கேதமற வந்துஅளிக்கும் கேள்.

சொற்பொருள்:
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்று –
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் பெற்று
உள்ள மதியுங் கெடில் –
நான் எனது என்ற தற்போத சிந்தனை கெட
கேதம் அற – பிறவி அற
– மெய்கண்ட சாத்திரம் – திருக்களிற்றுப்படியார் 26

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).